.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Tuesday 22 June 2010

வெறிபிடித்த அர்ச்சகப் பார்ப்பனர்கள்

மதவெறி பிடித்த அர்ச்சகப் பார்ப்பனர்கள்

நடிகர் சிவக்குமார் அனுபவத்தில்...

சென்னை அண்ணாசாலையில் விக்டோரியா டெக்னிக்கல் இன்ஸ்டிடியூட் என்கிற கலைப்பொருள் விற்பனை நிலையம் இருக்கிறது. இந்தியா முழுவதும் இருந்து தயாராகும் அற்புதமான கலைப்பொருட்களை விற்பனை செய்வதற்காக அரசு நடத்துகிற நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள பூம்புகார் கலைக்கூடம் போன்ற அரிய இந்திய கலை அம்சங்களைத் தெரிந்துகொள்ள வெளிநாட்டவர்கள் அங்கு விரும்பி வருவார்கள். தமது கலைஞர்களின் படைப்புகளையும் அங்கே விற்பனை செய்வார்கள்.

அழகான ஓவியங்களை வரைந்து பிரேம் போட்டு கொண்டுபோய் அங்கு வைத்து விட்டு வந்தால் யாராவது வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்படி விற்பனையானால் அந்த நிறுவனத்துக்கு 15 சதவிகிதம் கமிஷன் எடுத்துக்கொள்வார்கள். மீதித் தொகை முழுவதும் உரிய கலைஞர்களுக்கு கிடைத்துவிடும். நமது கோவில் ஓவியங்கள் வெளிநாட்டினரின் கவனத்தை அதிகம் ஈர்க்கும் எனக்கு இயல்பாகவே அதில் ஆர்வம் மிகுதியாக இருந்ததால், என் படைப்புகளை அங்கு விற்பனைக்கு வைப்பேன் .அப்படி வைப்பதற்காக உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை வரைய தஞ்சாவூருக்கே புறப்பட்டேன். ரெயிலில் இருந்து இறங்கி ரொம்ப தூரம் ஊருக்குள்ளே நடந்தேன். ரெயிலடிக்குப் பக்கத்தில் இருக்கும் லாட்ஜுகளில் கட்டணம் அதிகமாக இருக்கும் என்பதால் கொஞ்சம் உள்ளே போனதும் மங்களாம்பிகா லாட்ஜ் என மங்கிய பெயர் பலகை ஒன்று இருந்தது. அந்த விடுதி உள்ளே சென்று மானேஜரிடம் அறை வாடகையை விசாரித்தேன் ஒரு நாளைக்கு எட்டு ரூபாய் என்றார் அவர், நான், அதைவிட குறைவான தொகைக்கு அறை எதுவும் இல்லையா? என்று கேட்டேன். என்னை மேலும் கீழுமாக நோட்டமிட்ட அவர், நாலு ரூபாய்க்கு ஒரு ரூம்
இருக்கு. ஆனா, அது கொஞ்சம் மோசமா இருக்கும் என்று சொன்னார்.

அதைவிட குறைவான வாடகைக்கு அறை இருக்கிறதா? என்று நான் மீண்டும் கேட்க அவருக்கு சுள்ளென்று கோபம் வந்துவிட்டது ஏதோ விளையாடுகிறேன் என்று நினைத்து ஒரு மாதிரியாக பார்த்தார்.

அதை விட குறைச்சல்னா பாத்ரூம் தான் இருக்கு பரவாயில்லையா-? என்று அவர் கேட்டதும் அதை ரெண்டு ரூபாய்க்கு தருவீங்களா? எனக்கு பாத்ரூம் போதும். குளிக்க, டாய்லட் போக ஒரு இடம். ராத்திரி ஏதாவது திண்ணையில் கூட படுத்துக்குவேன் என்று சொன்ன பிறகே என் உண்மையான நிலைமை அவருக்குப் புரிந்தது. நாலு ரூபாய் அறையை எடுத்துக்கோ உன்னால என்ன முடியுதோ அதைக் கொடுப்பா என்று சொல்லி விட்டார். அப்போதைக்கு அவர் ஆபத்பாந்தவனாகவே என் கண்களுக்னுகுத் தெரிந்தார். ஓவியம் வரைய காலை ஏழு மணிக்கெல்லாம் கோவிலில் இருந்தால்தான் கோபுரத்தின் லைட்டிங் நன்றாக இருக்கும். மாலை வரை ஒரே அமர்வில் வரைந்து முடிக்கவேண்டும். காலையில் ஆறரை மணிக்கு இரண்டு இட்லி, ஒரு வடையை அவசரமாக சாப்பிட்டுவிட்டு வரைய கிளம்பினால் மாலை ஆறு மணிக்குத்தான் கோவிலைவிட்டு வருவேன். மதிய உணவிற்கு நேரமும் இல்லை.... கையில் காசும் இல்லை!

இரண்டாவது நாள் மாலை ஆறு மணிக்கு ஓட்டலுக்கு சென்று உருளைக்கிழங்கு போண்டா கேட்டேன். ஆனால், மசால்தோசையை கொண்டுவந்து வைத்தார் சர்வர். நான் சாப்பிடவில்லை. வேறு யாருக்கோ சொன்னது இங்கே வந்திருக்கு. நான் போண்டாதான் கேட்டேன் என்று சொன்னேன். அவரோ, பரவாயில்லை சாப்பிடுங்க என்றார்.

எனக்கு தோசை வேண்டாம் போண்டாவே போதும் என்றேன் மீண்டும். ஏன் ஒரு மசால் தோசை சாப்பிடவா வயித்துல இடமில்லை-? சும்மா சாப்பிடுங்க என்றார் சர்வர்,
பிடிவாதமாக ! எனக்கு கோபம் வந்து-விட்டது. அஞ்சு மசால் தோசைகூட சாப்பிடுவேன். என்கிட்ட இப்ப இருக்கிற காசுக்கு என்ன சாப்பிடணும்னு எனக்குத் தெரியும். போண்டா தர-முடியுமா .... இல்லைன்னா நான் கிளம்பட்டுமா? என்று ஆத்திரத்தோடே எழுந்தேன். அவரோ, சின்ன முதலாளி என்று அவசரமாக பதறி என்னை தடுத்தார். நான் திகைப்பாக பார்த்தேன். என்னை அடையாளம் தெரியலையா சின்ன முதலாளி? பொள்ளாச்சியில உங்க மாமா ஓட்டல்ல வேலை பார்த்திட்டிருந்தேன். நீங்க கல்லாவுல வந்து உட்காருவீங்க. அப்புறம் படிக்க பட்டணத்துக்கு போயிட்டதா சொன்னாங்க.

நான் இப்ப தஞ்சாவூர்ல இந்த ஓட்டல்லதான் வேலை பார்க்கறேன். பிரியத்துலதான் உங்கள சாப்பிடசொன்னேன். தப்பா எடுத்துக்காதீங்க என்று நெகிழ்ச்சியோடு சொல்லி, என்னை பிடிவாதமாக உட்கார வைத்தார். எனக்கு சிலிர்த்துப் போய்விட்டது. தர்மம் தலைகாக்கும் என்பார்களே, அது மெத்தவும் சரிதான்! என்று தோன்றியது. நான் மறுக்க முடியாமல், அவர் வைத்த மசால்தோசையை சாப்பிட்டு முடித்தேன்.

திருச்சி மலைக்கோட்டை

நான் எப்பவும் ஒரு ரெயில் என்ஜின் மாதிரி தனித்து இயங்குவேன். என்னோடு எத்தனை ரெயில் பெட்டிகள் வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம். பெட்டிகள் இல்லையென்றாலும் என்ஜின் தனியாக பயணம் செய்வதுபோல் நானும் என் பயணங்களில் யாருக்காகவும் காத்திருக்கமாட்டேன்.

திருச்சி மலைக்கோட்டையை ஓவியமாக வரைய சில நண்பர்கள் வருவதாக இருந்தார்கள். கடைசி நேரத்தில் அவர்கள் வரமுடியாமல் போனது. என் பயணத்தைத் தள்ளிவைக்க சொன்னார்கள். ஆனால் அதற்கு நியாயமான காரணம் எதுவும் இல்லாததால், நான் மறுத்துவிட்டேன். தனியாகவே திருச்சிக்கு கிளம்பினேன்.

அங்கே அலைந்து திரிந்து கிருஷ்ண பவன் லாட்ஜ் என்கிற தங்கும் விடுதியைக் கண்டுபிடித்தேன். அங்கு தான் திருச்சியிலேயே இரண்டரை ரூபாய்க்கு அறை வாடகைக்குக் கிடைத்தது.

பல இடங்களில் உட்கார்ந்து மலைக்கோட்டையை வரைந்து பார்த்தேன். எங்கும் சரியான கோணம் (ஆங்கிள்) கிடைக்கவில்லை. மெயின் கார்டு கேட் அருகில் இருந்த கல்வி அதிகாரி (டி.இ.ஓ) அலுவலகத்தில் இருந்து சரியான ஆங்கிள் கிடைக்கும் என்று எனக்கு மனதில் தோன்றியது. அங்கே போனேன். மே மாத உச்சிவெயில் கொளுத்தி எடுத்தது. அந்த அதிகாரியிடம் அனுமதி வாங்கிக்கொண்டு மொட்டை மாடிக்கு போனால். தீக்குழியில் மிதித்தது போல தரை கொதித்தது. ஒதுங்குவதற்கு மருந்துக்கும் கூட நிழலே இல்லை. காலை பத்துமணிக்கு போனவன் தொடர்ந்து மூன்று மணி நேரமாக தகிக்கும் வெயிலில் நின்றபடியே மலைக்கோட்டையை ஓவியமாக வரைந்துகொண்டு திரும்பிய போது அந்த அதிகாரிக்கு நன்றி சொல்லப் போனேன். தம்பி... நீ யாருப்பா? என்று கேட்டார். காலையில உங்ககிட்ட அனுமதிகேட்டுவிட்டு ஓவியம் வரைய மாடிக்குப் போனேனே, அந்தப் பையன்தான் சார் என்றேன், அவர் பதறிவிட்டார்.

வெள்ளை வெளேர்னு பிரிட்ஜில வெச்சிருந்த ஆப்பிள் பழம் மாதிரி மாடிக்கு போன பையனா நீ? இப்படி முகமெல்லாம் வாடி வதங்கி வந்திருக்கியேப்பா... ஏன் இவ்ளோ கஷ்டப்பட்டு வெயில்ல நிக்கணும்? எங்கிட்ட கெட்டிருந்தா மலைக்கோட்டை போட்டோ வையே தந்திருப்பேனே? என்று ஆதங்கப்பட்டார். சாமியை நேர்ல பார்க்கிறது நல்லதா? போட்டோவுல பார்க்கிறது நல்லதா?ன்னு நான் சிரித்துக் கொண்டே கேட்டேன். அவர் நீ நல்லா பேச வேற கத்திருக்கே. யார் பெத்த புள்ளையோ.. உடம்பைப் பார்த்துக்கப்பா என்று அன்பாக அறிவுரையும் வழங்கினார். எனக்கு அதிக வியப்பாக இருந்தது.

ஸ்ரீரங்கத்தில் அவமதிப்பு

அடுத்தோ எனக்கு அவமதிப்பு காத்திருந்தது. ஸ்ரீரங்கம் கோபுரத்தையும் ஓவியமாக வரைய நினைத்து, புஷ்கரணி தெப்பக்குளம் பக்கம் போனேன். கோபுரத்தில் சூரிய வெளிச்சம் நேரடியாக படுகிற கோணம் அங்கிருந்துதான் கிடைத்தது. ஆனால் கோவில் வளாகத்தில் பிரகாரத்திற்கு அருகிலேயே நின்று வரைய வேண்டியது இருந்தது. அப்போது கோவில் அர்ச்கர் ஒருவர் வந்தார். என்னிடம் குலம் கோத்திரங்களை விசாரித்தார். என் பேச்சு, உடை, முக பாவனைகளை வைத்து நான் பிராமணப் பையனில்லை என்று தெளிவாகத் தெரிந்ததும் அவரின் முகம் போன போக்கே சரியில்லை. முறையா அனுமதி எதுவும் வாங்காம கோவிலுக்குள்ள படமெல்லாம் வரையக்கூடாது என்று கடிந்தபடி சொன்னார்.

நான் ஓவியக் கல்லூரி மாணவன். படம் வரைவதைத்தவிர வேறொன்றும் செய்யப்போவதில்லை என்று பவ்வியமாக சொன்னேன், கெஞ்சிப் பார்த்தேன். அவர் சம்மதிக்கவில்லை.

இத்தனை சொன்ன பிறகும் நீங்கள் கோபப்படுவது நியாயமில்லை என்று பணிவாக பேசிப் பார்த்தேன். அவர் காதிலேயே வாங்கவில்லை; மாறாக அவரது கோபம் கூடியது. ஓ... நீ நியாய தர்மம் வேற பேசுறீயா? இரு வர்றேன் என்று ஆவேசமாக உள்ளே போனவர் வேறு சில அர்ச்சகர்களுடன் வந்தார்.

என்னை அடித்து விரட்டாத குறைதான்! அத்தனை அவமதிப்பு அவர்களிடம் முடிந்தவரை போராடிப் பார்த்துவிட்டு ஏமாற்றத்தோடு அங்கிருந்து கிளம்பினேன். கோவிலைவிட்டு வெளியேறி தெருவில் அமர்ந்து கோபுரத்தை படமாக வரைந்து முடிந்தேன்.

பெரியார்மீது மதிப்பு

தந்தை பெரியார் மீது எனக்கு அப்போதுதான் பெரிய மரியாதை வந்தது. அவர் ஏன் இவர் மாதிரியான பிராமணர்களை வெறுத்தார் என்பதன் அர்த்தமும் எனக்கு அனுபவப்பூர்வமாக விளங்கியது. அந்தக் கோவிலையும், ஆண்டவனையும் அவர்கள் அனுமதியின்றி யாரும் நினைக்கக்கூடாது என்று கருதிய அந்த அர்ச்சகரின் போக்கு என்னைக் கடுமையாகப் பாதித்தது. படிப்பறிவு இல்லாத சாதாரண கிராமத்து பாமர மக்கள் கூட எனக்கு படங்கள் வரைய இடம் தந்து, உணவளித்து, உபசரித்து அனுப்பிய எத்தனையோ சம்பவங்கள் உண்டு. ஆனால், மெத்தப் படித்து தமிழ் மண்ணின் முக்கிய கோவிலில் அர்ச்சகராக இருந்த அவர் தீண்டாமை நோக்கத்தோடு என்னிடம் அப்படி நடந்து கொண்டது புதிய புதிரான அனுபவமாகவே எனக்கு இருந்தது. அதை நினைத்தால் இப்போதும் நெஞ்சம் கனக்கத்தான் செய்கிறது.

1 comment:

  1. அனுபவங்கள் மனதை நெருடுகின்றன. உங்களை பெரிய நடிகராகப் பார்த்துத்தான் பழக்கம். ஒரு பதிவராகப் பார்க்கும்போது ஒரு நெருக்கம் பனதில் தோன்றுகிறது.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis