."ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Tuesday, 22 June 2010

ஒன்றே குலம் ஒருவனே தேவன்

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி யில்லைநுஞ் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந் துய்ம்மினே.திருமூலர் இயற்றிய "திருமந்திரம்' அள்ளி அள்ளிப் பருகினாலும் ஆசை தீராத அமுதக் கடல்! திருமந்திரத்தின் சுவையை ஒருமுறை அறிந்துவிட்டால், ருசி கண்ட பூனைபோல மனம் திருமந்திரத்தையே சுற்றிச் சுற்றி வரும்.

"சூட்சுமம் திறந்த திருமந்திரம்' முதல் பாகத் தில் கரு எவ்வாறு உருவாகிறது (கர்ப்பக்கிரியை), மூச்சுப் பயிற்சி (பிராணாயாமம்) ஆகியவை குறித்து திருமந்திரம் கூறும் சில கருத்துகளை ஆராய்ந்து பார்த்தோம். அவற்றில் மறைந்து கிடக்கும் சூட்சும ரகசியங்களையும் அறிந்து கொண்டோம்.

சூட்சுமம் திறந்த திருமந்திரம் இரண்டாம் பாகத்தில், "மதம், கடவுள், பக்தி, ஞானம், குரு, முக்தி' போன்ற ஆன்மிகம் சார்ந்த துறைகளைக் குறித்து திருமூலர் கூறும் சில புரட்சிகரமான கருத்துகளை விரிவாகக் காண இருக்கிறோம்.

திருமந்திரத்தின் ஒவ்வொரு பாடலிலும் பல சூட்சுமங்கள் பொதிந்து கிடக்கின்றன. அனைத் துப் பாடல்களையும் ஆராய்ந்து எழுத ஒரு பிறவி போதாது! எனவேதான் சிறுசிறு தலைப்புகளை எடுத்துக் கொண்டு அதற்கேற்ப அங்கொன்றும் இங்கொன்றுமாக சில திருமந்திரப் பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்து எழுதுகிறேன்.

திருமந்திரம் ஒரு பக்தி இலக்கியம் மட்டுமன்று. இது வாழ்க்கையை விளக்கும் ஒரு வாழ்வியல் இலக்கியம். பொருள் நயம், உவமை நயம், சந்த நயம் என பல்வேறு இலக்கிய நயங்கள் நிறைந்த ஒரு மாபெரும் இலக்கியம். தமிழ் இலக்கியத்திற்குக் கிடைத்த பொக்கிஷம்!

"தேவர் குறளும் திருநான் மறை முடிவும்

மூவர் தமிழும் முனிமொழியும்- கோவை

திருவாசகமும் திருமூலர் சொல்லும்

ஒரு வாசகம் என்று உணர்'

என்பது நமது தமிழ்ப் பாட்டி ஔவையாரின் கூற்றாகும். திருக்குறள், நான்கு வேதங்கள், அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர் ஆகியோரது படைப்புகள், குறுமுனியாகிய அகத்தி யரின் நூல், திருஞானக் கோவை, திருவாசகம் ஆகிய அனைத் துமே திருமூலர் கூறும் ஒரு வாசகத்திற்கு இணையாகும் என்பதே இந்தப் பாடலின் பொருளாகும். திருமந்திரத்தின் சிறப் புக்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா?

இத்துணை சிறப்பு வாய்ந்த திருமந்திரம் பரவலாக அறியப்படாமல் இருக்கிறதே என்ற ஆதங்கம் தமிழ் அறிந்த ஆன்றோர்கள் மத்தியில் பல காலமாக உள்ளது. தேவாரமும் திருவாசகமும் புகழ் பெற்ற அளவிற்குத் திருமந்திரம் பாமர மக்களிடையே அறியப்படாமல் இருக்க காரணம் என்ன?

திருமூலர் நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்படுபவர். "சிவனே' தனது தலைவன் என வரித்துக் கொண்டவர். சிவநெறியில் மூழ்கி முத்தெடுத்தவர். சிவானுபவத்தை முழுமையாக அனுபவித்தவர். இவை அனைத்தும் அக்காலத்து ஆன்மிகவாதிகளுக்கு ஏற்புடையவையாக இருந்ததால்தான் திருமூலரும் நாயன்மார்களில் ஒருவராக வணங்கப்பட்டார்.

ஆனால் திருமூலர் அடிப்படையில் ஒரு புரட்சிக்காரராகவே இருந்திருக்கிறார். வழிவழியாக- பல நூற்றாண்டுகளாக சனா தனவாதிகளால் தூக்கிப் பிடிக்கப்பட்ட பல கருத்துகளைத் தவறென சுட்டிக்காட்டிய முதல் புரட்சியாளர் திருமூலரே.

திருமூலர் வாழ்ந்த காலம் ஏறக்குறைய கி.பி. 6-ஆம் நூற்றாண்டு என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் சைவம், வைணவம், பௌத்தம், சமணம் என பல மதங்கள் தமிழ் நாட்டில் வேரூன்றி இருந்தன. ஒவ்வொரு மதத்திற்குள்ளும் பல உட்பிரிவு கள் வேறு.

எந்த மதம் உயர்ந்தது? உன் கடவுள் பெரியவரா, என் கடவுள் பெரியவரா? என்ற சர்ச்சைகளும் அதன் விளைவாக சண்டைகளும் போர்களும் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில்தான் திருமூலர் "இறைவன் ஒருவனே' என்ற கருத்தை எடுத்து வைத்தார். அந்தக் கால மதத் தீவிரவாதிகளால் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே அவர்கள் திருமந்திரத்தை இருட்டடிப்பு செய்யத் துவங்கினர்.

மிக மிகத் தொன்மையான காலத்தில் (சங்க காலத் தில்) தமிழகத்தில் செய்யும் தொழிலின் அடிப்படையில் இன வேறுபாடுகள் இருந்திருக்கின்றன. ஆனால் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடுகள் இருந்ததில்லை.

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்'

என திருமூலருக்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் பாடி வைத்திருந்தாலும், திருவள்ளுவர் காலத்திலேயே தமிழகத்தில் சாதிப் பாகுபாடுகள் தோன்றி விட்டன.

திருமூலர் காலத்தில் உயர் சாதி, கீழ்சாதி, ஒதுக்கப் பட்டவன் என சாதி எனும் பேய் தமிழகத்தில் தன் கால்களை வலுவாக ஊன்றி விட்டது. இந்தக் கால கட்டத்தில்தான் திருமந்திரம் "ஒன்றே குலம்' போன்ற புரட்சிக் கருத்துகளை முழங்கியது.

திருமந்திரம் பல நூற்றாண்டுகளாக ஒதுக்கப்பட்ட- மறைக்கப்பட்ட ஒரு நூலாக இருந்ததற்கு இவையே அடிப்படையான காரணங்களாக இருந்திருக்கின்றன.

"ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை' என்பது தற்போது திருமந்திரத்தைப் பொறுத்தவரையில் உண்மையாகி வருகிறது. கடந்த சில நூற்றாண்டுகளாகவே சித்தர் இலக்கியம் பாமரர்களுக்கும் பிடித்ததோர் இலக்கியமாக மாறி வருகிறது.

சித்தர்களுக்கெல்லாம் மகா சித்தர் திருமூலரே! அவரது திருமந்திரத்தின சில பாடல்களையாவது ஆய்ந்து எழுத எனக்கு வாய்ப்பு கிடைத்தது எனது முற்பிறவிப் பலனே! இனி தொடருக்குள் செல்வோம்.

வாழ்க நலத்துடன்!

டாக்டர் ஜாண் பி. நாயகம்,
M.B.B.S., M.D., Ph.D., D.Sc., F.C.D.
புனித ஆன்டனி மருத்துவமனை,
222, டாக்டர் நடேசன் சாலை,
திருவல்லிக்கேணி, சென்னை-600 005.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் HolykuralKural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis