.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Friday 5 March 2010

தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் என்ன நடந்தது? உதயமான தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி விளக்கம்!

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகளும் இணைந்து உருவாக்கியுள்ள தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி என்ற புதிய கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியானது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகின்றது.

தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் மகாநாடு இன்று மாலை 5.30 மணியளவில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் யாழ்ப்பாண் அலுவலகத்தில் நடைபெற்றது. இம் மகாநாடு தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட தலைமை வேட்பாளர் சின்னத்துரை வரதராஐன் அவர்களது தலைமையில் நடைபெற்றது.



மகாநாட்டில் யாழ் மாவட்ட வேட்பாளர்களான 1.விஐயரட்ணம் ஜோன் மனோகரன் கென்னடி 3.கந்தசாமி திருலோகமூர்த்தி 4.சந்தனம் ஸ்ரீபன் 5.நடேசு துரைராஜா 6.விஸ்வலிங்கம் மணிவண்ணன் 7.பிரான்சிஸ் வின்சன் டீ போல் 8.செல்லத்துரை சுப்பிரமணியம் 9.பத்மினி சிதம்பரநாதன் 10.செல்வராசா கஜேந்திரன் 11.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி
28-02-2010
ஊடக அறிக்கை

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் என்ன நடந்தது

தமிழ் மக்கள் எதிர்கொண்ட பெரும் துயரமும் வலியும் வேதனையும் இன்னமும் ஆறவில்லை. இந்நிலையில் தமிழ் மக்கள், அரசியல் தலைமைகள் ஒற்றுமையாக இருந்து தமக்கு பலம் சேர்க்க வேண்டுமென விரும்புகின்றார்கள். இந்த விருப்பத்திற்கு மாறாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் நிலவி வந்த ஒற்றுமையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகளான இரா.சம்பந்தன், சுரேஸ் பிறேமச்சந்திரன், மாவை சேனாதிராஜா ஆகியோர் திட்டமிட்டு சிதைத்துள்ளனர்.

மே 2009 ல் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பேரழிவுக்குப் பின்னர் மேற்கூறிய மூவரை கொண்ட அணி தமது மறைமுக நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் எதேச்சாதிகாரமாக செயற்படும் போக்கை தீவிரப்படுத்தியது. இதன் உச்சக் கட்டமாக கூட்டமைப்பின் பெரும்பான்மையான உறுப்பினர்களினதும், மக்களினதும், செயற்பாட்டாளர்களினதும் பங்கு பற்றுதல் இல்லாது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அடிப்படைக் கொள்கைகளை கைவிட்டு ‘அவசரத் தீர்வுத்திட்டம்’ ஒன்றை தயாரித்து முடித்தனர். அடிப்படை கொள்கைகளில் இருந்து விலகிச் செல்லும் இவர்களின் செயற்பாடுகளே கூட்டமைப்பின் ஒற்றுமைக் குலைவுக்கு வழிவகுத்தது.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது ஏன்?

தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளை ஒன்றுபட்டு வெளிப்படுத்தக்கூடிய ஒரு அரசியல் தலைமை காலத்தின் கட்டாயம் என்ற அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2001ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

· தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம்.

· இலங்கைத் தீவின் வடக்கு-கிழக்கு பிராந்தியம் தமிழர்களின் தாயகம்

· தமிழ்த் தேசத்திற்கு சுயநிர்ணய உரிமை உண்டு.


என்ற கோட்பாடுகள் அங்கீகரிக்கபடல் வேண்டும். இம்மூன்று அடிப்படைகளும் தமிழ்மக்கள் ஒரு தனித்துவமான தேசம் என்பதையும், அதற்குத் தனித்துவமான இறைமை உண்டு என்பதையும் வலியுறுத்துகின்றன. இத்தகைய அங்கீகாரம் தருகின்ற அரசியல் அந்தஸ்த்தின் நிலை நின்றே தமிழர் தரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட முடியும்.

இலங்கைத் தீவில் இரு தேசங்கள் உள்ளன என்பதை ஏற்றுக் கொள்ளுகின்றபோதுதான், இவ்விரு தேசங்களும் இணைந்த ஒரு நாட்டில் நாம் சமாதான சகவாழ்வு வாழமுடியும். இந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலான அரசியற் பேச்சுவார்த்தை மூலம்தான் தமிழர்களின் அரசியற் பிரச்சினைக்கான தீர்வை நாம் எட்ட முடியும். இந்தப் பாதையிலிருந்து தமிழர்களின் அரசியற் தலைமைகள் ஒருபோதும் விலகிப்பயணிக்க முடியாது. இதனையே தமிழ்மக்கள் மீண்டும் மீண்டும வெளிப்படுத்தி வந்திருக்கின்றனர். 2001 ம் 2004 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல்களில் த.தே.கூ வினால் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு மக்களால் வழங்கப்பட்ட ஆணையும் இதுவே. இந்த நிலைப்பாடு தமிழர்களின் அரசியற் கொள்கைகளிலிருந்து பிரித்துப்பார்க்க முடியாதது; சமரசத்திற்கு அப்பாற்பட்டது.

தந்தை செல்வா காலத்தில் தோல்வியடைந்த தந்திரோபாயங்கள்

இத்தகைய தீர்மானம் ஒன்றிற்கு தமிழ் அரசியல் தலைமைகள் செல்லுவதற்கு முன்னரான முப்பது ஆண்டுகளில் இலங்கை அரசுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை அங்கீகரிக்கும் வகையில் இலங்கை அரசின் அரசியல் கட்டமைப்புக்களில் திருத்தங்களை கொண்டுவருவதன் மூலம் அதிகாரப்பகிர்வு என்ற பாதை ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பற்கே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தகைய முயற்சிகளாகவே பண்டா செல்வா உடன்படிக்கை, டட்லி செல்வா உடன்படிக்கை போன்ற அரசியல் தீர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதே போன்று 1970 ம் ஆண்டு தேர்தலில் அமோக வெற்றி பெற்ற தந்தை செல்வா தலைமையிலான இலங்கை தமிழரசுக் கட்சி தேர்தலின் பின்னர் இலங்கைக்கான புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையில் அதிர்காரப் பகிர்வு ஊடாக இலங்கை அரசை மாற்றி அமைத்து ஓர் சமஸ்டி ஆட்சி முறையை ஏற்படுத்த வேண்டும் என்ற பிரேரணையை முன்வைத்தது. அந்தப் பிரேரணை உடனடியாக நிராகரிக்கப்பட்டது மட்டுமல்லாமல் தமிழர் தரப்பு கோரிக்கைக்கு நேரெதிராக இலங்கை அரசை ஓர் ஒற்றையாட்சி அரசாக உத்தியோகபூர்வமாக அரசிலமைப்பினூடாக நிலை நாட்டப்பட்டது.

அத்துடன் அது வரை காலமும் தமிழ் முஸ்லீம் மக்களின் பாதுகாப்பிற்காக என சோல்பெரி அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்பட்டிருந்த 29 ம் சரத்து நீக்கப்பட்டது. பௌத்த மதம் அரசியல் யாப்பின் ஊடாக முதன்மையான மதம் என்ற அந்தஸ்த்து வழங்கப்பட்டு ‘சிங்கள மொழி மட்டுமே’ ஆட்சி மொழியாக அரசியல் அமைப்பின் மூலம் அமுல்படுத்தப்பட்டது. தமிழ் தலைமையினால் முன்வைக்கப்பட்ட அதிகாரப்பகிர்வுக்கான தீர்வு யோசனைகள் முழுமையாக நிராகரிக்கப்பட்டது மட்டுமன்றி சிங்கள அரசின் மேற் கூறிய செயற்பாடுகள் அதற்கு நேரெதிரான திசையில் அமைந்தன.

இத்தகைய அனுபவங்கள் காரணமாகவே தந்தை செல்வா அவர்கள் ஒரு தீர்க்கமான மாற்று முடிவுக்கு வரவேண்டியிருந்தது. இதே வகையில் இனப்பிரச்சினைக்கு பல்வேறு வழிமுறைகளுடாக தீர்வு காண முற்பட்ட அனைத்து தமிழ் தலைமைகளும் இலங்கை அரசியலமைப்பின் வரையறைக்கு உட்பட்ட அதிகாரப் பகிர்வு பாதையூடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது என்ற நிலைப்பாட்டுக்கு வந்தன.

இதன் விளைவாக தமிழ் மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான தேசம், இறைமை ஆகியவற்றினடிப்படையில் 1976 ல் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மேற்கொள்ளப்ப்ட்டது. அதற்கு 1977 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மக்களாணை வழங்கப்பட்டது. இந்த அடிப்படையிலேயே கடந்த முப்பது ஆண்டுகள் தமிழ் மக்களது உரிமைகளைப் பெறுவதற்கான பயணம் நடைபெற்றது.

தோல்வியடைந்த தீர்வுப் பாதைக்கு மீண்டும் திரும்ப முயலும் கூட்டமைப்பின் தலைமைகள்

இந்நிலையில் தந்தை செல்வா தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒருபோது உதவாது என்று 35 வருடங்களுக்கு முன்னர் கைவிட்ட வழிமுறைகளை மீண்டும் கையாள கூட்டமைப்பின் தலைமை முயல்கின்றது. 2009 மே மாதத்தின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைபபின் மூத்த தலைமைகளினால் இரகசியமான முறையில் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களை ஈடுபடுத்தாமல் தீர்வுத்திட்ட வரைபு ஒன்று தயாரிக்கப்பட்டது. இவ்வாறு தயாரிக்கப்பட்டுள்ள வரைபில் தமிழ் மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படை கோட்பாடுகள் கைவிடப்பட்டுள்ளன. இந்த அடிப்படைப் பிறழ்வு நீண்டகாலமாக உறங்கு நிலையில் இருந்த பொழுதும் வன்னிப் போர் இறுதிக்கட்டத்தை நெருங்கும் பொழுதே வெளிப்படையாக தலைதூக்கியது.

கொள்கைகளை காப்பதற்காக கூட்டமைப்பினுள் போராட்டம்

தீர்வுத்திட்ட வரைபு தயாரிக்கப்படுவது தொடர்பான தகவல் அறிந்த கூட்டமைப்பு உறுப்பினர்கள் பலர் கூட்டமைப்பின் மூத்த தலைமைகளுடன் தொடர்பு கொண்டு தீர்வுத்திட்ட வரைபானது தமிழ் மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான தேசம், தனித்துவமான இறைமை என்ற அடிப்படைகளிலேயே அமைய வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

குறித்த தீர்வுத்திட்ட வரைபு தயாரிக்கபட்டு கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாசித்துக் காட்டப்பட்டது. அந்த தீர்வுத்திட்ட வரைபானது தமிழ் தேசியத்தின் அடிப்படை கொள்கைகளை கைவிட்டு தயாரிக்கப்பட்டுள்ளது என உறுப்பினர்களில் பெரும்பாலானோர் சுட்டிகாட்டியிருந்தனர். அத்துடன் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான தேசம், அதன் தனித்துவமான இறைமை ஆகியன அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலேயே தீர்வுத்திட்டம் அமைய வேண்டும் என வலியுறுத்தினர்.

கூட்டமைப்பு தலைமையின் பிடிவாதம்

மேற்படி உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஏற்க முடியாது என கூட்டமைப்பின் மூத்த தலைமைகள் எதேச்சாதிகாரமாக மறுத்தனர். தாயகம் தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான தேசம், இறைமை என்ற அடிப்படைகளில் தீர்வுத்திட்டம் ஒன்றை முன்வைப்பதனை பிராந்திய சக்திகள் ஒருபோதும் விரும்பாது ஏற்றுக் கொள்ளாது என்றும் அந்த சக்திகளின் விருப்பப்படியே தாம் செயற்பட வேண்டும் என்றும் தாம் அதனையே கடைப்பிடித்து வருவதாகவும் அடித்துக் கூறிவிட்டனர். அத்துடன் அதிகாரப்பகிர்வு அடிப்படையில் தாம் தயாரித்துள்ள தீர்வுத்திட்டத்தினையே முன்வைப்பது என தாம் தீர்மானித்து விட்டதாகவும் உறுப்பினர்கள் யாருடைய ஆதரவு இல்லாவிட்டாலும் இந்த தீர்வுத்திட்ட வரைபை சமர்ப்பித்தே தீருவோம் என்றும் ஆணித்தரமாக கூறிவிட்டனர்.

நாம் பிராந்திய சக்திகளதோ அல்லது வேறு எந்தவொரு நாட்டினதுமோ நலன்களுக்கு எதிராக செயற்படும் நோக்கம் கொண்டவர்கள் அல்லர். எனினும் பிராந்திய சக்திகளினதும், ஏனைய நாடுகளினதும் விருப்பத்திற்கேற்ற வகையில் எமது மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளை கைவிட்டு தீர்வுத்திட்டம் ஒன்றினை முன்வைக்க வேண்டும் என்ற கூட்டமைப்பு தலைமைகளின் சரணாகதி அரசியல் நிலைப்பாட்டினையே நாம் நிராகரிக்கின்றோம். எமது மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தி அதற்கான அங்கீகாரத்தினை பெறும் வகையில் பிராந்திய வல்லரசுடனும் ஏனைய உலக நாடுகளுடனும் நல்லுறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்பதே எமது உறுதியான நிலைப்பாடாகும். இதற்கான சாத்தியங்கள் நிறையவே உண்டு.

ஏனெனில் இலங்கை அரசின் வெளிவிவகாரக் கொள்கை செயற்பாடுகள் காரணமாக இலங்கை அரசு மீது அழுத்தங்களை பிரயோகிக் வேண்டிய தேவை சர்வதேச சமூகத்திற்கு அதிகரித்து வருகின்றது. இந்த அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கையை சர்வதேசம் தனது கையில் எடுக்கும் சாத்தியப்பாடுகள் நிறையவே உண்டு. இவ்வாறு உருவாகக் கூடிய சூழலை எமக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டுமாயின் நாம் எமது கொள்கை நிலைப்பாட்டில் சமரசத்திற்கு அப்பாற்பட்டவர்களாக மிகவும் உறுதியாக நிற்பது அத்தியாவசியம்.

தமிழர்களது அபிலாசைகளுக்கு இடம் மறுக்கப்பட்டது

யதார்த்தம் இவ்வாறு இருக்க தமிழ் மக்களின் அடிப்படை கொள்கைகளுக்கு முரணாக மூத்த தலைமைகள் தீர்மானங்களை மேற்கொண்டன. அந்த தீர்மானங்களுடனும் செயற்பாடுகளுடனும் இணங்க மறுத்து தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளை எடுத்துக் கூறிவந்த கட்சிகளை சாராத கூட்டமைப்பு உறுப்பினர்கள் திட்டமிட்டு அகற்றப்பட்டனர்.

கூட்டமைப்பு தமிழ் மக்களின் அடிப்படை கொள்கைகளில் உறுதியாகவும் பிளவின்றி ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும் என்று தமிழ் காங்கிரஸ் கட்சி ஆழமாக விரும்பி அதை நிறைவேற்ற சாத்தியமான அனைத்து வழிகளிலும் முயற்சி செய்தது.

இதன் கடைசிக் கட்டமாக எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் கோட்பாடுகள் சம்பந்தப்பட்ட விடயங்களில் (உதாரணமாக தீர்வுத்திட்டம் பற்றிய முடிவு) முடிவெடுக்கும் பொழுது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளினதும் தரப்புக்களினதும் ஏகமனதான ஒப்புதல் பெறப்படும் என்ற எழுத்து மூலமான உத்தரவாத்தை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி கோரியது. இவற்றை கூட்டமைப்பின் தலைமை முற்றாக நிராகரித்த வேளையிலேயே அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி கூட்டமைப்பில் இருந்து வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

எனினும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியானது கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காது கூட்டமைப்பினுள் இருக்குமாறு அதன் மூத்த தலைமைகள் பிடிவாதம் பிடித்தன. ஆனால் கொள்கைகளை நேர்மையாகவும் உறுதியாகவும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கூட்டமைப்பிற்குள் இருந்து வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

கூட்டமைப்பின் ‘ஒற்றுமை’ நாடகம்

தமது தவறுகளை மூடி மறைப்பதற்காக ‘ஒற்றுமை’ என்ற உயரிய விழுமியத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தும் கூட்டமைப்பின் இந்தப் பிரகிருதிகளின் சுயரூபத்தினை தேர்தலுக்கு முன்னர் தமிழ் மக்களுக்கு தோலுரித்துக் காட்ட வேண்டிய வரலாற்றுக் கடமை எமக்குள்ளது. இதன்; மூலம் தமிழ் மக்கள் தமது தேசிய, அரசியல் அபிலாசைகளுக்காக உண்மையாகவும் உறுதியாகவும் குரல் கொடுக்க கூடியவர்களை தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதும் எமது முக்கிய பொறுப்பென நாம் உணர்கின்றோம்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உதயம்

இந்த நோக்கில் தமிழ் மக்களின் தயாகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான தேசம், இறைமை ஆகிய அடிப்படை கொள்கைகளில் உறுதிப்பாட்டுடன் கூட்டமைப்பின் உள்ளிருந்தும் வெளியிருந்தும் செயற்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொது அமைப்புக்களை சார்ந்த பிரதிநிதிகளும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும் ஒன்றிணைந்து தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளோம்.

கூட்டமைப்பின் ஒற்றுமையை குலைப்பது எமது நோக்கமல்ல. தமிழ் மக்களின் வாக்குப் பலத்தை சிதறடிப்பதும் எமது நோக்கம் அல்ல அNதுபோல தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை குறைப்பதும் எமது நோக்கம் அல்ல.

ஆனாலும் கூட்டமைப்பை தவறான வழிக்குச் இட்டுச் செல்லும் இந்த தலைமைகள் அகற்றப்படல் வேண்டும். இந்த தலைமைகள் யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடுகின்றனர். இந்த தவறான தலைமைகள் அகற்றப்பட வேணடுமென்றால் திருகோணமலை யாழ்ப்பாணம் ஆகிய தேர்தல் மாவட்டங்களில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு தோற்கடிக்கப்படல் வேண்டும்.

மீண்டும் ஒற்றுமை

இதன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தூய்மை செய்யப்பட்டு அது ஆரம்பிக்கப்பட்ட உண்மையான அர்த்தத்தில் மீண்டு வருவதற்கு வாய்ப்பு உண்டு.

அத்தகைய சூழ்நிலையில் அடிப்படை அரசியல் கொள்கைகளில் உறுதியாகவுள்ள அனைத்து தரப்புகளுடனும் ஒன்றிணைந்து செயலாற்ற தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி தயாராக உள்ளது.

தேர்லில் வெற்றி பெற்ற பின்னர் தாயகத்திலுள்ள தமிழ் மக்களுடனும், புலம்பெயர் தமிழ் மக்களுடனும் இணைந்து சர்வதேச சமூகத்துடன் செயலாற்றி தயாகம் தேசியம் சுயநிர்ணய உரிமை, தனித்துவமான தேசம், இறைமை ஆகிய கொள்கைகளுக்கான அங்கீகாரத்தை பெற்று அதனடிப்படையில் கௌரவமான பாதுகாப்பான அரசியல் தீர்வு அடைவதற்காக அற்பணிப்புடனும் நேர்மையுடனும் உழைக்கும் என சைக்கில் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி உறுதியளிக்கின்றது.

நன்றி

தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி

1 comment:

  1. Thayaparan7/3/10 16:17

    This is absolutely ridiculous what you have said.the people front for Tamil Nationalism betrayed our tamil people.still you don't want to come to the reality.first think practically.
    any way majority of our people support TNA.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis