.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Saturday 10 April 2010

மக்கள் தீர்ப்பு: வீடு வெல்ல; சைக்கிள் கவிழ்ந்தது.

இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகிய எம்.பி.க்கள் யாழ்.மாவட்டத்தில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டனர். எனினும், மிகக் குறைந்தளவு வாக்குகளையே பெற்று படுதோல்வியடைந்தனர்.

இதேபோல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி.க்களான எம். கே.சிவாஜிலிங்கம் மற்றும் என்.ஸ்ரீகாந்தா ஆகியோர் இடதுசாரி முன்னணியின் குடைச் சின்னத்தில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிட்ட போதும் மிகக் குறைந்தளவு வாக்குகளையே பெற்று படுதோல்வியடைந்தனர்.

கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.க்களான சிவநாதன் கிஷோரும் ரி.கனகரட்ணமும் இம்முறை வன்னி மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட போதும் அவர்களும் படுதோல்வியடைந்தனர்.

இதேநேரம், கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான செல்வி கே.தங்கேஸ்வரி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட போதும் அவரும் தோல்வியடைந்தார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் யாழ்.மாவட்டத்தில் புதுமுகங்களாக ஈ.சரவணபவன், எஸ்.சிறிதரன் ஆகியோரும் மட்டக்களப்பில் பொன்.செல்வராசா, சீ.யோகேஸ்வரனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் ஆக கூடிய ஆசனங்களை பெற்ற மூன்றாவது கட்சியாக இலங்கை தமிழரசுக் கட்சி தெரிவாகியுள்ளது.
வடக்கு கிழக்கில் தமிழரசுக் கட்சி கடந்த முறை பாராளுமன்றத்தில் 22 ஆசனங்களைப் பெற்றிருந்தது. ஆனால் இப்போ 12 ஆசனங்களை பெற்றுள்ளது.

திருமலையில் முடிவு உத்தியோக பூர்வமாக கிடைக்காத போதும் அங்கும் ஒரு ஆசனம் கிடைக்கலாம் இதன்படி 13 ஆசனங்கள் கிடைக்கும்.

தேசியபட்டியல் மூலம் இரண்டு கிடைக்கும் சாத்தியம் உள்ளது.

அதேவேளை, மட்டக்களப்பில் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தோல்வியை தழுவியுள்ளார்.

அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் சக்தி தொலைக்காட்சியின் சிரேஷ்ட ஊடகவியலாளரும்,மின்னல் நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான ஜெ.ஸ்ரீரங்கா வெற்றி பெற்றுள்ளார். பிரஜைகள் முன்னணியின் பொதுச்செயலாளரான ஜெ.ஸ்ரீரங்கா ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டவராவார்.


தென்னிலங்கையில் மகிந்த அரசு பெற்ற வெற்றியும் வடகிழக்கில் தமிழ் மக்கள் வழங்கிய தீர்ப்பும். - இரா.துரைரத்தினம்

இலங்கையில் 1947ஆம் ஆண்டிற்கு பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் குறைந்தளவு வீதமான மக்கள் வாக்களித்தது இம்முறைதான் என தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். வடக்கு கிழக்கில் மட்டுமல்ல தென்னிலங்கையிலும் மக்களின் வாக்களிப்பு வீதம் பெருமளவு வீழ்ச்சியடைந்திருக்கிறது. ஆட்சிமாற்றம் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்புக்களுடன் வாக்களித்து வந்த தென்னிலங்கை மக்கள் இம்முறை ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பே மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையுடன்தான் வாக்களித்திருக்கிறார்கள். ஆனால் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சிக்கும் தென்னிலங்கையில் மூன்றாவது பெரிய கட்சி என வர்ணிக்கப்பட்ட ஜே.வி.பிக்கும் இவ்வாறான ஒரு மிகப்பெரிய தோல்வி கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. அதேபோன்று வடகிழக்கில் உள்ள உதிரி தமிழ் கட்சிகளுக்கும் ஆளும் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட தமிழர்களும் தோல்வியை சந்தித்திருக்கின்றன.

தென்னிலங்கை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும் செய்திகள் என்ன வடகிழக்கில் உள்ள தமிழர்கள் என்ன செய்தியை இத்தேர்தல் மூலம் சொல்லியிருக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

திருகோணமலை கண்டி மாவட்ட முடிவுகள் வெளிவராத நிலையில் இதுவரை வெளிவந்த முடிவுகளை வைத்தே இதை நாம் பார்க்கிறோம்.

தென்னிலங்கை தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்திகள்

வாக்களிப்பு வீதம் வீழ்ச்சி


ஐக்கிய தேசியக்கட்சிக்கான வாக்கு வங்கியின் சரிவு

இலங்கையின் மூன்றாவது பெரிய கட்சி என கருதப்பட்ட ஜே.வி.பியின் வீழ்ச்சி கடந்த 1947ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை நடைபெற்ற தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது இம்முறையே வாக்களிப்பு வீதம் பெருமளவு வீழ்ச்சியடைந்திருக்கிறது. இலங்கையின் தேர்தல் வரலாற்றில் வாக்களிப்பு வீதம் 70க்கு மேல் இருப்பது வழமையாகும். 1977ஆம் ஆண்டில் 87 வீதமும் 1994ஆம் ஆண்டில் 76 வீதமும் 2000ஆம் ஆண்டில் 75 வீதமும் 2001-2004ஆம் ஆண்டு தேர்தல்களில் 76வீதமும் வாக்களித்திருக்கிறார்கள். கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் 74வீதமான மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். ஆனால் இத்தேர்தலில் 50க்கும் 52வீதத்திற்கும் இடைப்பட்டவர்களே வாக்களித்திருக்கிறார்கள்.

தென்னிலங்கையில் வாக்களிப்பு வீதம் குறைவடைந்தமைக்கு பின்வரும் காரணங்கள் இருக்கலாம் என நான் நினைக்கிறேன்.

பெருமளவிலான ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்கள் இத்தேர்தலில் பங்குபற்றாது இருந்துள்ளனர். வழமையாகவே ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்படும் என்ற நம்பிக்கையில் வாக்களித்து வந்த மக்கள் இம்முறை அந்த நம்பிக்கை இழந்திருந்திருந்தனர். ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்கு வந்தால் கூட அந்த ஆட்சி ஒரு வருடத்திற்கு மேல் நிலைக்க முடியாது. இப்பொழுது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருக்கும் மகிந்த ராசபக்ச இந்த பாராளுமன்ற ஆட்சிக்காலத்தின் பின்னும் 2017ஆம் ஆண்டுவரை அதிகாரத்தில் இருப்பார். எனவே ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சந்திரிக்கா ஆட்சிக்காலத்தில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது போல ஒரு வருடத்தில் கலைக்கப்பட கூடிய நிலையற்ற ஆட்சியாக இருக்கும் என்ற காரணத்தினால் ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்கள் பலர் வாக்களிக்காமல் இருந்திருக்கலாம் என தென்னிலங்கை அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சராசரியாக ஒவ்வொரு தேர்தலிலும் 35இலட்சம் வாக்குகளைப்பெறும் ஐக்கிய தேசியக்கட்சி இம்முறை 23 இலட்சம் வாக்குகளையே பெற்றிருக்கிறது.

நாட்டில் தொடர்ச்சியாகவே இடம்பெற்று வந்த ஜனநாயகம் பின்பற்றப்படாமை மக்களின் தகவல் அறிந்து கொள்ளும் உரிமை மீறப்பட்டமை ஊடக அடக்குமுறை மக்களது வாழ்வாதாரம் உரிய முறையில் பேணப்படாமை போன்ற காரணங்களால் அவர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் ஆர்வம் குறைவடைந்திருக்கிறது என சுதந்திரத்திற்கான அரங்கு அமைப்பின் சிரேஷ்ட பிரதிநிதி சட்டத்தரணி நிமல்கா பெர்னாண்டோ தெரிவித்தார். இவரின் கூற்றுக்களையும் மறப்பதற்கு இல்லை.

தேர்தல்களில் எவர் வென்றாலும் இறுதியில் தோற்பது தாங்களே என்ற உணர்வு மக்கள் மத்தியில் இப்போது வலுவடைந்து வருவதைத்தான் இது சுட்டிக்காட்டுகிறது.

ஐக்கிய தேசியக்கட்சியின் வாக்கு வங்கியிலும் இம்முறை பெரும் சரிவு ஏற்பட்டிருக்கிறது. ஐக்கிய தேசியக்கட்சி சராசரியாக 35இலட்சம் வாக்கு வங்கியைக்கொண்ட கட்சியாகும். வாக்காளர் அதிகரிப்புக்கு ஏற்ப வாக்கு அதிகரித்திருக்க வேண்டும். 2000ஆம் ஆண்டில் 3477770 வாக்குகளையும் 2001ஆம் ஆண்டில் 4086026 வாக்குகளையும் 2004ஆம் ஆண்டில் 3504200 வாக்குகளையும் பெற்ற ஐக்கிய தேசியக்கட்சி இம்முறை 2336691 வாக்குகளையே பெற்றிருக்கிறது. ( கண்டி திருமலை மாவட்ட முடிவுகள் வரும் போது இத்தொகை 25இலட்சமாக அதிகரிக்கலாம்)

கடந்த காலங்களை ஒப்பிடும் போது இம்முறை ஐக்கிய தேசியக்கட்சி 10இலட்சம் வாக்குகளை இழந்திருக்கிறது. ஐக்கிய தேசியக்கட்சி தமிழர்கள் வாழும் கொழும்பு மத்தி கொழும்பு வடக்கு கொழும்பு கிழக்கு கொழும்பு மேற்கு. டெகிவளை பொரளை தொகுதிகளிலேயே வெற்றிபெற்றிருக்கிறது. தென்னிலங்கையில் உள்ள ஏனைய அனைத்து தொகுதிகளிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றிபெற்றிருக்கிறது.

கடந்த 5வருடத்தில் மகிந்த ராசபக்ச புரிந்;த சாதனைகளில் ஒன்றாக தென்னிலங்கையில் உள்ள பலமான கட்சிகளில் பலரை பிரித்து தன்பக்கம் சேர்த்து தனது பலத்தை அதிகரித்துக்கொண்டதை அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். சுமார் 35க்கு மேற்பட்ட ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை மகிந்த ராசபக்ச தனது பக்கம் இழுத்திருக்கிறார்.

போர் வெற்றியை காட்டி தென்னிலங்கையில் தனது மக்கள் ஆதரவை பெருக்கிக்கொண்டதுடன் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் தன்வசமாக்கி கொண்ட மகிந்த ராசபக்சவின் அரசியல் உறுதிப்பலம் காரணமாக இன்னும் 10 ஆண்டுகளுக்கு மகிந்த தரப்பின் ஆட்சியே நிலைக்கப்போகிறது என்ற நம்பிக்கை உருவாகியிருக்கிறது. இதுவும் ஐக்கிய தேசியக்கட்சியின் வாக்கு வங்கி வீழ்ச்சிக்கு காரணமாகும்.

இலங்கையின் மூன்றாவது பெரிய கட்சியாக அண்மைக்காலத்தில் கருப்பட்ட ஜே.வி.பியின் வீழ்ச்சியையும் இத்தேர்தல் முடிவுகளின் மூலம் காணமுடிகிறது. விமல் வீரவன்ச தலைமையிலான அணி ஜே.வி.பியிலிருந்து பிரிந்து அரசின் பக்கம் சேர்ந்து கொண்டபின் ஜே.வி.பி சரத் பொன்சேகா தரப்பையும் தன்னுடன் இணைத்துக்கொண்டு ஜனநாயக தேசிய முன்னணி என்ற பெயரில் சந்தித்து முதலாவது தேர்தல் இதுவாகும். அவர்கள் இத்தேர்தலில் 439601 வாக்குகளைப்பெற்று 5 ஆசனங்களை கைப்பற்றியிருக்கிறார்கள்.

இரண்டு அல்லது ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் அவர்களுக்கு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 6 அல்லது 7 உறுப்பினர்களுடன் அவர்கள் இம்முறை நாடாளுமன்றம் செல்லப்போகின்றனர். 1994ஆம் ஆண்டுகளின் பின் தென்னிலங்கையில் ஜே.வி.பியின் பலம் அதிகரித்து வந்த போதிலும் மகிந்த ராசபக்சவின் கைங்கரியம் காரணமாக அக்கட்சியின் ஆதரவுத்தளம் பெருமளவு வீழ்ச்சி கண்டிருக்கிறது. 2004ஆம் ஆண்டு 20க்கு மேற்பட்ட உறுப்பினர்களைக்கொண்டிருந்த ஜே.வி.பி இம்முறை நான்காவது கட்சியாக அமரப்போகிறது. வடகிழக்கில் போரை நடத்திய தளபதியான சரத் பொன்சேகாவை தங்களுடன் இணைந்து கொண்டு தென்னிலங்கையில் தங்களுக்கான ஆதரவுத்தளத்தை பெருக்கிக்கொள்ள நினைத்த ஜே.வி.பியின் அரசியல் வியூகம் தோல்விக்கண்டிருப்பதையே இத்தேர்தல் முடிவுகளும் சுட்டிக்காட்டுக்கின்றன.

இலங்கையின் வரலாற்றில் மிகக்குறைந்த கட்சிகள் அங்கம் வகிக்கும் சபையாகவும் அடுத்த பாராளுமன்றம் இருக்கப்போகிறது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஐக்கிய தேசியக்கட்சி தமிழரசுக்கட்சி ஜனநாயக தேசிய முன்னணி ஆகிய கட்சிகள் மட்டுமே அடுத்த பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கப்போகின்றன. இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின் படி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 117 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக்கட்சி 46 ஆசனங்களையும் தமிழரசுக்கட்சி 12 ஆசனங்களையும் பெற்றிருக்கிறது.

திருமலை கண்டி முடிவுகள் வெளியாகும் போது தேசியப்பட்டியல் ஆசனங்களுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 145 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக்கட்சி 55ஆசனங்களையும் தமிழரசுக்கட்சி 14 ஆசனங்களையும் ஜனநாயக தேசிய முன்னணி 7 ஆசனங்களையும் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கு இன்னும் 5க்கு மேற்பட்ட ஆசனங்கள் தேவைப்படலாம். இன்னும் சொற்ப நாடாளுமன்ற உறுப்பினர்களை தன்பக்கம் திருப்புகின்ற பட்சத்தில் மகிந்த ராசபக்ச மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று அரசியல் அமைப்பை தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்வதற்கும் மகிந்த ராசபக்ச பின்நிற்கப்போவதில்லை. எனவே அடுத்த நாடாளுமன்றம் மகிந்த ராசபக்சவின் எதிர்கால அரசியலுக்கு மேலும் சாதகமாகவே அமையலாம்.

இலங்கையின் அரசியல் அமைப்பே இனப்பிரச்சினையை தீர்வு விடயத்தில் முட்டுக்கட்டையாக இருப்பதாக சிறிலங்காவின் ஆட்சி பீடத்தில் இருக்கும் சந்திரிக்கா மற்றும் மகிந்த ராசபக்ச ஆகியோர் கூறிவந்திருக்கின்றனர். இம்முறை மகிந்த அரசுக்கு முழுமையாக மூன்றில் கிடைக்காவிட்டாலும் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு மகிந்த ராசபக்ச இதயசுத்தியுடன் செயற்படுவாரெனில் தமிழரசுக்கட்சி அரசியல் அமைப்பை மாற்றுவதற்கு ஆதரவை வழங்குவதற்கு பின்நிற்கப்போவதில்லை.

ஆனால் அந்த இதயசுத்தியை மகிந்த ராசபக்சவிடம் எதிர்பார்ப்பது பட்டறிவு கொண்ட தமிழர்களால் முடியாத காரியம். ஆனால் இத்தேர்தல் முடிவுகளின் மூலம் மகிந்த ராசபக்ச இனிமேல் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கா அரசியல் அமைப்பை மாற்றுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு இல்லை என சர்வதேசத்திற்கோ தமிழர்களுக்கோ சொல்ல முடியாது. தமிழரசுக்கட்சியின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மிக இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை விட சிங்கள மக்களின் வாக்கு வங்கியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என எண்ணும் மகிந்த ராசபக்ச தமிழரசுக்கட்சியின் ஆதரவைப்பெற்று அரசியல் அமைப்பை மாற்றி இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைப்பார் என எதிர்பார்க்க முடியாது

மகிந்த ராசபக்சவுக்கு சாதகமாக தென்னிலங்கை அரசியல் களம் அமைந்திருக்கின்ற அதேவேளை அதன் மறுமுனையில் இருக்கும் தமிழ் மக்கள் இந்த தேர்தல் மூலம் என்ன தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள் என்பதை பார்ப்பதும் அவசியமாகும்.

இத்தேர்தலின் மூலம் வடகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் தென்னிலங்கை அரசியல் தலைமைகளுக்கு மட்டுமல்ல சர்வதேச சமூகத்திற்கும் மேற்குலக நாடுகளில் உள்ள தமது தமிழ் உறவுகளுக்கும் மிகப்பெரிய செய்தி ஒன்றையும் சொல்லியிருக்கிறார்கள். அது பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம். ( தொடரும்)

R.Thurairatnam
thurair@hotmail.com

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis