.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Saturday 27 November 2010

மாவீரர்நாள் அறிக்கை
















தலைமைச் செயலகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்.
நவம்பர் 27 2010.


அன்பிற்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே

இன்று மாவீரர் நாள்.

எமது விடுதலைப் போராட்ட வரலாற்றின் நாயகர்களைப் பூசிக்கும் புனிதநாள்.

எம்மண்ணை ஆக்கிரமித்து எமது மக்களை அழிக்க வந்த எதிரிப்படைகளை எதிர்த்துக் களமாடி தங்கள் உயிரையும் உடலையும் எமக்குக் காப்பரணாக்கிய உத்தமர்களின் நினைவுநாள்.

உலக வரலாறு கண்டிராத பல தியாகங்களையும் சாதனைகளையும் தமிழீழ விடுதலைப் போராட்டம் கண்டிருக்கிறது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வீரத்தின் உச்சத்துக்குக் கொண்டு சென்ற பெருமை இந்த வீரப் புதல்வர்களையே சாரும். அவர்களது உயிராலும் உதிரத்தாலுமே நாம் புதிய வரலாற்றைப் படைத்திருக்கின்றோம்.

அந்நிய வல்லாதிக்கச் சக்திகளோடு கைகோர்த்து எம்மண் மீது பெரும் படையெடுப்பைச் செய்த எதிரியின் முன்னால் மனவலிமையோடு போர்புரிந்த இந்த மாவீரச் செல்வங்களை நெஞ்சில் நிறுத்தி நெய்விளக்கேற்றி வழிபடும் இத்திருநாள் தமிழர்களின் எழுச்சி நாளாகும்.

பெயருக்காகவோ புகழுக்காகவோ அல்லது போர்மீது கொண்ட பற்றுதலாலோ எமது மாவீரர்கள் களமாடவில்லை. எமது மொழியின் இனத்தின் பண்பாட்டு விழுமியங்களின் மீதான அடக்குமுறைகளுக்கெதிராகவே இவர்கள் போராடப் புறப்பட்டார்கள். எம் மண்மீதும் மக்கள்மீதும் கட்டவிழ்த்து விடப்பட்ட சிங்கள இனவெறி அடக்குமுறைக்கெதிராகவே ஆயுதமேந்திப் போராடினார்கள்.

எமது தேசவிடுதலைப் போராட்டத்தில் களமாடி வீரச்சாவடைந்த வீரர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்களும் அவர்களது குடும்பத்தினரும் என்றும் பெருமைக்குரியவர்களே.

இலங்கைத்தீவில் தமது இறைமையைப் பேணியபடி தம்மைத்தாமே ஆட்சி செய்துகொண்டிருந்த தமிழினம் படிப்படியாக மேற்குலக நாட்டவரின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. மாறிமாறி ஆட்சி செய்தவர்கள் இறுதியில் இலங்கைத்தீவைக் கைவிட்டுச் சென்றபோது தமிழரின் அரசியல் உரிமைகளைச் சிங்களப் பெரும்பான்மையினத்திடம் நிரந்தரமாகக் கையளித்துச் சென்றார்கள்.

பிரித்தானியரின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து தமிழினத்தின் மீதான கொடுமைகள் சிங்களப் பெரும்பான்மையினத்தால் இனவெறியோடு மேற்கொள்ளப்பட்டன. இவற்றுக்கெதிராக தமிழ்மக்கள் நடாத்திய தொடர்ச்சியான அறவழிப்போராட்டங்கள் பலனற்றுப்போன நிலையிலும் தமிழினத்தின் மீதான அடக்குமுறைகள் அதிகரித்த நிலையிலும்தான் எமது மக்கள் ஆயுதப் போராட்ட வழிமுறையைத் தெரிவு செய்தார்கள்.

உலகநாடுகள் பலவற்றில் நடந்த விடுதலைப் போராட்டங்கள் போலவே எமது போராட்டமும் முற்றிலும் நியாயமான அடிப்படைகளைக் கொண்டதாகவே அமைந்துள்ளது. ஆயுதப் போராட்டத்தை வழிமுறையாகக் கொண்டு விடுதலைபெற்ற அனைத்து இனங்களுக்கும் நாடுகளுக்கும் இருக்கும் அதே உரிமை எமது மக்களுக்கும் எமது போராட்டத்துக்கும் உண்டு என்பதை மனச்சான்றுள்ள அனைவரும் அறிவர்.

ஆயினும் பல நாடுகள் தமது சொந்த பிராந்திய அரசியல் – பொருளாதார நலன்களுக்காக எமது இனத்தின் விடுதலைப் போராட்டம் தொடர்பில் பாராமுகமாக இருந்தமை கவலைக்குரியது. சில வல்லரசுகள் இன்னும் ஒருபடி மேற்சென்று எமது போராட்டத்தை நசுக்கவும் அடியோடு அழிக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்குத் துணைபுரிந்து கொண்டிருப்பது நியாயமற்றது.

நீண்டகாலமாக பெரும்பான்மையினத்தின் அனைத்துவித அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு தமது விடுதலைக்காக வீறுடன் போராடிக்கொண்டிருந்த ஓரினத்தை ஒட்டுமொத்தமாகச் சிதைக்கவென நடாத்தப்பட்ட இனவழிப்பு நடவடிக்கையில் சிலநாடுகள் அணிதிரண்டு உதவியளித்தபோது மனித உரிமைகளைப்பற்றி பெரிதாகப் பேசிக்கொண்டிருந்த நாடுகளும்கூட கண்டுகொள்ளாமல் இருந்தமை தமிழ்மக்களின் மனங்களில் ஆறாத வடுவாகவே உள்ளது.

உலக வரலாறு கண்டிராத மாபெரும் மனிதப் பேரழிவு முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்டபோதும் சரி அதன்பின்னரும் சரி உலகம் தீர்க்கமான நடவடிக்கையேதும் எடுக்கவில்லையென்பது தமிழ்மக்களை வேதனையின் விளிம்பில் கொண்டுபோய் விட்டுள்ளது.

போரில் வெற்றிபெற்றதாக மமதையோடு அறிவித்த சிங்களப் பேரினவாத அரசு அதன்பின்னர் நடந்துகொண்ட நடந்துகொள்ளும் முறையும் மனித விழுமியங்களுக்கு அப்பாற்பட்டது. தமிழினத்தின் ஆன்மாவையே சிதைக்கும் நடவடிக்கையில் சிங்கள அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. எமது மக்கள் தமது உயிரினும் மேலாக மதித்துப் பூசித்துவந்த மாவீரர் துயிலுமில்லங்களை முற்றாக அழித்து அவை இருந்த இடமே தெரியாத வண்ணம் மாற்றியமைத்துள்ளது. தமிழர் பகுதிகளில் எஞ்சியுள்ள பண்டைய வரலாற்றுச் சின்னங்களையும் தேடித்தேடி அழித்தும் வருகின்றது.

தமிழர் தாயகத்தில் புதிது புதிதாக முளைத்துவரும் புத்தர் சிலைகளும் விகாரைகளும் எமது தேசிய அடையாளத்தைச் சிதைக்கும் நோக்கோடு முன்னெடுக்கப்பட்டுவரும் மறைமுக நடவடிக்கையே. இவை தனியே மத அடையாளங்கள் என்பதையும் தாண்டி எமது தாயகக் கோட்பாட்டைச் சிதைக்கும் நோக்கோடு ஆண்டாண்டு காலமாக சிங்கள – பெளத்த பேரினவாத சக்திகளால் முன்னெடுக்கப்பட்டு வந்த சதித்திட்டங்களே. எமது விடுதலை இயக்கம் தாயகத்தில் பலம்பெற்றிருந்தபோது முடக்கப்பட்டிருந்த இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பு தற்போது தீவிரமாக எமது தாயகத்தில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அத்தோடு புதிய தொல்பொருள் ஆய்வுகளும் வரலாற்று ஆய்வுகளும் சிங்களப் பேரினவாதத்தால் திட்டமிட்டுப் புனையப்படுகின்றன. தமிழரின் பாரம்பரிய வாழ்விடங்கள் சிங்களவர்களின் பூர்வீக பூமி என்று நிறுவும் நோக்குடன் அப்பட்டமான வரலாற்றுத் திரிப்புக்களையும் புனைகதைகளையும் சிங்களப் பேரினவாதம் கட்டவிழ்த்து விடத் தொடங்கியுள்ளது. தொல்பொருள் ஆய்வுகள் என்று கூறிக்கொண்டு நடாத்தப்படும் வரலாற்றுத் திரிப்புகளும் தமிழரின் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாடுகளும் தமிழர் தாயகத்தின் எல்லைகளை மாற்றியமைக்கும் நிர்வாக மாற்றங்களுமென சிங்களப் பேரினவாதம் முழுமூச்சாக ஈடுபட்டு வருகின்றது. இவ்வாறு தமிழரின் தாயகக் கோட்பாட்டைச் சிதைக்கும் வகையில் சகலவிதமான சதித்திட்டங்களையும் வழிமுறைகளையும் சிங்கள அரசு கைக்கொள்கிறது.

புனர்வாழ்வு அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர் தாயகப்பகுதிகளில் சிறிலங்கா அரசு நிகழ்த்திக்கொண்டிருப்பது நிலஆக்கிரமிப்பே தவிர தமிழ்மக்களுக்கான நிம்மதியான வாழ்வாதாரமன்று. ஆங்காங்கே சிங்களக் குடியிருப்புக்களும் படைக் குடியிருப்புக்களும் நிறுவப்பட்டுக் கொண்டிருப்பது தமிழ்மக்களுக்கான அபிவிருத்தியல்ல. அபிவிருத்தியென்ற போர்வையில் நில ஆக்கிரமிப்பை ஒருபுறம் நிகழ்த்திக்கொண்டு தமிழரின் இனப்பரம்பலைச் சிதைத்து இலங்கைத்தீவை முழுமையான ஒரு சிங்கள – பெளத்த நாடாக்கும் கைங்கரியத்தைத் திட்டமிட்டுச் செயற்படுத்துகிறது சிங்களப் பேரினவாத அரசு.

தமிழீழ மக்களின் ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் சிறிலங்கா அரசு தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டிருக்கிறது. தமிழ்மக்கள் மீதான தனது இரும்புப்பிடியைப் பலவழிகளிலும் அது இறுக்கி வருகின்றது. தமிழரின் அரசியல் அபிலாசைகள் எவற்றையும் பொருட்படுத்தாது தான் நினைத்ததை மட்டுமே நடைமுறைப்படுத்துவதோடு தமிழரின் மீது தனது விருப்புக்களைத் திணித்துக் கொண்டிருக்கிறது சிறிலங்கா அரசு.

தமிழரின் தாயக நிலப்பரப்பு முழுவதையும் சிறிலங்கா ஆயுதப்படைகளின் ஆக்கிரமிப்பில் வைத்திருப்பது மட்டுமல்லாமல் ஓய்வுபெற்ற படையதிகாரிகளை தமிழ்மக்களின் தாயகப்பகுதி எங்கணுமுள்ள மக்கள் நிர்வாகக் கட்டமைப்புக்களுக்கு அதிகாரிகளாகவும் மாகாணங்களின் ஆளுநர்களாகவும் அமர்த்தியுள்ளது. இந்தப் படையதிகாரிகள்தான் கடந்த பல ஆண்டுகளாக தமிழ்மக்கள் மீதான போரின்போது அனைத்து மனித உரிமைகளையும் மீறி தமிழர்களைக் கொடுமைப்படுத்திக் கொன்று குவித்தவர்கள். போர்க்குற்றங்கள் தொடர்பில் பன்னாட்டு மனித உரிமை அமைப்புக்கள் எழுப்பிய எதிர்ப்புக்குரல்கள் எவற்றையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப் போவதில்லை என்பதையே சிறிலங்கா அரசின் இச்செயற்பாடுகள் உணர்த்துகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையால் நிறுவப்பட்டுள்ள போர்க்குற்ற விசாரணைக்கான ஆலோசனைக்குழு எமது மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஊட்டியுள்ளது. போர்க்குற்ற விசாரணையின் ஊடாக எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் வெளிக்கொண்டு வரப்படுவதோடு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்பதும் எமது இனத்தின் விடுதலைக்கான அங்கீகாரத்தை உலகமட்டத்தில் பெற அது உதவ வேண்டுமென்பதும் எமது மக்களின் அவாவாகும்.

சிங்களப் பேரினவாத அரசு ஐக்கிய நாடுகள் சபையினதும் உலக நாடுகளினதும் முயற்சிகளைப் புறக்கணிப்பதோடு அவற்றை மூர்க்கத்தனமாக எதிர்த்தும் வருகின்றது. கூடவே மனித உரிமை அமைப்புக்களினது வேண்டுகோளையும் கரிசனைகளையும் உதாசீனப்படுத்துகிறது. சுயாதீனமான விசாரணையொன்று நடைபெறுவதை எப்பாடு பட்டாவது தடுத்து விடுவதில் சிறிலங்கா அரசு குறியாகவே இருக்கின்றது.

இவ்வாறு ஒருபக்கம் சுயாதீனமான பன்னாட்டு விசாரணை முயற்சிகளை நிராகரித்துக் கொண்டு கண்துடைப்புக்காக தானே ஒரு விசாரணைக்குழுவை அமைத்துள்ளது. இப்படியான விசாரணைக்குழுக்கள் தொடர்பில் தமிழர்களுக்கு மிக நீண்டகால அனுபவமுண்டு. அவ்வகையிலேயே சிறிலங்கா அரசு அமைத்திருக்கும் “கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு” என்ற நாடகமும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. சிறிலங்கா அரசின் இந்தச் சூழ்ச்சியில் உலகநாடுகளும் மனித உரிமை அமைப்புக்களும் வீழ்ந்து விடாமலிருக்க வேண்டும் என்பதே தமிழ்மக்களின் வேண்டுகோளாகும்.

எமது விடுதலைப் போராட்டத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் போர்நிறுத்தங்களை மேற்கொண்டுள்ளோம். சமாதானப் பேச்சுக்களில் பங்கெடுத்துள்ளோம். இக்காலகட்டத்தில் எதிரி மேற்கொள்ளும் சூழ்ச்சிகளைத் தெரிந்துகொண்டும் நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் பேச்சுக்களுக்குச் சென்றுள்ளோம். அமைதிப் பேச்சுக்கள் தொடர்பில் உலகநாடுகள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எப்போதும் நாம் மதிப்பளித்தே வந்துள்ளோம். அவ்வகையில் 2002 ஆம் ஆண்டு நோர்வே தலைமையிலான சமாதான ஏற்பாட்டாளர்களின் துணையோடு சிறிலங்கா அரசுடனான புரிந்துணர்வு உடன்படிக்கையை நாம் ஏற்றுக்கொண்டோம்.

சிங்களப் பேரினவாத அரசாங்கங்களோடு தமிழ்த் தலைமைகள் கடந்த காலங்களில் ஏற்படுத்திய பல உடன்படிக்கைகள் காலத்துக்குக் காலம் சிங்கள அரசாங்கங்களால் தூக்கி வீசப்பட்டன. தமிழர்களாகிய நாம் எப்போதுமே எந்த உடன்படிக்கையிலிருந்தும் நாமாக விலகிக் கொண்டதில்லை. அதேபோலவே 2002 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையிலிருந்தும் இறுதிவரை வெளியேறாமலே இருந்தோம்.

ஆனால் மகிந்த இராஜபக்ச அரசு அவ்வுடன்படிக்கையைக் கிழித்தெறிந்து நோர்வேயின் நடுநிலைமையையும் அசட்டை செய்து தமிழர் தாயகமெங்கும் பெரும்போரை நடாத்தி மாபெரும் மானுட அழிவைத் தமிழர்மேல் கட்டவிழ்த்து விட்டது. தமிழர் தேசத்தில் தமிழர்களை ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையில் வாழ்பவர்களைப் போலவே இப்போது நடாத்தி வருகின்றது. மகிந்த இராஜபக்ச அரசானது நோர்வே உட்பட்ட இணைத்தலைமை நாடுகளின் நடுநிலைத் தன்மையைக் கேலிக்குரியதாக்கி இருக்கின்றது.

தேசிய இனங்களின் விடுதலையென்பது பன்னாட்டு ஒழுங்குவிதிகளுக்கு உட்பட்டதென்பதை நாம் நன்கு அறிவோம். பன்னாட்டு ஒழுங்குவிதிகளை மதித்தே நாம் எமது விடுதலைப் போராட்டத்தை மேற்கொண்டு வந்திருக்கின்றோம். உலக நாடுகளினது ஆலோசனைகளுக்கும் கருத்துக்களுக்கும் மதிப்பளித்தே வந்துள்ளோம்.

எமது போராளிகள் பன்னாட்டு மனிதாபிமான ஏற்பாட்டாளர்களின் வாக்குறுதிகளை ஏற்று மேற்கொண்ட முயற்சிகள் சிங்கள அரசால் கொடூரமான முறையில் எதிர்கொள்ளப்பட்டன. எமது போராளிகள் பலர் உலக நியதிக்குப் புறம்பாகக் கொல்லப்பட்டதோடு ஏனையவர்கள் இன்றும் சிறைக்கூடங்களில் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவது மட்டுமல்லாமல் தொடர்ச்சியாகக் காணாமற் போய்க்கொண்டும் இருக்கிறார்கள்.

பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் சிறிலங்கா அரச பயங்கரவாதச் சிறைகளில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதும் காணாமற்போவதும் பன்னாட்டு மனித உரிமை அமைப்புக்களுக்குத் தெரியாமலிருக்க முடியாது.
எமது அன்புக்குரிய தமிழ்பேசும் மக்களே

எமது விடுதலைப் போராட்டம் இப்போது பல சவால்கள் நிறைந்த நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் காலத்துக்கேற்ப உலக ஒழுங்குகளுக்கு அமைய மாற்றங்களைச் செய்து அவற்றை எமக்குச் சாதகமாக்கி தமிழீழ விடுதலையை வென்றெடுப்பதற்கான போராட்டத்தை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்போம்.

தங்கள் பூர்வீக நிலத்தில் இறைமையோடு வாழ்ந்த ஒரு தேசிய இனம் அழிக்கப்படும்போது தம்மைத் தாமே காப்பாற்றிக்கொள்ளப் போராடுவது பயங்கரவாதம் ஆகாது. எங்களின் விடுதலைப் பயணத்தில் உலகநாடுகள் நியாயத்தைப் புரிந்துகொள்ளாமல் எமது அமைப்பை பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட்டதை வேதனையோடு பார்க்கின்றோம்.

சிங்களப் பேரினவாத அரசின் அரசபயங்கரவாதத்துக்கு எதிராக எமது மக்களது அரசியல் முன்னெடுப்புக்களை நாம் சுதந்திரமாக முன்னெடுப்பதற்கு உலகநாடுகள் எம்மைப் புரிந்துகொண்டு நீதியான நியாயமான முறையில் வழிவிட வேண்டுமென்று அன்போடு வேண்டி நிற்கின்றோம்.

இந்திய தேசத்தின் மீது ஆழ்ந்த பற்றுதல் காலங்காலமாக தமிழ் மக்களுக்குண்டு. எமது விடுதலைப் போராட்டமும் இதற்கு எந்தவகையிலும் எதிரானதன்று. எமது மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் இந்தியாவின் தேசிய நலனோடு பின்னிப் பிணைந்துள்ளன.

எமது ஆயுதப்போராட்டத்தின் பின்னடைவும் சிங்கள அரசின் படை மேலாதிக்கமும் தமிழர் தேசத்தில் அமைக்கப்படுகின்ற பெரும் சிங்களப் படைத்தளங்களும் அத்தளங்களை அமைக்க உதவி புரியும் நாடுகளின் கபடத்தனமும் இந்திய தேசத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளன. இந்தியாவோடு எம்மக்களுக்கு இருந்த உறவு சிங்கள ஆட்சியாளர்களின் துப்பாக்கி முனையில் சிறுகச்சிறுக சிதைவடைந்து போகாமலிருப்பதை இந்தியாவே உறுதிசெய்ய வேண்டும்.

எமது மக்களின் அவலங்களைப் பார்த்து துடியாய்த் துடித்த தமிழக உறவுகளின் உணர்வும் எமக்கு ஆதரவாக அவர்கள் நடாத்திய போராட்டங்களும் எமது மக்களுக்கு நம்பிக்கையையும் எழுச்சியையும் ஊட்டியுள்ளன. கடல் எம்மைப் பிரித்தாலும் மொழியால் உணர்வால் நாம் தனித்தவர்களில்லை என்பதை தமிழ்நாட்டு எழுச்சிப் போராட்டங்கள் எங்களுக்கு உணர்த்தி நிற்கின்றன. இப்போராட்டங்களின்போது தம்மையே எரித்து தம்முயிரை ஈகம் செய்த வீரமறவர்களையும் இந்நாளில் நினைவு கூறுகின்றோம்.

மேலும் சிங்களப் பேரினவாத அரசாங்கத்தால் முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட பெரும் இனப்படுகொலையைக் கண்டித்து எமக்கு ஆதரவாகப் போராட்டங்களை நடாத்திய தமிழ்பேசும் ஏனைய நாட்டவரையும் அத்தோடு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உண்மையைப் புரிந்துகொண்டு எமது மக்களோடு இணைந்து போராட்டங்களில் பங்கெடுத்த ஏனைய இனத்தவரின் மனிதநேயத்தையும் மதிப்போடு நினைவு கொள்கின்றோம்.

எமது அன்புக்குரிய புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களே

தாயக மண்ணில் எமது மக்கள் சிங்களப் படையினரின் திறந்தவெளிச் சிறைக்குள்ளேயே வாழ்கின்றார்கள். இந்நிலையில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெரும்பளுவை இப்போது நீங்களே சுமக்க வேண்டியுள்ளது. பேரவலத்தைச் சந்தித்து நிற்கும் எமது தாயகத்து உறவுகளின் துயரத்தைத் துடைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பெரும் பொறுப்பும் உங்களிடமே உள்ளது.

நாங்கள் ஒரு தேசிய இனம் என்பதை உலகநாடுகள் பல ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் தமிழ்மக்கள் வாழ்கின்ற நாடுகளில் எமது விடுதலைப் போராட்டத்தைக் கட்டி வளர்க்க வேண்டிய பொறுப்பு இளம் சந்ததியினரின் கைகளிலும் தங்கியுள்ளது.

சிறிலங்கா அரசின் பயங்கரவாத முகத்தை உலகின் கண்முன் வெளிப்படுத்தி சாத்தியமான வழிகளில் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். மொழியால் இனத்தால் பண்பாட்டால் ஒன்றித்து ஒற்றுமையோடும் தேசிய உணர்வோடும் உலகத் தமிழர்கள் போராட வேண்டுமென்பதே எமது அவாவாகும்.

எமது அன்புக்குரிய உலகத்தமிழ் உறவுகளே

சிங்கள அரசானது ஒருபோதும் தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது. எம்மினத்தை அடக்கி ஒடுக்கி இலங்கைத்தீவு முழுவதையும் சிங்கள – பெளத்த நாடாக்க வேண்டுமென்று தீவிரமாய்ச் செயற்படுகின்றது. சிறிலங்கா அரசானது தமிழரின் அரசியல் வேட்கையை முழுமையாக அழித்து தமிழரின் தாயகக் கோட்பாட்டைச் சிதைக்கும் நடவடிக்கையைத் தீவிரமாக மேற்கொண்டுள்ளது.

தமிழர்களின் அரசியல் உரிமையை சிதறடிக்கக்கூடிய திட்டங்களையே தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது. போர் ஓய்ந்ததாகக் கூறிக்கொள்ளும் இந்நிலையிலும்கூட தமிழர்களுக்கான எந்தவொரு நியாயமான தீர்வுத்திட்டத்தையும் வழங்க சிறிலங்கா அரசு முன்வரவில்லை. அடக்குமுறையென்ற ஒரேயொரு தீர்வை மட்டுமே சிங்கள தேசம் தமிழ் மக்களுக்கு விட்டு வைத்திருக்கின்றது.

இந்நிலையில் தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. இலங்கைத்தீவில் தமிழரும் சிங்களவரும் சேர்ந்து வாழ முடியாதென்ற நிலை முன்னெப்போதையும்விட இப்போதுதான் மேலும் வலுவடைந்துள்ளது.

அன்பான தமிழீழ மக்களே

எமது விடுதலைப் போராட்டப் பயணத்தில் சாவுகளையும் அழிவுகளையும் இடைவிடாத துன்பங்களையும் கண்டு நாம் சோர்ந்துவிடப் போவதில்லை.

எமது மாவீர்களின் கல்லறைகளை இரும்புக்கரம் கொண்டு இடித்தழித்து அவர்களின் வரலாற்றை அழித்துவிட முடியாது. ஒவ்வொரு தமிழரின் நெஞ்சத்தினுள்ளும் மாவீரர்கள் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

மாவீரர்கள் சத்திய வேள்விக்காய் தம்மை ஆகுதியாக்கியவர்கள். இரத்தமும் சதையும் கலந்து எமது விடுதலைப் போராட்டத்தைச் செதுக்கிய சிற்பிகள். அவர்களின் இலட்சிய உறுதி என்றும் எம்மை வழிநடாத்தும்.

இலட்சியத்தில் ஒன்றுபட்டு அடக்குமுறைக்கெதிராகப் போராடும் மக்களை எந்தவொரு ஆக்கிரமிப்புச் சக்தியாலும் அடக்கிவிட முடியாது. இந்த வரலாற்று நியதிக்கமைய உலகத் தமிழர்களின் முகவரியை வீரத்தால் பதித்துவிட்டுச் சென்ற அந்த வீரமறவர்களை நினைவுகூறும் இந்நாளில் விடுதலையென்ற எமது சத்திய இலட்சியத்துக்காகப் போராட உறுதி கொள்வோமாக.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

தலைமைச் செயலகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்.


************************************************************************
கண்டோம்நாம் தமிழ்குலத்தில் மறவர்தமை
. . . . களத்தினிலே வீழ்ந்தவர்கள் விதைகளானார்
உண்டோம்நாம் உணர்வோடு தன்மானந்தன்னை
. . . .உதிரத்தில் கலந்ததனால் உறுதிகொண்டோம்
அண்டம்நாம் அகிலத்திலினி யாரையுமே
. . . . அஞ்சுதல்லெனு மிழிநிலையிங்கு கொன்றோம்
வேண்டோம்நாம் வெந்தபுண்ணில் வேல்பாய்தற்கு
. . . . வேடிக்கை யாயுமினி வீழமாட்டோம்..!!
- நன்றி: தர்ஷி-



Let us all remember the fallen heroes of ours.

The fight 4 freedom is still on; we shall never give up.

These men and women gave their lives selflessly.

Let us all take a vow that we will never eva forget'em

we honour these souls; they died to free Mother Eelam

and know that they've become angels in the heavens.

The memory of them will live on forever

We will carry their dreams in our hearts.

They are among the clouds; will vist us with the breeze.

So as long as last Thamil alive; they will be remembered.

We will hold them in our hearts; will treasure their memories.

As long as we can breathe; our heroes will never be apart.

So as we buried you with honor; we will grieve, then heal & pray.

Even though we'll miss them, we are united in the name of our heroes

- Surya-



மணம் வீசும் பூக்கள்!

ஈழம் எங்கள் நாடடா, ஈன்ற அன்னை தமிழடா!

நாடு எங்கள் கண்ணடா, வீரம் எங்கள் நெஞ்சடா!

மானம் காத்த மறவர் எங்கள் மடிவில் நூறு கதையடா!

வானம் கூட எம்மைக்கண்டு வியந்த காலம் உண்டடா!

கானகமும் எம்மை காத்த கதைகள் உண்டு கேளடா!

எங்கள் மண்ணில் நாங்கள் வாழும் வாழ்க்கை கண்ட பேரடா

வாழவேண்டும் ஈழவன் போல் எண்று சொன்னதுண்டடா!

எம் இனத்தின் ஆணி வேரை அறுத்து விட எண்ணியே

சிங்களமும் சிந்தை கொண்டு செய்த பாவம் நூறுடா!

பார்த்துப் பார்த்து அன்னை ஈன்ற பிஞ்சுகளை கூடடா

சிங்களம் தன் காலில் போட்டு கசக்குவதும் உண்டடா!

எம்மை காக்க அவதரித்த உத்தமன் நம் அண்ணண்டா!

அண்ணண் வழி பாதையிலே அண்ணண் அக்கா பலரடா!

வீரம் எண்ற வார்த்தை கூட இவரை கண்ட பின்னடா

வீறு கொண்டு வேங்கையாக வாழ்த்து சொன்னதுண்டடா!

இவர்தனை போல் பாரதநில் தியாகி உண்டோ சொல்லடா!

மெழுகுவர்த்தி கூட எங்கள் அண்ணண் அக்கா முன்னிலே

நெஞ்சுருகி தலை சாய்த்து நன்றி கூறும் கேளடா!

இவரைக்கொண்ட எமது மண்ணை நாம் இழக்கக் கூடுமோ?

இவரைக் கொன்ற அரக்கர்த்னை நாம் மறக்க கூடுமோ?

இறக்க வில்லை நீங்கள் எங்கள் உயிர்கள் அண்ணண் அக்காவே!

புதைய வில்லை நீங்கள் மண்ணில் விதைக்கப்பட்ட விதைகளே!

மலரும் வரை ஈழம் எங்கள் பாதை உங்கள் பாதையே!

மலர்ந்த பின்னும் மனதில் நீங்கள் மணம் வீசும் பூக்களே!

எங்கள் மனம் தேடும் பூக்களே! வீர உரம் போடும் நூல்களே!

வாழ்க தமிழ்! மலர்க தமிழ் ஈழம்!


நன்றி:

மனம் வீசும் பூக்கள்!


இவன்

ஈழன் இளங்கோ

சிட்னி, அவுஸ்திரேலியா.
http://www.facebook.com/Eelan.Elanko?v=app_2347471856&ref=profile



மாவீரர்கட்கான உங்கள் நினைவெட்டுக்களை இணைத்துக் கொள்ளுங்கள்.

pls leave ur remembrance messages in the comments box



No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis