செம்மொழி மாநாடும் கலைஞரின் தமிழ்ப்பணியும்
திவியரஞ்சினியன்
கல்விச் சுமையால் வலையில் அதிக கவனம் செலுத்தமுடியவில்லை. இதுவே ஆடிக்கு ஒன்று அமாவாசைக்கு ஒன்றென்று பதிவு எழுதிய வண்ணம் இருக்கக் காரணம்! இது இப்படியிருக்க; "செம்மொழி மாநாடு நடக்கும் போது ஒருபதிவேனும் பதியாட்டி தமிழன் என்று பெருமை சொல்லமுடியுமா? " என்று கடுந்தொனியில் கலைஞர் கனவில் வந்து கேட்டுத் தொலைத்துவிட்டார். அதுதான் ஒருபதிவு! எனக்கும் கலைஞருக்கும் நெருங்கிய பந்தம் உண்டு. கலைஞரை எனக்கு நல்லாத் தெரியும்.{அவர் குணத்தை நல்லாத் தெரியும் என்கிறேன்.........வேறுமாதிரி எதுவும் யோசிக்க வேண்டாம்:-) }ஆனால் அவருக்கு என்னை மட்டுமல்ல உண்மையான தமிழ்ப்பற்று என்றால் என்ன என்றுகூடத் தெரியாது!
செம்மொழி மாநாட்டு கண்காட்சிக்காய் ஒராண்டு காலமாய் சுடுமண்ணில் திருக்குறள்களைப் பதிந்து கல்லூரி நிர்வாகம் அனுமதி வழங்காத காரணத்தால் தான் ஆக்கிய திருக்குறள் சுடுமண் ஆக்கங்கள் வீணாகிவிட்டனவே என்ற விரக்தியோடு மரத்திலே தூங்கிலிட்டு மரணித்த மாணவன்பற்றி கலைஞர் அறிந்தே இருக்கமாட்டார்! அவர் எழுதிய கடிதத்தில் ஈழத்தமிழ் மக்களைப்பற்றியும் மரநடுகை பற்றியும் குறிப்பிட்டுள்ளதை கலைஞர் எப்படித் தெரிந்துகொள்வார்?
யாவரும் கேளிர் என்றால் அனைவரும் உறவினரே என்று பொருள்படும். கேளீர் என்றால் கேளுங்களேன் என்று அழுத்திச் சொல்வது! ரகுமான் கேளீர் என்றே செம்மொழி மாநாட்டுப் பாடலில் உச்சரிக்கின்றார். பாவம் அவர் தமிழாசிரியர் இல்லைத்தானே! எனவே அவரை வம்புக்கு இழுக்கக்கூடாது!!!! ஆனால் முத்தமிழ் கலைஞர்? ஐயகோ.......... வயது போனதால் காது கேளாமல் போயிருக்கும்! எனவே அவரை குறைசொல்லவும் கூடாது! அப்ப.......யாரைத்தான் நொந்துகொள்வது?
" போரைப் புறந்தள்ளி" என்று செம்மொழிப் பாடலில் கலைஞர் சுட்டுகிறார். அவரெழுதிய பாடலாயிற்றே!!! இந்தி எதிர்ப்பு "போரா"ட்டத்தில் வருகின்ற "போர்" எந்தப் போர்? இராச இராச மன்னன் தொடுத்த போர் கேவலமானதா என்ன? புறனானூறு முழுக்க போரின் புகழ்பாடப்பட்டுள்ளதே? அப்படியானால் "போரைப் புறந்தள்ளி" யாருக்கு வைத்த உள்குத்து? கலைஞர் தும்மினால் இருமினால் விக்கினால் தமிழ்த்தாயே கலங்கிவிடும்.......... அவர் எழுதிய கவிதையில் குறைபிடிக்கலாமா? கூடவே கூடாது!!! இப்படித்தான் இருந்துள்ளார்கள் படித்து பட்டம்பெற்ற பேராசிரியர்கள் யாவரும்! எனவே பொதுசனங்களாகிய எங்களுக்கு என்னத்துக்கு வம்பு? "கூடவே கூடாது" என்பதை நாமும் ஆமோதிப்போம்!
மாநாட்டு தொடக்க நிகழ்வில் பிறமொழியாளர்களின் ஆங்கில உரைகளுக்கு தமிழ்மொழி பெயர்ப்பு வழங்கப்படவில்லையாம்! அதாவது ஆங்கிலம் படித்து அவர்கள் என்ன உரையாற்றினார்கள் எனத் தெரிந்து கொள்ளுங்கள் என்று ஆங்கிலத் திணிப்பு நடந்துள்ளது மறைமுகமாக!!!! தமிழறிஞர்கள் ஆற்றிய உரைகளில் ஆங்கிலமோகம் கலந்திருந்ததாக ஆங்கிலப் படிப்பறிவு இல்லாத தமிழ்ச்சனங்கள் நொந்துகொண்டனர்!!!! அதுசரி ஆங்கிலமோகம் இந்தச்சனங்களுக்கு இல்லாதது "ஆங்கிலப்படிப்பறிவு' இல்லாததாலேயே என்று தட்டிக்கழித்துவிட்டர் தமிழறிஞர்கள்!!!! என்ன செய்ய, விழாபற்றிய அறிக்கைகள் ஆங்கிலத்திலேயே அனுப்பப்பட்டதாக பல ஊடகங்கள் சாடியுள்ளதை அறிந்தபோது இந்த சின்னச் சின்ன தவறுகளை வலையில் சுட்டுவது முறையாகுமா? இதை ஒருவிசயமாக கருதலாமா? கூடவே கூடாது!!!
சரி, இதுபோகட்டும்! முக்கியமான விசயம் என்னென்றா........ஈழத்தில் வடகிழக்குப் பகுதியில் ஈழத்தமிழர்கள் வசிக்கின்றார்கள். மத்தியநாட்டில் தமிழகத் தமிழர்கள் வாழ்கின்றார்கள்.இவர்கள் பிரித்தானியர் காலத்தில் இலங்கைக்கு தொழிலாளிகளாக அழைத்துவரப்பட்டவர்கள். மாநாட்டில் பங்குபற்ற யாழ்ப்பாணத்து பல்கலைக்கழகத்துப் பேராசிரியர்களுக்கும் தமிழறிஞர்களுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது.மத்தியநாட்டில் வாழும் வாழ்வாதரத்தில் பின் தங்கிய கூலித்தொழிலாளிகளாக வாழும் தமிழகத் தமிழரை பிரதிநிதித்துவப்படுத்தும் வண்ணம் எவரும் அழைக்கப்பட்டிருக்கவில்லை! இலங்கை தமிழ் முஸ்லீம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படும் வகையிலும் எவரும் அழைக்கப்பட்டிருக்கவில்லை! இலங்கையில் மத்தியநாட்டுத் தமிழர்கள் வாழ்வியல்,அரசியல்ரீதியில் தனித்துவமான பிரச்சினைகளை முகங்கொடுக்கும் தனித்துவமான தமிழ்ச்சமூகம் என்பதை கருணாநிதி அறிந்திருக்கவில்லையா? இலங்கை தமிழ்முஸ்லீம் சமூகம் தமிழரல்லாதவர்களாக இலங்கை அரசியலால் பிரித்தாளப்படும் நிலையை முத்தமிழறிஞர் கேள்விப்படவில்லையா? ஈழத்தமிழ் முஸ்லீம் சமூகத்தில் தமிழறிஞர்கள் பலருண்டு! எனவே அவர்களைப் பிரதிநிதிப்படுத்தும்வகையில் அழைப்புவிடப்பட்டிருந்தால் "பிரித்தாளப்படும்" தந்திரத்துக்கு ஆப்புவைக்க ஏதுவான காரணிகளை உருவாக்கியிருக்குமே!!!! அதை நலுவவிட்டார் உலகத்தமிழ்த் தலைவர்!!!!
இந்த மாநாடு வெறும் மொழிக்கா? அல்லகு மொழியை பேசும் மக்களுக்காகவா? மக்கள் வாழ்ந்தாலே மொழி வாழும்! எனவே இந்தமாநாட்டில் ஈழத்தின் மத்தியநாட்டின் தமிழகத் தமிழர்கள் பிரச்சினைகளை உரையாட, எடுத்துரைக்க எவரும் இல்லையே?
கரூமம்....கரூமம்.......இது அரசியல் மாநாட்டில்லை! மொழி மாநாடு! இங்கு தமிழ்மொழி வளர்ச்சிபற்றியே உரையாடுவோம்! அதனாலேயே கலைஞர் ஐயா தமிழ் கூட்டமைப்பு அரசியல் தலைவர்களுக்கோ அல்லது மத்தியநாட்டு தமிழ் அரசியல் தலைவர்களுக்கோ அழைப்பிதழை வழங்கவில்லை!!! இப்படி நியாயம் சொல்கின்றனர் உலகத்தமிழ்த் தலைவரின் திருத்த முடியாத கழுதைகள்!!!
அப்படியானால் ஏன் பிரதீபாபட்டீலுக்கு அழைப்பிதழ்? ஏன் ஆளுநர் பெர்னாலாவுக்கு அழைப்பிதழ்? ஸ்டாலினுக்கு ஏன் அழைப்பிதழ் வழங்கப்பட்டது? இவர்கள் அரசியல் தலைவர்கள் ஆயிற்றே!!! {முத்தமிழறிஞர் கலைஞர் பங்குபற்றாமல் விழா நடந்தால் அது விழாவுக்கே அழகில்லை!!! கனிமொழி கவிஞர்! அதனால் அரசியல் தலைவர்கள் என்று அவர்களைக் கருதுவது மாபெரும் தவறு!! }
கலைஞர் காலைச் சாப்பாட்டுக்கும் மதியச்சாப்பாட்டுக்கும் இடையில் இருந்த உண்ணாநோன்பைப் பாராட்டி தமிழ்க்காவலர் என்று பட்டம்சூட்ட திராவிடர் கழக வீரமணியர்( தமிழர் தலைவர் என்று இவருக்கு பட்டம் வேறு!!!), சு.பா.வீரபாண்டியர் என்று அல்லக்கை நொள்ளக்கை இருக்கையில் கலைஞரை தவறாகப் பேசக்கூடாது!!!! கூடவே கூடாது!
தமிழக வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்மொழியில் வழக்காட உண்ணாநோன்பு இருந்தபோது அவர்களை காவல்த்துறையை ஏவிவிட்டு கைதுசெய்த கையோடு மாநாட்டுக்கு பங்குபற்ற வந்த கலைஞர் ஐயா, எவ்வளவு நல்லவர் தெரியுமா? இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறைசென்ற அவர், சிறை சென்றாலே தமிழுக்கு மரியாதை என்று கருதி உண்ணாநோன்பு இருந்தவர்களை சிறைக்கு அனுப்பிய தமிழ்க் காவலர் அவர்! அவரைப் போய் குறைஞ்சு மதிப்பிட்டாச்சே!!! சீ...சீ...தப்பு!!!
மொத்தத்தில் கலைஞர் ஐயாவுக்கு இருக்கும் தமிழறிவை நினைக்கும்போது........ஐயகோ புல்லரிக்கிறது! அப்பாடியோ.......! கலைஞர் ஐயா கனவிலே வந்து கேட்டுக்கொண்டதுக்கு இணங்க, ஒருமாதிரி ஒருபதிவை செம்மொழி மாநாட்டுக்கு காணிக்கை ஆக்கும்வகையில் எழுதியாயிற்று!!!! இதை வாசித்தவர்கள் தேர்தல் வரும்போது மறக்காமல் கலைஞருக்கு வாக்கைப்( அதுதான் ஓட்டை) போட்டுடுங்கோ!!!!
திவியரஞ்சினியன்
http://thiviyaranchiniyan.blogspot.com/2010/06/blog-post.html
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.