."ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Saturday, 26 September 2009

தியாகி திலீபன் அவர்களின் மறைவையொட்டி தலைவர் பிரபாவின் உரை

( தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்களின் மறைவையொட்டி அன்று தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் தமிழீழ மக்களுக்குக் கொடுக்கப்பட்ட தீர்க்கதரிசனமான உரை அன்றும் இன்றும் என்றும் எமது விடுதலைக்கு நாம் தான் ஒன்றிணைந்து போராட வேண்டுமென்பதை வலியுறுத்தி நிற்கிறது.)


எமது விடுதலை இயக்கம் எத்தனையோ அற்புதமான தியாகங்களைப் புரிந்திருக்கிறது; வீரகாவியங்களைப் படைத்திருக்கிறது; அர்ப்பணிப்புகளைச் செய்திருக்கிறது. இவை எல்லாம் எமது ஆயுதப் போராட்டவரலாற்றில் நாம் ஈட்டிய வீரசாதனைகள். ஆனால் எனது அன்பான தோழன் திலீபனின் தியாகமோ வித்தியாசமானது; வியக்கத்தக்கது. எமது போராட்ட வரலாற்றில் புதுமையானது. சாத்வீகப் போராட்டத்தில் தன்னைப் பலிகொடுத்து ஈடு இணையற்ற ஒரு மகத்தான தியாகத்தைத் திலீபன் புரிந்தான். அவனது மரணம் ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்ச்சி. தமிழீழப் போராட்ட வரலாற்றில் ஒரு புரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி. தமிழீழத் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிய நிகழ்ச்சி. பாரத நாட்டைத் தலைகுனிய வைத்த நிகழ்ச்சி. உலகத்தின் மனச்சாட்சியைச் சீண்டிவிட்ட நிகழ்ச்சி.


தான் நேசித்த மக்களுக்காக, தான் நேசித்த மண்ணுக்காக, ஒருவன் எத்தகைய உயர்ந்த - உன்னதமான தியாகத்தைச் செய்ய முடியுமோ அந்த அற்புதமான அர்ப்பணிப்பைத்தான் அவன் செய்திருக்கின்றான்.

ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன். ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம்.நான் திலீபனை ஆழமாக நேசித்தேன். உறுதி வாய்ந்த ஒரு இலட்சியப் போராளி என்ற ரீதியில் அவன் மீது அளவு கடந்த பாசம் எனக்குண்டு. அவன் துடித்துத் துடித்துச் செத்துக்கொண்டிருக்கும் பொழுதெல்லாம் என் ஆன்மா கலங்கும். ஆனால் நான் திலீபனை சாதாரண மனிதப் பிறவியாகப் பார்க்கவில்லை. தன்னை எரித்துக்கொண்டிருக்கும் ஒரு இலட்சிய நெருப்பாகவே நான் அவனைக் கண்டேன். அதில் நான் பெருமை கொண்டேன். இலட்சிய உறுதியின் உச்சக் கட்டமாக திலீபன் தன்னை அழித்துக் கொண்டான். அவன் உண்மையிற் சாகவில்லை. காலத்தால் சாகாத வரலாற்றுப் புருசனாக அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.திலீபனின் மரணம் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை தெரிவித்திருக்கிறது. இது அர்த்தமற்ற சாவு என இந்திய தூதர் கூறியிருக்கிறார். தமது உறுதி மொழிகளை நம்பியிருந்தால் திலீபன் உயிர் தப்பியிருப்பான் எனச் சொல்லியிருக்கிறார். ஆனால் உண்மையில் நடந்தது என்ன? நடந்து கொண்டிருப்பது என்ன? என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

எமது உரிமைகள் வழங்கப்படும், எமது மக்களுக்கும் மண்ணுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும், தமிழ் மக்கள் தமது பாரம்பரிய பூமியில் தம்மைத் தாமே ஆளும் வாய்ப்பு அளிக்கப்படும்- இப்படியெல்லாம் பாரத அரசு எமக்கு அளித்த வாக்குறுதிகளை நம்பி நாம் எமது ஆயுதங்களைக் கையளித்தோம். எமது மக்களினதும் மண்ணினதும் பாதுகாப்பை இந்தியாவுக்குப் பொறுப்பளித்தோம்.

இதனையடுத்து என்ன நடைபெற்றது என்பதெல்லாம் எனது மக்களாகிய உங்களுக்கு தெரியும்.தமிழ் அகதிகள் தமது சொந்தக் கிராமங்களுக்குச் செல்லமுடியாது முகாம்களுக்குள் முடங்கிக் கிடக்க சிங்களக் குடியேற்றங்கள் துரித கதியில் தமிழ் மண்ணைக் கபளீகரம் செய்தது.சிங்கள அரசின் போலீஸ் நிர்வாகம் தமிழ்ப் பகுதிகளில் விஸ்தரிக்கப்பட்டது.

அவசரம் அவசரமாக சிங்கள இனவாதம் தமிழ்ப் பகுதிகளில் ஊடுருவியது. சமாதான ஒப்பந்தம் என்கின்ற போர்வையில் சமாதானப் படையின் அனுசரணையுடன் சிங்கள அரச ஆதிக்கம் தமிழீழப் பகுதிகளில் நிலை கொள்ள முயன்றது.
இந்தப் பேராபத்தை உணர்ந்து கொண்ட திலீபன் இதற்கு ஒரு முற்றுப் புள்ளி காண திட சங்கற்பம் கொண்டான்.

சிங்கள அரசுடன் உரிமை கோரிப் போராடுவதில் அர்த்தமில்லை. பாரதம் தான் எமது இனப் பிரச்சனையில் தலையிட்டது. பாரதம் தான் எமது மக்களின் உரிமைக்கு உத்தரவாதமளித்தது.பாரதம் தான் எம்மிடம் ஆயுதங்களை வாங்கியது. பாரதம் தான் எமது ஆயுதப் போராட்டத்தை நிறுத்தி வைத்தது. ஆகவே பாரத அரசிடம் தான் நாம் உரிமை கோரிப் போராட வேண்டும். எனவே தான் பாரதத்துடன் தர்ம யுத்தம் ஒன்றைத் தொடுத்தான் திலீபன். அத்தோடு பாரத்ததின் ஆன்மீக மரபில் பெறப்பட்ட அஹிம்சை வடிவத்தை ஆயுதமாக எடுத்துக் கொண்டான்.
முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் விடுதலைப் புலி வீரர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கிறார்கள். வடக்கு கிழக்கு அடங்கிலுள்ள தமிழ் பேசும் மக்கள் அனைவரும் புலிகள் முன்னெடுக்கும் இந்த சாத்வீகப் போராட்டத்தில் அணி திரள வேண்டும் மக்களின் ஒன்று திரண்ட சக்தி மூலமே - மக்களின் ஒருமுகப்பட்ட எழுச்சி மூலமே - எமது உரிமைகளை வென்றெடுக்கலாம். திலீபனின் ஈடு இணையற்ற தியாகத்திற்கு நாம் செய்யும் பங்களிப்பு இது தான்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் HolykuralKural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis