.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Sunday 21 February 2010

"புலன்பெயர்ந்தவர்"களுக்கு சம்பந்தன் ஐயாவின் தீர்க்கமான பதில்கள்.

புலம்பெயர்ந்த "புலன்பெயர்ந்த"ஊடகங்கள் ஊடகதர்மங்களை மீறும் வன்முறைகளை நிறுத்துதல் வேண்டும்.



ஆர்ப்பரிக்கும் அலைகடல் நடுவே நம்பிக்கை தரும் மாலுமிகளில் ஒருவராக இரா.சம்பந்தன்

சம்பந்தர் அவர்களை ஆத்திரம், அகங்காரம், அகம்பாவத்தின் மொத்த உருவம் என்று எந்த அடிப்படையில் எடை போடுகின்றீர்கள் ? உங்களுடைய கருத்துக்கு ஆதரவாக இன்னொருவருடைய கருத்து நிலைப்பாடு அமையாவிட்டால் அவர் மீது அபாண்டமான பட்டத்தைச் சுமத்த வேண்டாம்.

அன்புத்தமிழ் உறவுகளே!

சம்பந்தர் அவர்களை ஆத்திரம், அகங்காரம், அகம்பாவத்தின் மொத்த உருவம் என்று எந்த அடிப்படையில் எடை போடுகின்றீர்கள் ? உங்களுடைய கருத்துக்கு ஆதரவாக இன்னொருவருடைய கருத்து நிலைப்பாடு அமையாவிட்டால் அவர் மீது அபாண்டமான பட்டத்தைச் சுமத்த வேண்டாம். வயது, அனுபவம் இரண்டின் முதிர்ச்சியும் அவரிடம் மிகுந்து காணப்படுவதாகவே அவரின் நடவடிக்கைகள் உணர்த்துகின்றன.

அதைத் தமிழீழ தளத்திலே மாத்திரமல்லாமல் புலத்திலே வாழுகின்ற மக்களும் ஒப்புக் கொள்ளுகின்றார்கள். நீங்கள் திட்டமிட்டுப் பத்து பேர் வரிசையில் வந்து நின்று கொண்டு சம்பந்தர் மீது வானலை ஒப்பாரி பாடுவதால் மட்டும், அதுதான் புலத்திலே வாழும் தமிழர்கள் அனைவரினதும் ஒட்டுமொத்தக் கருத்தாகும் என்று மனப்பால் குடிக்க வேண்டாம்.

சம்பந்தருக்கு ஆதரவான கருத்துக்களைக் கூற முற்பட்டவர்கள் (நேற்றைய வானொலி உரையாடலின் போது) நாகரீகமான முறையில், திட்டமிடப்பட்டு நிகழ்வினுள்ளே புகுந்து கொள்ளாதவாறு கண்காணிக்கப்பட்டார்கள். இதை உங்களால் மறுக்க முடியுமா? இதை ஊடக வன்முறை என்ற சொல்லாடலுக்குள் அடக்க முடியும்.

மக்கள் படும் துயர் கண்டு, அவர்தம் பரிதாப நிலை கண்டு தான் எங்களைப் போல் இங்கு வெளிநாட்டில் குந்தியிராது படுகொலைக் களத்திலே நின்று சம்பந்தன் மக்களுக்குப் பணியாற்றுகின்றார். அதற்காக நான் அவரை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராகவோ, வழிபாடு செலுத்தவோ முனைந்து நிற்கவில்லை. நாங்கள் எங்கிருந்து பேசுகின்றோம் என்பதை உணர்ந்து கொண்டு பொறுப்புணர்வோடு அவர் குறித்து யாரும் எதிர்வினையாற்றுவதில் எனக்கு எந்தச் சங்கடமும் கிடையாது. ஆனால் இங்கு நடைபெறுவது அதுவல்ல.

யாருக்கு ஆறுதல் சொல்வது? வெளிநாடு வாழ் தமிழ்மகன் ஒருவர் பொறுப்பற்று நடைமுறை யதார்த்தத்திற்கு அப்பாலான கற்பனைத் தளத்திலே காவடி ஆடும்போது, வானளாவிய அதிகாரத்தைத் தன் கையிலே வைத்திருப்பது போன்று தலைமைப் பதவியிலிருந்து ஒதுங்கிச் செல்லுங்கள் என்று கூறும் போது ஆளுமை படைத்த எந்தத் தலைமையும் எவ்வாறு பதிலிறுக்குமோ அவ்வாறே நேற்று சம்பந்தனும் அதனை எதிர்கொண்டார்.

அன்று வன்னியிலே தமிழ் தேசியத்தலைமை என்று எங்கள் எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட தலைமையால் வன்னிக்கு அழைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு ஒப்புக்கொடுக்கப்பட்ட தலைமைதான் சம்பந்தருக்கு வழங்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை. அதை யாரும் மறந்துவிடக் கூடாது.

பொதுவாகவே தலைவர்கள் உணர்ச்சிமயமானவர்கள். சிறுமை கண்டு ஆர்ப்பரிப்பவர்கள். கண்டிப்பானவர்கள். சிந்தாந்த எல்லைகளைத் தாண்டி இவ்வகையான பண்புகளே தலைவர்களை உருவாக்குகின்றது. புறநடைகளும் இல்லாமல் இல்லை. அத்தகைய பண்புகளை மக்கள் மீதே எரிந்துவிழும் என்று அட்டவணைப்படுத்திக் கொச்சைப்படுத்த வேண்டாம்.

இதற்காக நீங்கள் யாருமே சிரிக்க வேண்டியதில்லை. தாயகத் தமிழனைத் தாங்கி நிற்கும் பல தூண்களில் ஒன்றாகப் புலம்பெயர் தமிழனத்தைக் கருதவேண்டுமேயொழிய ஒட்டுமொத்தக் குத்தகையையும் புலம்பெயர் சமூகமாகிய நாங்கள் எடுத்துவிட முடியாது. அதனைச் சம்பந்தர் எந்தச் சந்தர்ப்பத்திலும் தூக்கி வீசி விடவில்லை. வெகு நிதானமாகவே அதனைச் சம்பந்தர் அணுகியிருந்தார். அதனால்தான் நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒட்டுமொத்தத் தமிழ் பேசும் சமூகமும் ஆதரிப்பது எமது மக்களின் நிரந்தர விடிவுக்கு முன் நிபந்தனையாக அமைகின்றது.

ஆர்ப்பரிக்கும் அலை கடல் நடுவே நம்பிக்கை தரும் மாலுமிகளில் ஒருவராகச் சம்மந்தன் காட்சியளிப்பது அதனால்தான். தவிக்கும் ஒரு இனத்திற்கு தலைமை தாங்க வேண்டியதனால்தான் ஒரு கருணாவாக அல்லாமல், இன்னொரு டக்ளஸ் போலல்லாது நெஞ்சை நிமிர்த்திக் கர்சிக்கின்றது அந்தக் கிழட்டுச் சிங்கம் ஈழத் தமிழ் மக்களுக்காக.

எடுப்பார் கைப்பிள்ளையாக எதிரியின் சொற்கேட்டுத் தன் இனத்தையே காட்டிக்கொடுக்கும் எண்ணம் அவருக்கு இருந்திருக்குமானால், அவரால் எதை, எதையோ எல்லாம் பெற்றிருக்க முடியும். உல்லாசத்தையும், சுகவாழ்வையும் அவர் இலகுவாகப் பெற்றிருக்கலாம்.

எதிரியின் தலைநகரத்திலே அலுவலகம் அமைத்து அவர்களுக்குத் தமிழினத்தின் கொடுமைகளை எடுத்துரைத்துப், புட்டுக்காட்டிப் பணிசெய்வது தமிழர்கள் இன்று ஆற்ற வேண்டிய வரலாற்றுக் கடமையல்லவா?

மாடு, மனை, தோட்டந்துரவு, மண்வெட்டி அலவாங்கு அனைத்தையும் பயன்படுத்திச் சமரசப்பட்டுவிடாமல் மேற்கொண்டும் தொடர்ச்சியாகத் தமிழ் மக்களுக்கான விடுதலைப் பயணம் தொடரும். சந்தேகம் வேண்டாம். டக்ளஸ் கூறுவதற்கும், சம்பந்தர் சொல்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அந்த வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளாமல் நாடகம் ஆடாதீர்கள். உங்கள் சட்டைப்பைகளில் துரோகிப் பட்டங்களை எவ்வளவுதான் நிறைத்து வைத்திருக்கின்றீகள்?

தமிழ், முஸ்லீம் உறவுகளை ஒற்றுமைப்படுத்த முனைகின்ற ஒரு தலைவனை சேறு பூசிக் கறைபடுத்தாதீர்கள். தாயகத்தை நேசிக்கும் இளந்தலைமுறை குறித்துக் கண்ணீர் விடாதீர்கள், ஏனெனில் அவர்களது கடுமையான பங்களிப்புகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. சம்பந்தர் அரசியலில் இருந்து ஓய்வெடுப்பது குறித்துத் தனி உதிரிகளாகப் பிரகடனம் செய்கிறீர்கள். இன்றைய இருள் சூழ்ந்த காலகட்டத்தில் யாரையும் யாரும் ஓய்வெடுக்குமாறு கூறுவது தமிழினத்துக்கு நாம் செய்யும் வரலாற்றுத் துரோகம். உங்களைக் கையெடுத்துக் கும்பிடுகின்றேன். எல்லோரையும் இணைத்துக் கொள்ளவும், அரவணைத்துச் செல்லக் கூடியதுமான அரசியல்வெளியைக் கட்டுவதற்கான பக்குவத்தை உங்கள் அகமனத்தில் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

முடிந்த முடிவுகளான தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற கொள்கைகளை ஆழ்மனத்திலே வைத்துக் கொண்டுதான் சம்பந்தரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மிதவாத அரசியல் தளத்திலே இராஜதந்திரக் காய்களை நகர்த்துகின்றார்கள்.எமது புலம்பெயர் உறவுகளில் சிலர் இதனைப் புரிந்துகொள்வதில் சிரமப்படுகின்றார்கள்.

இந்தியனுக்குப் பல்லக்குத் தூக்குவது குறித்துப் பிதற்றுபவர்களுக்கு இறுதியாக ஒன்றை மட்டும் கூறுகின்றேன். உங்கள் எல்லோருக்கும் ஆலோசனை வழங்குவதாகப் பறைசாற்றும் உங்களின் ஆஸ்தான ஊடகவியலாளர் 1970 இலிருந்து 1977 வரை தமிழினத்துக்கு இருண்ட ஆட்சியை வழங்கிய சிறிமாவோவின் காலடியிலே உருண்டு, பிரண்டு விசுவாசச் சேவகம் புரிந்த எடுபிடி. இதனைச் சவாலாக உங்களிடம் விடுக்கின்றேன். பதிலளிக்க முடியுமா?

அன்புடன் முரளி
nmuralitharan@hotmail.com

1 comment:

  1. Anonymous21/2/10 20:46

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அர‌சியலில் முதியவர் என்பதால் அவர் எடுக்கும் முடிவுகள் எல்லாம் சரியானவையாக இருக்க வேண்டும் என்பதல்ல. வயது போனதால் (அறளை பெயர்ந்ததால்) இளையவர்களின் கருத்துக்களை உதாசீனப்படுத்துவது நல்லதல்ல. இதுவரை எம்.பிக்களாக இருந்த எம்.கே.சிவாஜிலிங்கம், என்.ஸ்ரீ காந்தா, பத்மினி சிதம்பரநாதன், செல்வ ராஜா கஜேந்திரன், சிவநாதன் கிஷோர், கனகசபை, கனகரட்ணம், தங்கேஸ்வரி கதிரமன், சந்திரநேரு, ஜெயானந்தமூர்த்தி உட்பட குறைந்த பட்சம் 12 பேருக்கு இந்தத் தடவை வேட்பாளர் நியமனம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்று இவர் சொல்லுவதினால் கூட்டமைப்புக்குள்ளே பிரிவினை ஏற்படச் சந்தர்ப்பமுள்ளது. இதனைத் தான் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis