."ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Wednesday, 25 November 2009

உளவியல் போர்

உளவியல் போர் - குழப்பத்தில் தமிழினம்

விடுதலைப் புலிகளின் தலைமை செயலகத்தால் தமிழீழ புலனாய்வுப் பிரிவின் சார்பில் நெருடலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கை. தளபதி ராம் மற்றும் நகுலனால் குழம்பிப் போயுள்ள புலம் பெயர் தமிழீழத்தை, தெளிவுபடுத்தும் அறிக்கையாகவே தமிழீழ புலனாய்வுப் பிரிவால் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.


எமது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய தமிழ்பேசும் மக்களே,

எமது இயக்கத்தின் முன்னாள் தளபதிகளாக இருந்த திரு. ராம் மற்றும் திரு. நகுலன் ஆகியோர்கள் பற்றி அண்மைக் காலமாகப் பல்வேறு வகையான கதைகள் உலாவி வருவதானால், காலத்தின் கட்டாயத் தேவையையும், அவசரத்தையும் கருத்தில் கொண்டு உண்மை நிலவரத்தை மக்களுக்கு விளக்க வேண்டியது எமது கடமை என விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையினராகிய நாங்கள் உணர்கின்றோம்.


இந்த விடயத்தில், ராம் மற்றும் நகுலன் ஆகியோரது முக்கியத்துவத்திற்கு அப்பால் அவர்கள் பற்றி வெளிவரும் கதைகளின் பின்னணியில் சிறிலங்கா அரசு எமது இனத்தின் மீது நடாத்த முயலும் பெரும் உளவியல் போரே முக்கியமானதாகும். அதனை நாம் விளங்கிக் கொள்வதே அவசியமானதாகின்றது.

அந்த உளவியல் போரின் ஆழ அகலத்தையும், அந்தப் போரின் விளைவாக சிறிலங்கா அரசு ஏற்படுத்த முனையும் தாக்கத்தையும் புரிந்து கொள்வதற்கு தளபதிகள் ராம் மற்றும் நகுலன் பற்றி வெளியாகும் கதைகளின் உண்மைப் பின்னணியை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

எமது இயக்கத்தின் முன்னாள் தளபதியான ராம், கடந்த மே மாதத்தின் பின்னர், தன்னுடனிருந்த போராளிகள் சிலருடன் அம்பாறை மாவட்டத்திலிருந்து வெளியேறி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மறைவிடங்களில் மாறிமாறி இருந்து வந்தார். இவருடன் எமது இயக்கத்தின் இன்னொரு முன்னாள் தளபதியான நகுலனும் கூட இருந்தார். ஆனால், காலப்போக்கில், வீரச்சாவுகள், காணாமல் போதல்கள், சிங்களப் படையினரிடம் சென்று சரணடைதல் போன்ற பல்வேறு காரணங்களினால் ராம் மற்றும் நகுலனுடன் இருந்த போராளிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து போனது.

இந்த நிலையில், தனியாகத் தாக்குப் பிடித்து நிற்க முடியாத நிலையில் – மட்டக்களப்பில் இரகசியச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த சில புலனாய்வுத் துறைப் போராளிகளுடன் தொடர்பினை ஏற்படுத்திய ராம், பின்பு அவர்களது ஏற்பாட்டில், அவர்களது உதவியுடன் மட்டக்களப்பு, வெல்லாவெளி பிரதேச மறைவிடமொன்றில் நகுலனுடன் தங்கியிருந்தார். இந்த நேரத்தில், மே மற்றும் யூன் மாதங்களில் வெல்லாவெளி பகுதியில் ராம் மற்றும் நகுலன் ஆகியோர் தங்கியிருப்பதாக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத் துறை செய்திகளை வெளியிட்டது. இந்த செய்திகளை தொடர்ந்து அடிக்கடி பல தடவைகள் இடங்களை மாற்ற வேண்டியிருந்தது. இதனால், இவர்கள் இருவரையும் பாதுகாத்து வைத்திருப்பதில் பல்வேறு சிக்கல்களை புலனாய்வுத் துறைப் போராளிகளும், இவர்களை வைத்திருந்த ஆதரவாளர்களும் எதிர்நோக்கினர்.

இத்தகைய சூழ்நிலையில், இன்னொரு திருப்பமாக, இறுதிக் கட்டப் போரின் போது வன்னியிலிருந்து வெளியேறி வந்து வவுனியா மறைவிடமொன்றில் தங்கியிருந்த புலனாய்வுத்துறையின் மட்டக்களப்பு மாவட்டப் பொறுப்பாளர் பிரபா, மட்டக்களப்பு நோக்கி நகரும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். இவருக்கு ராம், நகுலன் ஆகியோரைப் பாதுகாப்பாக வைத்திருந்த புலனாய்வுத் துறைப் போராளிகளுடன் ஏற்கெனவே தொடர்பு இருந்து வந்தது. அதன் காரணமாக அவர் ராம் மற்றும் நகுலனுடனும் தொடர்பில் இருந்தார். மட்டக்களப்பு நோக்கி நகரும் முயற்சியில் ஈடுபட்டிருந்த பிரபா, அற்குரிய உதவியைப் பெறுவதற்காக அப்போது திருகோணமலையில் இருப்பதாகக் காட்டிக்கொண்ட தவேந்திரன் என்ற புலனாய்வுத் துறைப் போராளியுடன் தொடர்பினை ஏற்படுத்தினார். இவற்றுக்கு அமைய தவேந்திரனின் உதவியுடன் தான் மட்டக்களப்புக்கு வந்து அவர்களைச் சந்திப்பதாக ராம் மற்றும் நகுலனிடம் பிரபா சொல்லியிருந்தார்.

தவேந்திரன், எற்கெனவே, முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான போராளிகளுடன் சிங்களப் படையினரிடம் சரணடைந்திருந்தவர். சிறிலங்கா தடுப்பு முகாம்களிலிருந்து வேறு வழிகளில் தப்பி வெளியேறிய போராளிகள் மூலமாக தவேந்திரன் சிறிலங்கா படையினருடன் சேர்ந்து இயங்குவதாக தகவல்கள் கசிந்திருந்தன. இருந்த போதும், அவர் எவ்வாறு சிறிலங்கா தடுப்பு முகாமிலிருந்து வெளியில் வந்தார் என்பது பற்றிய விபரங்கள் சரிவர ஆராய முடியாத சூழலில், தன்னையும், ஏனைய சில போராளிகளையும் மட்டக்களப்புக்கு நகர்த்தும் ஒழுங்குகளை மேற்கொள்வதற்காக பிரபா தவேந்திரனைத் தொடர்பு கொண்டிருந்தார்.

இந்த இடத்தில் தவேந்திரன் பற்றிய ஒரு பின்னணியைத் தெரிந்து கொள்ளுவது அவசியம். இவரது தந்தை ஒரு சிங்களவர். இவரது சகோதரர்கள் கூட முற்றாகச் சிங்களச் சூழலிலேயே வளர்ந்து, சிங்கள இனத்திற்குள்ளேயே திருமண பந்தங்களையும் ஏற்படுத்தியவர்கள். தவேந்திரன் கூட மிகச் சரளமாக, சிங்களவர் போன்றே சிங்கள மொழியைப் பேசக்கூடியவர். இந்தச் சாதகமான பின்னணிகள் காரணமாக, திருகோணமலையின் சிங்களக் கிராமங்களை அண்டிய பிரதேசங்களிலேயே முன்னர் அவருக்குப் பணிகளும் வழங்கப்பட்டிருந்தன.

இத்தகைய சிங்களப் பின்னணிகள் இவருக்கு இருந்ததாலும், இந்த சிங்களத் தொடர்புகள் மூலமாக முன்னர் அவரால் செய்யப்பட்டிருந்த வெற்றிகரமான வேலைகளின் பெறுபேறுகளை மனதில் வைத்துக்கொண்டுமே, அவை சாதகமாக அமையும் என்ற நம்பிக்கையுடன், தான் மட்டக்களப்புக்கு நகருவதற்கான உதவி தேடிய பிரபா, தவேந்திரனை நாடினார். செய்யப்பட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக , திருகோணமலையிலிருந்து வேறு சில சிங்களப் பொதுமக்களுடன் வாகனமொன்றில் வந்த தவேந்திரன், குறித்த நேரத்தில், குறித்த ஓரிடத்தில் வைத்து பிரபா குழுவினரை ஏற்றிச் சென்றார். வாகனத்திற்குள் ஏறிய பின்னர் தான், அதற்குள் இருந்தவர்கள் எல்லோரும் சிறிலங்கா படையப் புலனாய்வுத் துறையினர் எனபது பிரபாவுக்குத் தெரியவந்தது.

மட்டக்களப்பிலிருந்த ராம் மற்றும் நகுலனை இலக்கு வைத்து சிறிலங்கா புலனாய்வுத்துறையினர் வவுனியாவில் மேற்கொண்ட முதல் நடடிக்கை இதுவாகும்.

இதன் பின்னர், பிரபாவைக் கையாண்டு மட்டக்களப்பில் புலனாய்வுத்துறைப் போராளிகளின் பாதுகாப்பிலிருந்த தளபதிகளான ராம் மற்றும் நகுலன் ஆகியோருடன் சிறிலங்கா புலனாய்வுத்துறையினர் தொடர்புகளை ஏற்படுத்தினர். ஆனால், ராம் மற்றும் நகுலனிற்கோ அல்லது அவர்களைப் பாதுகாத்த எமது புலனாய்வுத்துறைப் போராளிகளுக்கோ பிரபா சிறிலங்கா படையினருடன் இருக்கும் விடயம் அப்போது தெரிந்திருக்கவில்லை. ராம் மற்றும் நகுலனை மிகப்பாதுகாப்பான வேறோர் இடத்திற்கு தான் நகர்த்தப் போவதாகத் தகவல் கொடுத்த பிரபா, குறித்த ஓரிடத்தில் வேறு சில ஆட்களுடன் “ஹயஸ்” வாகனம் ஒன்றில் வந்து அவர்களை ஏற்றிச் சென்றார். தவேந்திரனும் அவருடன் வந்திருந்தார். பிரபாவுடன் வந்தவர்கள் அனைவருமே சிறிலங்கா புலனாய்வுத்துறையினர் என ராம் மற்றும் நகுலனைப் பாதுகாத்திருந்த புலனாய்வுத்துறைப் போராளிகள் கருதிய போதும், அவர்கள் தவேந்திரனின் தொடர்புச் சிங்களவர்கள் என பிரபா நம்ப வைத்தார்.

இதன் பின்னர், எமது புலனாய்வுத் துறைப் போராளிகளுடன் எவ்வித தொடர்பும் இல்லாதிருந்த ராம் மற்றும் நகுலன் ஆகியோர் திருகோணமலைப் பகுதியில் பாதுகாப்பாக இருப்பதாக நம்பப்பட்டது. வெளிநாடுகளில் இருந்த தமிழ்ச் செயற்பாட்டாளர்களைத் தொடர்புகொண்ட ராம், தான் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாகவும், அதற்கு தனக்கு நிதி மற்றும் ஆயுதங்களை ஒழுங்கு செய்து தரும்படியும் கேட்டுக்கொண்டார். இதனை அவரது ஒரு வீரசெயலாகவும், பெரும் தியாகமாகவும் கருதி யாரும் கேள்விகுட்படுத்தாத வகையில், நன்கு திட்டமிட்டு சிறிலங்கா படையப் புலனாய்வுத் துறையினர் செயற்படுத்தினர்.

இந்த நேரத்தில், திரு. செல்வராசா பத்மநாதன் (கே.பி) அவர்கள் எமது இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை எடுத்தபோது, சிறிலங்கா அரசு அதனை ஒரு பெரும் அபாயமாக நோக்கியது. கே. பி அவர்களை விட்டு வைத்தால் அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் ஒழுங்குபடுத்தி விடுவார் என்று அஞ்சிய சிறிலங்கா அரசு ராம் அவர்களை ஒரு துருப்புச் சீட்டாகப் பாவித்து கே.பி அவர்களை இலக்கு வைத்தது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒரு பகுதியினர் கே. பி. அவர்களின் தலைமையை ஏற்காது முரண்பட்டு இருந்த நேரத்தில், கே.பி. அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திய ராம், அவருக்கு ஆதரவு தெரிவித்ததுடன், கே. பி. அவர்களது தலைமையை ஏற்கும்படி கடிதங்களையும் எழுதினார். அதேநேரத்தில், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குள் இருந்த குழப்பங்கள், மோதல்கள், பிரிவுகளைச் சாதுரியமாகப் பாவித்த சிறிலங்காவின் புலனாய்வுத்துறையினர் ராம் அவர்களுக்கும் கே.பி. அவர்களுக்கும் இடையில் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தி நுட்பமாகக் காய்களை நகர்த்தி இறுதியில் கே. பி. அவர்களையும் கடத்தினர்.

இங்கு ராம் மற்றும் நகுலன் ஆகியோரை சிறிலங்கா புலனாய்வுத்துறையினர் தனித்தனியாகக் கையாண்டனரா அல்லது ஒன்றாகச் சேர்த்து வைத்து நாடகங்களை அரங்கேற்றினரா என்பது இன்னும் புலப்படவில்லை. ஆனால், இவர்கள் இருவரையும் வைத்து வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் மத்தியில் முரண்பாடுகளையும் குழப்பங்களையும் வளர்த்து, இந்தச் செயற்பாட்டாளர்கள் பற்றிய தகவல்களையும் சேகரித்துள்ளனர் என்பது மட்டும் தெளிவாகப் புலனாகின்றது.

இந்த நிலையில், கடந்த செப்ரெம்பர் மாதத்திற்குப் பின்னர் ராம் அவர்கள் சிறிலங்காப் படையினரிடம் இருப்பது பற்றிய தகவல்கள் மெல்லக் கசியத் தொடங்கின. அதனால், அவரை வைத்து தாங்கள் நடாத்தி வந்த புலனாய்வுப் போர் இனிமேல் வெற்றியளிக்காது போய்விடுமோ என சிறிலங்கா புலனாய்வாளர்கள் விழி்ப்படைந்தனர். இந்த நிலையில், கடந்த நவம்பர் 5ஆம் திகதி மின்னேரியா சிறிலங்கா படை முகாமிலிருந்து ராம் அவர்கள் தப்பி ஓடி விட்டதாகவும், பின்னர் அவர் நவம்பர் 10ஆம் திகதி மீண்டும் கைது செய்யப்பட்டதாகவும் திடீரெனச் செய்திகள் வெளியாகின. அந்த நேரத்தில், தான் தப்பி ஓடி வந்துவிட்டதாக ராம் அவர்கள் வெளிநாட்டிலிருக்கும் எமது புலனாய்வுப் போராளி ஒருவருக்கு தொலைபேசி வழியாகச் சொன்ன கதைகள் நம்பும்படியானவையாக இருந்திருக்கவில்லை. உண்மையிலேயே ராம் அவர்கள் தப்பி ஓடியிருந்தாரா, அல்லது ராம் அவர்கள் தமது பிடியில் இருக்கும் தகவல் கசிந்த நிலையில் புதிய வியூகம் ஒன்றை வகுத்துச் செயற்படுத்தும் நோக்குடன் சிறிலங்கா படையப் புலனாய்வாளர்களே அவ்வாறான ஒரு கதையைப் பரப்பினார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ராம் மற்றும் நகுலன் ஆகியோரை வைத்து சிறிலங்காப் புலனாய்வுத் துறையினர் ஆடி வரும் இந்தப் புலனாய்வுப் போரின் உச்சக்கட்டம் தான், வரும் மாவீரர் நாளன்று ராம் நிகழ்த்தப்போகும் கொள்கை விளக்க உரை. இதில், சிறிலங்கா படையப் புலனாய்வாளர்கள் எடுத்துக்கொள்ளக் கூடிய முக்கிய தலைப்பு, தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களது வீரச்சாவு.

தேசியத் தலைவர் அவர்களது வீரச்சாவை ஏற்றுக்கொண்டு, அவருக்கு அகவணக்கம் செலுத்தத் துடிப்பவர்களை ஒரு புறத்திலும், மறுமுனையில், தேசியத் தலைவர் அவர்கள் உயிருடன் வாழ்கிறார் என்று வாதிடுபவர்களையும் அணி பிரித்து மோத வைக்க எதிரி புதிய வியூகங்களை வகுக்கின்றான். தேசியத் தலைவர் அவர்களது வீரச்சாவு பற்றிய விடயம் இங்கே ஒரு கருவி மட்டுமே. அதன் உண்மையான நோக்கம், வெளிநாட்டுத் தமிழ்ச் சமுதாயத்தை இன்னும் குழப்பி, அவர்களுக்கு இடையில் இருக்கும் முரண்பாட்டை வளர்த்து, அவர்களைப் பலவீனப்படுத்துவதாகும்.

இவ்வாறாக, சிறிலங்கா அரசாங்கம் எம் மீது நடாத்த முனையும் பெரும் உளவியல் போருக்குப் பலியாகிவிடாமல் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என நாம் அன்பாக வேண்டிக் கொள்கின்றோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கதிர்காமத்தம்பி அறிவழகன்,
பொறுப்பாளர்,
வெளியகப்பணிப்பிரிவு,
புலனாய்வுத்துறைநன்றி:
நெருடல்

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் HolykuralKural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis