பெரியாரின் இஸ்லாத் பற்றிய பார்வையும், அப்துல்லாவின் வழுக்கல்வாதமும்......
கடந்த ஜீன் 19 ந் தேதி மாலையில் "மனதை இயக்கு; வாழ்வை உயர்த்து " என்ற தலைப்பில் கருத்தரங்கம் லண்டன் ஈஸ்ட் ஹேம் - பிளாச்ட் பள்ளியில் நடைபெற்றது.
கருத்தரங்கின் சிறப்பு விருந்தினராக ஜனாப். அப்துல்லாஹ் அவர்கள் கலந்துகொண்டு தலைமையுரையாற்றினார்.
தமிழ் உணர்வாளரும், லண்டன் சென்னை தோசா குழுமத்தின் உரிமையாளருமான திரு.அசோகன் அவர்கள் முன்னிலை வகுத்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இஸ்லாமிய சார்பான இந்நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில், சிறப்பு விருந்தினராக பேரா.பெரியார்தாசன் என்றும், அடைப்புக்குறிக்குள் டாக்டர். அப்துல்லாஹ் என்றும் விளம்பரபடுத்தப்பட்டிருந்தது.
கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய..... ஜனாப். அப்துல்லாஹ், குழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தைகளின் உளவியல் குறித்து விரிவாக பேசி, இடையில் இஸ்லாம் கருத்துகளையும் வலியுறுத்தியே பேசினார்.
மொத்தத்தில், மூடி மறைக்கப்பட்ட மத பிரச்சாரத்தையே செய்து முடித்தார்.
கேள்வி நேரத்தில்உளவியல் கேள்விகளுக்கு பிறகு நாத்திகரான நீங்கள், இஸ்லாமியரானதற்கான " உண்மை நிலை" என்ன? என்று கேள்வி அனுப்பபட்டது.
கேள்வியின் சூட்சமத்தை புரிந்து கொண்ட அப்துல்லா, நான் பணத்திற்க்காக முஸ்லீமாக மாறவில்லை என்று நேரடியாகவே பதில் தந்தார்.
சைவ மதத்திலிருந்து இஸ்லாமிற்கு மாறியது ஏன்? என்ற வினாவிற்கு, சைவத்திலிருந்து, நாத்திகத்திற்கு மாறி பின்பு தான் இஸ்லாத்திற்கு மாறியதாக "பொருள்" பொதிந்த பதிலை தந்தார்.
அதனை தொடர்ந்து, பெரியார் தி.க தோழர் ஒருவர்...மதப் பிரச்சார நிகழ்ச்சிக்கு, பெரியார்தாசன் பேசுகிறார் என்று விளம்பரபடுத்தியிருப்பது எவ்விதத்தில் சரி? இது உண்மையான பெரியார் தொண்டர்களை அவமதிப்பது போல் உள்ளது எனக் கேட்டார்.
அப்துல்லா, தான் இஸ்லாதிற்கு மாறியவுடனே, தொலைக்காட்சி நேர்காணலிலும், ஹிந்து பேட்டியிலும், தன்னை பெரியார்தாசன் என்று குறிப்பிடவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்ததாகவும், இந்நிகழ்ச்சி அழைப்பாளர்கள் தவறுதலாக, பெரியார்தாசன் என்று குறிப்பிட்டுவிட்டார்கள், அது குறித்து அவர்களிடம் பேசுவதாகவும் கூறினார்.
தொடர்ந்து, நாத்திகராக இருக்கும் போதே, ராஜராஜன் என்ற நபருடன் பெயரியல் தொடர்பான தொ.கா நிகழ்ச்சியிலும், இராசிகல் விளம்பரத்திலும் ந்டித்தீர்களே? என்று அந்த தோழர் கேள்வியெழுப்ப....
தன் எழுப்பிய பகுத்தறிவு கேள்விகளை கட் செய்துவிட்டு....அவர்(ராஜராஜன்) பேசுவதை தான் கேட்டு கொண்டிருப்பதை போல எடிட் செய்துவிட்டார்கள் என்றும், இராசிகல் விளம்பரத்தில் விளம்பரத்தில் நடித்திருந்தால், இந்து முன்னணி ராமகோபாலனுடன் தன்னால் தொலைக்காட்சியில் விவாதம் செய்திருக்கமுடியாது என்றார் அப்துல்லா.
மேலும்,தனது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில், இஸ்லாத்திற்கு மாறியதாகவும், ஆனால் பெரியாரிய அடிப்படை கொளகைகளில் தான் உறுதியாக இருப்பதாகவும் கூறினார்.
அதனை தொடர்ந்து, இழிவு ஒழிய இஸ்லாம் தான் சிறந்த மார்க்கம் என்று அய்யாவே கூறியுள்ளார். அய்யா 27 முறை மீலாது நபி விழாககளில் கலந்துக் கொண்டு உரையாற்றியுள்ளார் என் அப்துல்லா பேச...
அய்யா, ஜாதி சங்க மாநாடுகளிலும் கலந்து கொண்டிருக்கிறார், அதற்காக அய்யா, ஜாதிகளையும் ஜாதி சங்கங்களையும் ஆதரித்தார் என சொல்ல முடியுமா? என நமது தோழர் விவாதத்தை தொடர.....
அப்துல்லாவோ, நீங்கள் கேட்ட கேள்விக்கு என்னை பதில் சொல்ல விடுங்கள் என்று கூறி, இது நாம் மட்டும் தனியாக பேச வேண்டிய விஷயம்; மற்றவர்களுக்கு தேவையற்ற விஷயம் என்று முடித்துக் கொண்டார்.
மேடையிலிருந்து இறங்கி வந்த சிறிது நேரத்திற்குள்ளே, பாய் ஒருவர், தொழுகைக்கு நேரமாச்சு, பள்ளிக்கு கிளம்புங்க என்று நினைவூட்ட...பூனையாய் பின் தொடர்ந்தார்.
எப்படி இருந்த பெரியார்தாசன் இப்படி அப்துல்லா வாக மாறியது பெரிய காமெடிதான்.
அவரது பேச்சைக் கேட்டு சிரித்த நமக்கு, அவரது செயற்பாடுகளாலே சிரிப்பு மூட்டுகிறார்.
எத்தனை வேதாசலங்கள் ஏறினாலும், எத்தனை அப்துல்லாக்கள் இறங்கினாலும் பெரியார் எக்ஸ்பிரஸை நிறுத்திவிட முடியாது; தொடர்ந்து ஓடிக் கொண்டுத் தான் இருக்கும்.
பின்குறிப்பு :
இதோ, இஸ்லாம் குறித்து பெரியாரே பேசுகிறார்.......
ஆதிதிராவிடர்களை நான் ‘இஸ்லாம் கொள்கையைத் தழுவுங்கள்’ என்று சொன்னதற்காக அநேகம் பேர் என் மீது கோபித்துக் கொண்டார்கள். அவர்களைப் பற்றி நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குச் சொந்த அறிவுமில்லை, சொல்வதையும் கிரகிக்க சக்தியுமில்லை. சிலருக்குத் தங்கள் மேன்மை போய்விடுமே, தங்களுக்கு அடிமைகள் இல்லாமல் போய்விடுமே என்கின்ற சுயநல எண்ணம் என்றே நான் கருதிவிட்டேன். ஏனெனில் ‘மோட்சம் அடைவதற்காக’ வென்று நான் ஆதிதிராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை, அல்லது ‘ஆத்மார்த்தத்திற்கோ’ ‘கடவுளை அறிவதற்கோ’ நான் அப்படிச் சொல்ல வில்லை. ஆதி திராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்கு சட்டம் செய்வது, சத்தியாக்கிரஹம் செய்வது முதலியவை போலவே இஸ்லாம் கொள்கையைத் தழுவுவது என்பதும் ஒரு வழி என்றே சொன்னேன். இனியும் சொல்லுகின்றேன்.
சட்டம் செய்வது கஷ்டம். செய்தாலும் அமுலில் வருவதும் கஷ்டம். சத்தியாக்கிரஹம் செய்வதும் கஷ்டம். செய்தாலும் வெற்றி பெறுவதும் சந்தே கம். இவற்றால் துன்பமும், தோல்வியும் கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால் ஆதிதிராவிடர்களுக்கு இஸ்லாம்கொள்கையை ஏற்றுக் கொண் டேன் என்று சொல்வதில் என்ன கஷ்டம்? அதில் தோல்வியோ துன்பமோ ஏதாவது உண்டா? அல்லது அன்னியருக்கு ஏதாவது கஷ்டம் உண்டா? அவன் ஆஸ்தீகனாய் இருந்தால் என்ன? நாஸ்தீகனாய் இருந்தால் என்ன? உண்மை இஸ்லாம் ஆனால் என்ன? பொய் இஸ்லாம் ஆனாலென்ன? யாருக்கும் எவ்வித கஷ்டமும் இல்லாமல், வேண்டுமானால் எந்தவித மன மாறுதல் கூட இல்லாமல் தன்னுடைய இழிவையும் கஷ்டத்தையும் விலக்கிக் கொள்ள ஆசையும் அவசரமும்பட்ட ஒரு மனிதன்தான் மாலை 5-00 மணிக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக் கொண்டதாய்ச் சொல்லி 5-30மணிக்கு ‘தீண்டாதவன்’ என்கின்ற இழிவிலிருந்து மீண்டு தெருவில் நடக்க உரிமை பெற்று மனிதனாவதில் ஏன் மற்றவர்கள் ஆnக்ஷபிக்க வேண்டும்? என்பது எனக்கு விளங்கவில்லை. கேவலம் வயிற்றுச் சோற்றுக் காக 100க்கு 90 மக்கள் என்னென்னமோ அவரவர்களாலேயே இழிவான குற்றமான காரியம் என்று சொல்லப்படுவதை எல்லாம் செய்கின்றார்கள். அப்படி இருக்க இதில் என்ன இழிவோ குற்றமோ இருக்கின்றது என்று கேட்கின்றேன். உலகில் மதங்கள் அடியோடு ஒழிக்கப்படும் போது இஸ்லாம் மதமும் ஒழியும். அதுபோது இந்த ஆதிதிராவிடர்கள் ஏற்றுக் கொண்டதும் ஒழிந்துபோகுமே தவிர அது மாத்திரம் நிலைத்து விடாது. அதற்காக அதிகக் கஷ்டமும் இல்லை. ஆகையால் எது எப்படியானாலும் தீண்டாமை ஒழிய வேண்டுமென்றால் தீண்டாதார் எனப்படுபவர்கள் இஸ்லாம் கொள்கையைத் தழுவ வேண்டியது என்பது ஒரு வழியேயாகும்.
குறிப்பு: 28.07.1931 ஆம் நாள் சாத்தான்குளத்தில் ( திருநெல்வேலி மாவட்டம் ) நடைபெற்ற முகமதுநபி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தலைமையேற்று ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 02.08.1931
முழு சொற்பொழிவையும் படிக்க : -
http://periyardk.org/PHP/Details.php?key1=Kudiyarasu&key2=1931&fileName=Aug&cCount=1
தந்தை பெரியார், தீண்டாமை கொடுமையினால் துயருறும் மக்களுக்குத் தான் இஸ்லாத்தை பரிந்துரைத்தாரே தவிர, மதங்களை மறுத்து,சாதிகளை ஒதுக்கி, பகுத்தறிவு பேசும் நாத்திகர்களுக்கு, சுயமரியாதைகாரர்களுக்கு,பெண்ணுரிமை பேசுபவர்களுக்கு அல்ல ! என்பது டாக்டர்.அப்துல்லா நன்கறிவார்.
நன்றி: ஈரோட்டுக்கண்ணாடி
http://erottukannadi.blogspot.com/2010/07/blog-post.html
""""திராவிட நாட்டில், நாம் 'இசுலாம்' ஆனால், நம் இஷ்டப்படிதான் இசுலாம் இருக்குமே தவிர - யாரோ சாயபோ, முல்லாவோ சொல்கிறபடி இசுலாம் இருக்காது. எனக்கு 10 நாட்டு முஸ்லிம்கள் அனுசரிக்கும் இசுலாமும் தெரியும். நாட்டு இஷ்டம், மெஜாரிட்டி இஷ்டம்தானே தவிர - இந்து மதம்போல மூன்றே அரைக்கால் பார்ப்பனர் 93 % பேர்களை, 'எட்டி நில்; நீ படிக்க முடியாது; நீ சூத்திரன்; நீ வேசி மகன்; உனக்கு சரி சமத்துவம் இல்லை; உத்யோகம் இல்லை; பிரதிநிதித்துவம் இல்லை' என்பதல்ல இசுலாம். அதாவது, பணிவையும் சாந்தியையும் உண்மை சகோதரத்துவத்தையும் கொள்கையாகக் கொண்ட மார்க்கம். மற்றது எது எப்படி இருந்தாலும் ஒற்றுமை, கட்டுப்பாடு கொண்ட மார்க்கம். இதை யாரும் மருக்க முடியாது.
ReplyDeleteநான் இசுலாத்துக்கு 'வக்காலத்து'ப் பேசவில்லை; பிரச்சாரம் செய்யவில்லை. இது உண்மை! உண்மை!! முஸ்லிம்களிடம் - எனக்கு, உங்களை எல்லாம்விட அளவு கடந்த அன்போ, நேசமோ, நம்பிக்கையோ, கூட்டுறவோ கிடையாது. ஆனால், 'பார்ப்பனியம்' - 'இந்து' என்னும் பொல்லாத - கொடுமையான - கோரமான பாம்பைக் கொல்லுவதற்கு, அல்லது அதன் விஷத்தன்மைப் பாதகத்திலிருந்து விலகுவதற்கு இதுதான் (இசுலாம்) மருந்து....
இது என்ன மானக்கேடு! என்னுடைய நாட்டில், என் வரிப்பணத்தில், எனக்காக நடக்கிற ஆட்சியிலே எனக்குப் பிரதிநிதிதுவம் இல்லை; எனக்கு விகித உத்தியோகமில்லை என்றால் - எனக்கு மனிதத் தன்மை இல்லை என்றால் - இதற்காக ஆரியனுக்கு நான் விண்ணப்பம் போடுவதும், விழுந்து கும்பிடுவதும், கெஞ்சிக்கூத்தாடுவதும் மானமுள்ள தன்மையா என்று கேட்கிறேன். யாரோ சில துரோகிகள், சுயநல வஞ்சகர்கள் மானம், ஈனம் இல்லாமல் தங்களை பார்ப்பன அடிமை (இந்து) என்று சொல்லிக்கொண்டால் - நாமும் 'இந்து' (அடியேன், தாசன், நாய்க்குட்டி, அடிமை) என்று சொல்லிக்கொள்வதா என்று கேட்கிறேன். "இழிவு நீங்க இசுலாம்' (நான் இந்துவல்ல) என்கிற மந்திரம்தான் நம்மை மனிதராக்க முடியும்."""
தந்தை பெரியார் - 1947 ('இன இழிவு ஒழிய இசுலாமே நன்மருந்து' எனும் நூலில்)