.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Sunday, 16 May 2010

தமிழுக்காகத் தூக்கம் தொலைத்த கண்மணி

தமிழுக்காக தூக்கம் தொலைத்த கண்மணி கலைஞர்

கேட்கிறவன் கேனயனென்றால்.....

செம்மொழி மாநாடு-கலைஞர் கேட்பாரா? -மீனகம் இளமாறன்

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு பாடல் குறுந்தகடு வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று முடிந்தது. இந்த குறுந்தகடில் வெளியாகி உள்ள பாடலை தமிழக முதல்வர் இயற்றிட, திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். விழாவில் பேசிய முதல்வர், 70 ஆண்டுகளாக தாம் தமிழ் உணர்வோடு ஒன்றி இருப்பதாக கூறியதோடு, இந்த பாடலை இசையமைக்க ஏ.ஆர்.ரகுமானை ஒப்புக் கொள்ள செய்யும் பொறுப்பை தமது மகள் கனிமொழிக்கும், பேரன்கள் கலாநிதி, தயாநிதிக்கும் வழங்கியிருக்கிறார். அவர்களும் இந்த மாபெரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு அதை செவ்வனே முடித்திருக்கிறார்கள்.

இந்த பாடல் ஒலிப்பதிவு என்பது மிகச் சாதாரண ஒன்றல்ல. இந்த பாடல் ஒலிபரப்பப்பட்டவுடன் தமிழ்நாட்டில் வேறெந்த மொழியும் இனிமேல் ஆளுமை செய்யாது. ஏ.ஆர்.ரகுமான் எனும் ஆற்றல்வாய்ந்த இசையமைப்பாளரின் மூளை நரம்புகளில் துடித்து வந்த இந்த இசை, தமிழர்களின் வாழ்வை மாற்றி அமைக்கப் போகிறது. ஆகவே இந்த மாபெரும் பொறுப்பை நிகழ்த்துவதற்காக தமிழக முதல்வர் தமது ரத்த உறவுகளை மன்றாடி ரகுமானை ஒப்புக்கொள்ள செய்திருக்கிறார். இதற்கு ரகுமானுக்கு எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டது என்பது குறித்து தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை. ஒருவேளை ரகுமான் ஒரு தூய தமிழர் என்ற காரணத்தினால் தமிழின் மீது கொண்ட பற்றால், இலவசமாகக்கூட இப்பாடலுக்கு இசையமைத்திருக்கலாம்.

முதல்வரின் வரிகளை குழைத்து ஆக்கிய அந்த பாடல்கள், கலைஞரை உறங்கவிடாமல் தடுத்திருக்கிறது. இப்படி அவர் பல்வேறு தருணங்களில் உறங்காமல் தவித்திருக்கிறார். இதையெல்லாம் தாண்டி, அந்த அரங்கிலே கலைஞர் ஆற்றிய உரையின் ஒரு அம்சம் நம்மை சிந்திக்க செய்கிறது. ரகுமானுக்கு அளிக்கப்பட்ட ஆஸ்கர் விருதை பாராட்ட அவர் மருத்துவமனையில் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த நிலையிலும்கூட, அதை உடனடியாக அவருக்கு வாழ்த்து செய்தி அனுப்பியதின் மூலமும், ரகுமானுக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததின் மூலமும் அவருக்கு செய்த அறுவை சிகிச்சையின் வலிகூட அற்றுப்போய் விட்டதாம். அடடா! என்று நாம் வாய்திறந்து பார்க்க வேண்டிய ஒரு நிலையை அவர் உருவாக்கி இருக்கிறார்.

அப்படி முதல்வர் அறுவை சிகிச்சை செய்துக் கொண்டிருந்த அந்த காலத்தில்தான், தமிழீழ மக்கள்மீது மிகவும் அநீதியான முறையில், அக்கிரமம் நிறைந்த முறையில் தொடர்ந்து குண்டுகளை வீசி, இன அழிப்பு பணியை சிங்கள பாசிச ராசபக்சே அரசு, சோனியா, மன்மோகன்சிங் இந்திய அரசோடு கைகோர்த்து செய்து கொண்டிருந்தது. 70 ஆண்டுகளாக தமிழைத்தவிர வேறொன்றையும் உச்சரிக்காத முதல்வர், ஒரு இனத்தின் மீது தொடுக்கப்பட்ட அடக்குமுறையை, இன அழிப்பின் அடையாளத்தை துடைத்தெறிய என்ன செய்தார் என்ற கேள்வி அந்த நேரத்தில் தமிழகம் முழுக்க பரவலாக விமர்சனத்திற்குள்ளானது. ஆனால் ஏ.ஆர்.ரகுமான் இசையில் முதல்வருக்கு முதுகுவலி தீர்ந்திருக்கிறது.

அதற்கு நன்றிகடனாகத்தான் தமது பாடல் வரிகளுக்கு ரகுமானை இசை அமைக்க வைத்து, மேடை ஏற்றி, புகழ்ந்திருக்கிறாரோ? என்ற சந்தேகம் தமிழ் உணர்வு கொண்ட, தமிழ் மீது அக்கறை கொண்டவர்களுக்கு ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். முதல்வர் நடத்தும் செம்மொழி மாநாடு என்பது தமிழ் மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளின் வெளிப்பாடாக அமைய வேண்டும். ஆனால், என்ன நிகழ்கிறது? தமிழீழ மக்கள் இந்த நிமிடம்வரை தமது துயர் நிறைந்த வாழ்விலிருந்து விடுபட முடியாமல் வதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

புலிகள் என்று சந்தேகப்பட்ட பனிரெண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு, அவர்கள் நிலை என்னதென்று தெரியாத கேள்விக்குறியாக இருந்து கொண்டிருக்கிறது. தமிழ், தமிழ் என்று கூறிக்கொண்டே தமிழினத்தின் அடையாளத்தை அழித்தொழிக்கும் காங்கிரசின் கரங்களை இறுக்க பற்றிக் கொண்டு, தமது உறவுகளின் வாழ்வை உயர்த்திக் கொள்வதைத்தவிர, தமிழ்நாட்டிற்கு கலைஞர் செய்த பணி என்னதென்று இதுவரை புரியவில்லை. இன்று தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் கலைஞரின் குடும்பம் இல்லாத எந்த துறையும் இல்லை. அது ஊடகங்களானாலும், உறைவிடங்களானாலும், சாலைகளானாலும், சட்டங்களானாலும் கலைஞரின் குடும்ப வாரிசுகள் தான் கோலோச்சுகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இந்நிலையில், தமிழீழ மக்களின் வாழ்வு கேள்விக்குறியாக இருக்கும் தருணத்தில் இந்த செம்மொழி மாநாடு தேவையா? என்று பல்வேறு தமிழ் வல்லுனர்கள், அறிஞர்கள், கவிஞர்கள், பேரறிவாளர்கள் எல்லாம் கேட்டிருக்கிறார்கள். 70 ஆண்டுகளாக தமிழை உச்சரித்துக் கொண்டிருந்த தமிழக முதல்வர், தமது கடந்தகால வாழ்வில் தமிழுக்கு எவ்வாறெல்லாம் தொண்டாற்றி இருக்கிறார் என்பதை நினைத்துப் பார்த்தால் நமக்கே வியப்பு மேலிடும்.

1949ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டு, அதன் வளர்ச்சியாக 1967ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் ஆட்சியை கழகம் கைப்பற்றிய பின்னர், தொடர்ந்து 43 ஆண்டுகளாக இரு கழகங்களும் மாறி மாறி ஆட்சியில் இருக்கிறது. இதில் இடைப்பட்ட காலத்தில் ஜானகி அம்மையார், பன்னீர் செல்வம் போன்றோர் சில காலங்கள் முதல்வர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களை தவிர்த்து, எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் அதிக நாட்களாக முதல்வர் பதவியில் தம்மை அமர்த்திக் கொண்டிருக்கிறார்கள். அண்ணா அவர்கள் மறைவிற்கு பின், முதல்வராக வந்த கலைஞர் ஆட்சியில்தான் தமிழ்நாட்டில் ஆங்கில பள்ளிகள் அணி அணியாக உருவாகத் தொடங்கியது. அதிலிருந்து நிகழ்ந்தேறிய தமிழ் சிதைவு, இன்றுவரை நின்றபாடில்லை.

அது, மேலும் மேலும் தமிழ் மொழியை அழித்து, அதன்மீது ஆங்கில ஆணியை அறையும் போக்குத்தான் நீடித்துக் கொண்டிருக்கிறது. தமிழ் மொழி, ஆங்கில சிலுவையின்மீது வைத்து அறையப்பட்டு பல காலமாகிவிட்டது. அதை தொடங்கி வைத்த பெருமையை 70 ஆண்டு காலம் தமிழ் பேசும் கலைஞர் அவர்கள்தான் தக்க வைத்துக் கொண்டார்.

70 ஆண்டு கால தமிழ் பற்றாளர் கலைஞர், தமிழீழ மக்களின் போராட்ட களத்தில் எவ்வாறெல்லாம் பங்காற்றினார் என்பதை எம்மைவிட மக்கள் நன்கறிவர். அதைப்பற்றிய விமர்சனங்களும் பல உண்டு. ஆனால், தமிழ் பற்றாளரான கலைஞர், ஈழத்தமிழ் பிரச்சனையில் எடுத்த நடவடிக்கைகள் இன்று நினைத்தாலும் வருத்தம் தருவதாகத்தான் இருக்கிறது. தமிழீழத்தின் போராட்டம் வீச்சடைந்து கொண்டிருந்த காலத்தில், அதன் பின்னர் அதை அடக்குவதற்காக ராசபக்சே அரசு தமது அடக்குமுறைக்கு துணையாக இந்தியாவை அழைத்துக் கொண்ட காலத்தில், அதாவது 2006ஆம் ஆண்டில் தமிழீழ மக்களின் இன்னல்களை தமது அண்டை நாடான இந்தியாவிடம் சொல்லி, அதற்கான தீர்வை பெறலாம் என்ற காரணத்திற்காக தமிழீழ நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவின் பிரதமரை சந்திக்க, தமிழக முதல்வரின் மூலமாக எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்தது.

இதன் பின்னர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பிரதமரிடம் இதைப்பற்றி முறையிட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் சந்திப்பதற்கான நாளை குறித்து கொடுத்தார். ஆனால் இதைக்கண்ட முதல்வர், இது எப்படி சரியாகும்? நாம் காங்கிரசோடு கைகோர்த்து இருக்கும்போது, இவர் எப்படி நம்முடைய உத்தரவு இல்லாமல் இலங்கை நாடாளுமன்ற தமிழ் உறுப்பினர்களை சந்திக்கலாம் என்று சிந்தித்ததின் விளைவு, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமரை சந்திக்காமலேயே திரும்பிப் போக வைத்தது.

இது, அக்காலக்கட்டத்தில் முதல்வர் மீது கடும் விமர்சனங்களை உலகநாடெங்கும் இருந்து வீசத் தொடங்கியது. ஆனால் கலைஞர் தமக்கு ஒன்றும் தெரியாது என்பதைப் போன்ற ஒரு பொய் தோற்றத்தை உருவாக்கி, தாம் மீண்டும் பிரதமரை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறேன் என்று இவரின் நேரடி தலையீட்டில் பிரமரை சந்திக்க தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பி வைத்தார்.

ஆனால் எது நல்லது என்பதைவிட, எந்த நிலையாக இருந்தாலும் அதை தம் மூலமாகத்தான் நிறைவேற்ற வேண்டும் என்பதிலே கலைஞர் செம்மையாக செயல்படக்கூடியவர் என்பதை பல்வேறு நிகழ்வுகள் நமக்கு நிகழ்த்திக் காட்டி இருக்கின்றன. இலங்கையிலே தமிழ் மக்கள் கடும் சமரால் பாதிக்கப்பட்டு, பட்டினி கிடக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டபோது, பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையில் யாழ் மக்களுக்கு அனுப்பி வைக்க உணவு பொருட்களும், மருந்துகளும் திரட்டப்பட்டது.

முறையாக செஞ்சிலுவை சங்கத்திடம் அனுமதி பெற்று, அதை அனுப்பி வைப்பதற்கான அனுமதியும் பெற்றுக் கொண்ட பின்னர், சற்றேறக்குறைய 2 கோடி ரூபாய்க்கு மேல் பெறப்பட்ட அந்த பொருட்களை இறுதிவரை யாழ் பாணத்திற்கு அனுப்பி வைக்க முடியாமலேயே முடக்கிப்போடப்பட்டது. இதை கண்டித்து பழ.நெடுமாறன் அவர்கள் சாகும்வரை பட்டினி போர் என அறிவித்து, போராட்டத்தை துவக்கினார். இதற்கிடையே சேகரித்த பொருட்களை படகுகள் மூலமாக அனுப்புவோம் என்றுகூறி, களத்திற்கு வந்த போராட்ட வீரர்களை 70 ஆண்டுகளான தமிழ் பேசும் கருணாநிதி அரசு கைது செய்து தடுத்தது.

அதேபோன்றே உண்ணாவிரதத்தையும்கூட, நிறுத்தி வைப்பதற்கு என்னவெல்லாம் முயற்சி செய்ய வேண்டுமோ, முயற்சி செய்து அந்த உண்ணாவிரதமும் முடிவுக்கு வந்தது. யாழ்பாண மக்களுக்கு திரட்டிய பொருட்களும் நாசகர முடிவுக்கு சென்று நிறைவடைந்தது. ஒகேனெக்கல் பிரச்சனையில் அதிதீவிரமாக தமிழக மக்கள் ஒன்றுதிரண்டு களத்திற்கு வந்தபோது, தேர்தல் முடியட்டும், பார்த்துக் கொள்ளலாம் என்று அந்த போராட்டத்தை நசுக்கிப்போட்ட பெருமையும் தமிழக முதல்வர் பெற்றுக் கொண்டார்.

தமிழீழ மக்களின் மீது தொடுக்கப்பட்ட கடும் அடக்குமுறையை கண்டித்து, தமிழ்நாடு மட்டுமல்ல, உலகநாடுகளில் உள்ள தமிழர்கள் எல்லாம் ஓங்கி குரல் கொடுத்து கொண்டிருந்தபோது, தாம் நடத்திய 4 மணி நேரம் சாகும்வரை உண்ணாவிரதம் போராட்டத்தின் மூலம் முடிவுக்கு வந்தார். அதேபோன்றுதான் தேசிய தலைவரின் தாயார் தமிழ்நாட்டிற்கு வருவது தனக்குத் தெரியாது என்று கூறி அமைதி காப்பதற்கு பதிலாக, தமிழ் பெருமையை அவமதிக்கும் விதமாக அந்த முதிய வீரப்பெண்மணியை சிறை வைத்து மருத்துவம் அளிக்க தாம் தயார் என சட்டமன்றத்திலே அறிவித்து, தம்மை பன்மடங்கு பண்பாளராக உயர்த்திக் கொண்டார்.

இப்படி எந்த நிலையாக இருந்தாலும் தமிழரின் வாழ்வுக்கு எந்த விதத்திலும் முதல்வர் உறுதுணையாக இருந்தது கிடையாது என்பதுதான் வரலாறாக இருக்கிறது. ஒருவேளை உள்ளபடியே கலைஞர் தமிழ்மீது வெறி கொண்டவராக, தமிழை உள்ளார்ந்து நேசிப்பவராக இருப்பாரேயானால் இன்று தமிழ்நாட்டில் தமிழ் செழித்தோங்கி இருக்கும்.

அறிவியல், மருத்துவம், உளவியல், வேதியியல், பொருளியியல், இயற்பியல், இயக்கவியல் என எதை எடுத்துக் கொண்டாலும் இவை அனைத்தும் ஆங்கிலத்தில் தான் நாம் வாசிக்க வேண்டும், படித்து பட்டம் பெற வேண்டுமே தவிர, இப்படிப்பட்ட அறிவியல் தொழில்நுட்ப பாடப்பிரிவுகள் இல்லாவிட்டால், ஆழ்கடல் விண்வெளி ஆய்வுகள் தமிழில் கிடையாது. 50 ஆண்டு காலத்தில் இதுவரை அடிப்படை கல்வி திட்டத்திலேயே தமிழைக் கொண்டுவர முடியாமல், 70 ஆண்டு காலமாக என் உதடுகள் தமிழை தான் உச்சரிக்கிறது என்று சொல்வது யாரை ஏமாற்ற? என்பதை கலைஞர் விவரிக்க வேண்டும்.

தமிழ் இன்றுவரை வழக்காடும் மொழியாக இல்லை. அலுவலக மொழியாக இல்லை. கேவலம் கடைகளில் இருக்கும் பெயர் பலகையைக் கூட சட்டம் போட்டுதான் தமிழில் எழுத வேண்டும் என்ற நிலையில்தான் தமிழ் நாடு இருக்கிறது. இந்த நிலையில் எதற்காக இந்த செம்மொழி மாநாடு என்று தமிழ் ஆய்ந்தவர்களுக்கு புரியவில்லை, தமிழ் நாட்டு மக்களுக்கும் புரியவில்லை. சில நாட்கள் கோவை மாநகரம் கதிகலங்கப்போகிறது. பார்க்கும் திசையெல்லாம் விண்ணுயர்ந்த கழகக் கொடிகள் பட்டொளி வீசி பறக்கப்போகிறது.

தென்பாண்டி சிங்கமே என்ற வெட்டுருக்களும், தளபதியே என்கின்ற வெட்டுருக்களும், தலைவா என்ற வெட்டுருக்களும் உடன் சேர்ந்து தமிழ் காத்த கவிஞரே, கனிமொழியே என்ற வெட்டுருக்களும் கோவை மாநகரை நிரப்புவதைத் தவிர, இதில் வேறென்ன சிறப்பு நிகழப் போகிறது என்று தெரியவில்லை.

இப்போதே தமிழ்நாடு முழுக்க இருக்கும் சுவர்கள் எல்லாம் செம்மொழி மாநாட்டிற்கு வரச்சொல்லி கழக கண்மணிகள் வரைந்து தள்ளுகிறார்கள். இயல்பாக என்ன நிகழ வேண்டும்? இது மொழி தொடர்பான பிரச்சனை இல்லையா? தமிழ்நாட்டு மக்களெல்லாம் உணர்வு பூர்வமாக இந்த நிகழ்வுக்கு தாமாக முன்வந்து விளம்பரம் தரவேண்டாமா? தமிழறிஞர் ஒன்றிணைந்து தமிழன்னையை தலைமேல் சுமக்க வேண்டாமா? ஆனால் நடக்கவில்லையே? ஏன்? இது முழுக்க முழுக்க தன் மீது கொண்ட பழியை துடைக்க கலைஞர் செய்யும் கழக மாநாடை தவிர, இது செம்மொழி மாநாடல்ல என்பது எல்லோருக்கும் புரிந்திருக்கிறது.

முதலில் ஒன்றை அறிவித்து, அதை உலகத் தமிழ் மாநாடு என்றபோது, அதற்கு ஒப்புதல் இல்லை என்றவுடன், உலக செம்மொழி மாநாடு என்று மாற்றி அறிவித்து, அதற்காக தமிழக மக்களின் வரிப்பணத்தை கோடிக் கோடியாக கொட்டி, சில நாட்களில் கொண்டாடி நிறைவெய்தப் போகிறார்கள்.

ஆகவே, இது தேவைத்தானா? என்று நாம் விவாதிப்பதில் எந்த பலனும் இல்லை. நாம் தேவையில்லை என்று சொல்வதால், அது நிறுத்தப்படப்போவதும் இல்லை. காரணம், மாபெரும் கலைஞர் போற்றிகள் எல்லாம் பக்கத்தில் இருந்து கொண்டு போற்றி! போற்றி! என்று பாடுவதற்கு நிதம் நிதம் இருக்கிறார்கள். இவர்கள் இருக்கும்வரை கலைஞர் தொடர்ந்து தமது நிலையை நீடித்துக் கொண்டுதான் இருப்பார்.

இதை மாற்ற முடியாது. இந்த நிலையை மாற்றுவதற்கு உலகத் தமிழினம் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். ஒரே ஒரு வார்த்தையை மட்டும் கலைஞருக்கு நினைவூட்டலாம். தமிழ்நாட்டில் தமிழ் மொழி அழிந்தாலும் பரவாயில்லை, ஆங்கிலப் பள்ளிகளின் அணிவகுப்பை ஆதரித்தீர்கள், சரி. விட்டுவிடலாம்.

ஆனால் தமிழீழத்தில் வதைமுகாமில் இருக்கும் மக்கள் முழு விடுதலை பெற்று தமது வாழ்வை வளமாக்கிக் கொண்ட பிறகு, செம்மொழி மாநாட்டை உலகத் தமிழ் மக்களின் விடுதலை மாநாடாக அறிவிக்கலாமே. அப்படி அறிவித்தால் அது கலைஞரின் புகழை மேலும் மேலும் உயர்த்தும் என்பதுதான். இது கலைஞர் கேட்பாரா? கேட்க மாட்டாரா? என்பதை நாம் நன்றாகவே உணர்ந்திருக்கிறோம்.

– மீனகம் இளமாறன்
http://meenakam.com/?p=16364

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis