.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Monday 10 May 2010

யாரடா துரோகி? யாரடா கோழை?

யாரடா துரோகி? யாரடா கோழை? என் மனச்சாட்சியை நானே கேட்கிறேன்.

நானே துரோகி! நானே கோழை!

சூர்யா

மனமே! இன்னும் எத்தனை நாளுக்கு உன் சகோதரனைத் துரோகியெனத் நடுத்தெருவில் கட்டிப்போட்டு நாயைவிடக் கேவலமாய்க் கொன்று போடுவாய். கேவலம்; தோட்டத்தில் கடும் வெய்யிலில் தாயவள் வேலை செய்து வீட்டுக்கு திரும்பும் போது கொடிய இராணுவம் தம்முற்றத்தை சுத்தம் செய்யெனக் கட்டளையிட்டான். ஆதலால், அவளும் துரோகியானாள். நடுத்தெருவில் கேட்பார் யாருமின்றி கோரத்தனமாக சுட்டுக் கொல்லப்பட்டாள். கேட்டியா ஏன்? எதற்கு என்று?! கேட்கிறேன் என் மனச்சாட்சியை. வெட்கித் தலை குனிகிறேன் என் தவறை எண்ணி. அந்தத் தாயவளைச் சுட்டவனோ பின்னாளில் எதிரியுடன் சேர்ந்து எம் சகோதரரையும் அழித்தான்; மங்கையரை எதிரியை விட மோசமாக மானபங்கப் படுத்தினான். அதையறிந்து செய்வதறியாது திகைத்தோம்.

யாரடா துரோகி? யாரடா கோழை?

மனமே! நானே துரோகி. நானே கோழை. ஏனெனில், அந்தத் தாய் வீழும்போது நான் அன்று அழவில்லை; வேடிக்கை பார்த்தேன். குறைந்தபட்சம் இரக்கப்படக் கூடவில்லை. துரோகி செத்தாள் என நிறைவடைந்தேன். 20 வருடங்களுக்கு மேல் ஓடிவிட்டது. மீட்டுப் பார்க்கிறேன். அந்த முகமறியாத தாய் துரோகியா?! சுட்டவன் துரோகியா?! சுடக் கட்டளையிட்டவன் துரோகியா?! யாரும் துரோகியல்ல. நானே துரோகி. அந்தத் தாய் துடித்து மரணிக்கும் போது நானும் வேடிக்கை பார்த்த குற்றத்தால். 60 வயதைத் தொட்ட உயிரொன்று பலர் கூடியிருந்து வேடிக்கை பார்க்க, அனாதையாக துடித்து மரணித்தது. அந்தக் கொடுமைகளைத் தட்டிக்கேட்காத எம்மினம் இன்று உலகமே வேடிக்கை பார்க்க மரணிக்கின்றது. மனமே! அடுத்தவரைக் குற்றம் சொல்லி ஏது பலன்?! யாரைக் குற்றம் சொல்ல முடியும்?! யாரடா துரோகி? யாரடா கோழை? என் மனச்சாட்சியை நானே கேட்கிறேன். அதே பதில் நானே துரோகி! நானே கோழை!

இந்தத் தாய்போல் எத்தனை தாய்மார்? தந்தையர்? சகோதரர்? கல்விமான்கள்? கனவான்கள்? தலைவர்கள்? போராளிகள்? முகமறியா இன்னும் பலர்? எல்லா ஆயுதம் தாங்கிய அமைப்புக்களும் குற்றவாளிகளே. அவர்கள் மட்டுமா குற்றவாளிகள்?! இல்லவேயில்லை....

யாரடா துரோகி? யாரடா கோழை? மீண்டும் என் மனச்சாட்சியை நானே கேட்கிறேன். நானே துரோகி! நானே கோழை! அடுத்தவன் அல்ல. மனமே! இனியும் இந்தத் தவறுகளை விடமாட்டேனென உறுதிகொள்.

“தீதும் நன்றும் பிறர்தர வாராது” என்ற ஒளவையின் சத்தியவாக்கு எவ்வளவு உண்மையானது. மனமே! உனக்கு நடக்கும் நன்மையும் தீமையும் நீ உருவாக்கிக் கொண்டதேயன்றி, யாரும் தந்ததல்ல. கூண்டில் அடைக்கப்பட்டுள்ள 12,000 வீரர்களுக்கும் திறந்தவெளிக் கூண்டில் அடைக்கப்பட்ட மக்களுக்கும் உன் சுயநலத்தை விட்டு வெளிவந்து, உண்மையான யதாரத்தமான விமோசனம் கிடைக்க உறுதிகொள். போனவன் வருவான் என்ற கனவில் வாழ்வதை விடு. வீழ்ந்தவரை மதித்து, வணங்கி நில். இனியும் வன்முறை எம்மை வாழவிடாது. அன்பும், பண்பும், சாதி மத பேதங்களுமற்ற சமூகமே உண்மையான விடுதலையடையும். மனமே! இதுவே உனக்கு உபதேசமே.

வெற்று வீரம் பேசும் கயமைத் தன்மை இனியும் வேண்டாம். சொந்தங்களைக் கொன்று வீரத்தனம் காட்டும் மடமைத்தனம் இனியும் வேண்டாம். ஊரைப் பகைத்து, அயலவனைக் கொன்று வீரம் பேசி, எம் வீட்டில் சாவிழும் போது யாருந்துனைக்கு வரவில்லையேயென அலறும் துயரம் இனியும் வேண்டாம். பண்பையிழந்து, அன்பையிழந்து வேற்றுமையையும், பகைமையும் போதிக்கும் தலைமைகள் இனியும் வேண்டாம். புதிய சனநாயகப் பண்புகள், சகிப்புத்தன்மை, நற்பண்புகள் கொண்ட தலைமையை உருவாக்க உறுதிகொள்வோம.

மனமே! இதுவே நீ இன்று ஆறுதலடைய நான் உனக்குச் செய்யும் உபதேசமே.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis