.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Monday, 10 October 2016

புயலுக்கு முன்னால்…”ஜெயலலிதா அம்மு முதல் அம்மா வரை…. (பகுதி-2)

காலை 9.00 மணி.


அடிக்கடி எம்.ஜி.ஆருடைய முகத்தையே உற்றுப் பார்ப்பதும் பின்னர் எங்கேயோ தூரத்தில் வெறித்துப் பார்ப்பதுமாக இருந்த ஜெயலலிதா , அவ்வப்போது தன் கர்சீப்பால் முதல்வரின் முகத்தைச் சரிசெய்து கொண்டிருந்தார்.


யார் யாரோ வந்து ஜானகியின் சொந்தங்களைக் கட்டிப் பிடித்து ஆறுதல் சொன்னார்கள்.


யாரும் ஜெயலலிதாவைக் கண்டுகொள்ளவில்லை.


பொதுமக்கள் பார்வைக்காக எம்.ஜி.ஆரின் உடல் , மேடைக்கு கொண்டு வரப்பட்டது.


ஸ்டிரெச்சரிலிருந்த எம்.ஜி.ஆரின் தலைப் பகுதியை கையில் ஏந்தியபடியே அந்தச் சரிவான மேடைக்கு வந்த ஜெயலலிதா , கடைசி வரை ஸ்டிரெச்சரை ஒட்டியே நின்றுகொண்டிருந்தார்.


தூர்தர்ஷனின் நேரடி ஒளிபரப்பில் எம்.ஜி.ஆரைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் முகம்தான் பளிச்சென்று தெரிந்தது.


காலை 10.00 மணி.


அண்ணா சாலையிலிருந்த கருணாநிதியின் வெண்கலச் சிலைக்கு அன்று கஷ்டகாலம்.


ஐந்தாறு பேர் பீடத்தில் ஏறி , கடப்பாரையால் சிலையின் முதுகுப் பக்கத்தில் ஒரு துளை போட்டார்கள்.


சைக்கிள் டயரை கொளுத்திப் போட்டு கடப்பாரையால் இடிக்க , சிலை சரிய ஆரம்பித்தது. ரோட்டோரமாக நின்று அந்தப் புகைப்படக்காரரின் காமிராவில் ஃபிளாஷ் மின்னியது.


நுங்கம்பாக்கத்தில் ஒரு டீக்கடையில் தகராறு.


கடைக்காரர் காசு கேட்க , ‘ தலைவரே போயிட்டாரு… காசா கேட்கிறே ?’ அன்று அடித்துத் துவம்சம் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான டீக்கடையில் அதுவும் ஒன்று.


அண்ணா சாலையில் நிறைய கடைகளில் கதவுகள் உடைந்து , விளக்குகள் நொறுங்கிக் கிடந்தன.


சென்னை , கலவர பூமியாக மாறியிருந்தது!


மாலை 5.00 மணி.


ஜெயலலிதாவின் அருகிலிருந்த அந்த போலீஸ் அதிகாரி சொன்னார். ‘ மேடம் , காலையிலிருந்து நின்னுக்கிட்டே இருக்கீங்க… கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்குங்க மேடம்!


’. ஜெயலலிதா அதைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.


அசையாமல் அங்கேயே நின்று மாலையை சரிசெய்து கொண்டிருந்த ஜெயலலிதாவின் கையில் நகக்கீறல்கள்.


எம்.ஜி.ஆரின் தலைமாட்டில் நிற்கக் கூடாது என்று எதிர்ப்பாளர்கள் அரங்கேற்றிய தள்ளுமுள்ளுவால் கிடைத்தவை.


இரவு 11.00 மணி.


எம்.ஜி.ஆரின் உடலைப் பார்க்க , நான்கு நான்கு பேராக நின்று கொண்டிருந்த பொதுமக்களின் கியூ , ராஜாஜி பவனில் ஆரம்பித்து சாந்தி தியேட்டர் வரை நீண்டு கொண்டே போனது.


நெருங்கிய கட்சிக்காரர்கள் நிறையப் பேர் ஓய்வெடுக்க வீட்டுக்குப் போயிருந்தார்கள்.


போயஸ் தோட்டத்துக்குத் தனது காரில் கிளம்பிய ஜெயலலிதா , மறுநாள் அதிகாலை நான்கு மணிக்குத் திரும்பி வந்தார்.


மீண்டும் அதே தலைமாட்டுக்குப் பக்கமாக ஜெயலலிதாவுக்கு இடம் கிடைத்தது.


பிற்பகல் 12 மணி. எம்.ஜி.ஆரின் உடல் ராஜாஜி மண்டபத்தின் உட்புறம் வைதீக காரியங்களுக்காக எடுத்துச் செல்லப்பட்டது.


டெல்லியிலிருந்து நிறையப் பேர் வந்திருந்தார்கள்.


ஒரு பக்கம் சடங்குகள் நடந்து கொண்டிருக்க , இன்னொரு பக்கம் கட்சிக்காரர்கள் கூடிக்கூடி பேசிக் கொண்டிருந்தார்கள்.


அவர்கள் பேச்சு , மண்டபத்தில் இருந்து ஜெயலலிதாவை எப்படி வெளியேற்றுவது என்பதைப் பற்றியதாகத்தான் இருந்தது.


ராணுவ டிரக்கில் எம்.ஜி.ஆரின் உடல் ஏற்றப்பட்டது.


எம்.ஜி.ஆரின் முகத்தை மறைத்த மாலையைச் சரி செய்ய ஜெயலலிதா டிரக்கில் ஏற , அடுத்த சலசலப்பு ஆரம்பமானது.


ராஜாஜி பவனில் உடலுக்குப் பக்கத்தில் நிற்கவே அனுமதிக்காதவர்கள் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு சும்மாவா இருப்பார்கள் ?


ஜெயலலிதா டிரக்கில் ஏற, ஒரு ராணுவ அதிகாரி கை கொடுத்து உதவி செய்யவே , கோபமான ஜானகியின் சொந்தங்கள் ஜெயலலிதாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு முந்திக்கொண்டு டிரக்கில் ஏறினார்கள்.


ஏறுவதற்குச் சிரமப்பட்டுக் கொண்டிருந்த ஜெயலலிதாவின் நெற்றியில் கை வைத்து யாரோ தள்ளிவிட்டார்கள்.


டிரக்கின் பிடி நழுவி ஜெயலலிதா தள்ளாடினார். கீழே விழவிருந்த ஜெயலலிதாவை இன்னொரு ராணுவ அதிகாரி தாங்கிக் கொண்டார். ‘


 ஜெயலலிதாவை வெளியேற்றுவதிலேயே மும்முரமாக இருந்தனர்  அவருக்கு எதிரான ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள்.


தூர்தர்ஷனின் நேரடி ஒளிபரப்பு காமிரா எல்லாவற்றையும் பதிவு செய்து கொண்டிருந்தது.


விரக்தியும் அவமானமும் உறுத்தவே , கூட்டத்தைவிட்டு விலகி தனியே நடக்க ஆரம்பித்தார் ஜெயலலிதா.


நிறைய சிந்தனையுடன் இருண்டு போன முகத்தோடு போயஸ் தோட்டத்துக்குத் திரும்பி வந்தவர் , தன் அறைக் கதவை அடைத்துவிட்டு உள்ளே போனார்.


திரும்பி வெளியே வர நான்கு மணி நேரமானது.


ஜெயலலிதாவுக்கு எதிர்காலம் புதிராக இருந்தது. கண்ணுக்குத் தெரிந்த தூரம் வரை வெளிச்சமில்லை.


எம்.ஜி.ஆரை நம்பி அரசியலுக்கு வந்தவரை இப்போது தனிமை விடாமல் துரத்தியது.


எம்.ஜி.ஆரின் கடைசி உத்தரவு என்கிற  பெயரில் சொல்லப்பட்ட விஷயங்கள் எல்லாம் ஜெயலலிதாவை சோர்ந்துபோக வைத்திருந்தன.


கட்சி சார்பாகக் கொடுக்கப்பட்டு இருந்த டெலிபோனும் பறிக்கப்பட்டிருந்தது.


எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதாவை சந்திக்கக் கூடாது என்கிற கண்டிப்பான உத்தரவு ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டு, கட்சிக்குள் அவரைக் கட்டம் கட்டி ஒதுக்கி வைத்திருந்தார்கள்.


இத்தனைக்கும் அவர் , கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தவர். அமைச்சர்கள் , எம்.எல்.ஏ.க்கள் என புடைசூழ வாழ்ந்தவர்.


ஆனால் , இப்போது ஜெயலலிதா வெறும் தனிமரம்.


மறுநாள் சனிக்கிழமை , ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் போயஸ் தோட்டத்தில் கூடினார்கள்.


இறுதி ஊர்வலத்தில் நடந்தது என்ன என்பதைப் பற்றி மீடியா கிசுகிசுத்தபோது , ‘ அந்தப் புனிதமான சூழ்நிலையை மாசுபடுத்தி சர்ச்சையாக்க விரும்பவில்லை ’ என்று சொன்னார்.


ஆனால் , அறிக்கையின் கடைசிப் பகுதி அவருடைய அதிருப்தியை வெளிப்படுத்தியது.


‘ இறுதி ஊர்வலத்தில் அமைச்சர்கள் எல்லாம் வசதியாகச் சென்றபோது , அப்பாவித் தொண்டர்கள் இரண்டாந்தரமாக நடத்தப்பட்டார்கள்!


’ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை உண்மையில் அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது.


எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு , தன்னை எளிதாக ஓரம் கட்டிவிடலாம் என்று நினைத்தவர்களின் வயிற்றில் உடனடியாகப் புளியைக் கரைத்தவர் ஜெயலலிதா.


இது முடிவல்ல ; ஆரம்பம்தான் என்பதை ஆணித்தரமாக உணர்த்தியதிலிருந்துதான் தொடங்குகிறது அவருடைய அரசியல் பயணம்.


பட்ட அடிகளும் அவமானங்களும் கொஞ்சநஞ்சமல்ல. மீறி எழுந்துநின்று நினைத்ததை சொன்னதைச் செய்து காட்டினாரே , அது.


ஆயிரம் குற்றச்சாட்டுகள். லட்சம் விமரிசனங்கள். கணக்கே இல்லாத கண்டனக் கணைகள்.


அதனாலென்ன ?  எம்.ஜி.ஆருக்குப் பின் அ.தி.மு.க. என்னாகும் என்கிற கேள்வியைத் திருத்தி எழுதி , ஜெயலலிதாவுக்குப் பின் அ.தி.மு.க. என்னவாகும் என்று கேட்கச் செய்த வகையில் அவரது வெற்றி கணிசமானதுதான். சந்தேகமில்லை.


நகைக்கடை விளம்பரம்போல் உடன்பிறவா சகோதரியுடன் கொடுத்த போஸ் வெளியே வந்ததால் உண்டான பரபரப்பு ,


நாலாபுறங்களிலும் ஊழல் , ஊழல் என்று நீதிமன்றங்களில் எக்கச்சக்க வழக்குகள்.


இந்திய சரித்திரத்திலேயே முதல்முறையாக அமைச்சர்களைச் சேவகர்கள்போல் கைகட்டி , வாய்பொத்தி , காலில் விழச் செய்தவர் என்ற பெயர்.


பல அதிரடி நடவடிக்கைகள் அதனால் விமரிசனங்கள், மகாமகக் குளத்தில் தோழியுடன் ஜலக்ரீடை செய்த வகையில் அப்பாவி உயிர்கள் பல பலியாகக் காரணம் இன்னும் சொல்லலாம், அடுக்கிக்கொண்டே போகலாம்.


ஆனால் மறுக்க முடியாதது ஒன்றுதான். இன்றும் ஜெயலலிதா இருக்கிறார். அரசியலில் இருக்கிறார்.


அதே தீவிரமுடன். அதே உக்கிரமுடன். அதே வேட்கையுடன்.


எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின் மு. கருணாநிதிக்கு ஒரு தேர்ந்த எதிர்ப்புச் சக்தி இல்லாமல் போய்விட்டதோ என்று ஒட்டுமொத்தத் தமிழகமும் நினைத்த வேளையில் , யாரும் சற்றும் எதிர்பாராவிதத்தில் முன்னேறி மேலே வந்து மல்லுக்கு நின்று ஆட்டிப்படைக்கும் ஜெயலலிதா , சந்தேகமில்லாமல் தமிழக அரசியல் வரலாறில் ஓர் அத்தியாயம்.


எம்.ஜி.ஆரா ? கருணாநிதியா? என்றிருந்த கேள்வியை ஜெயலலிதாவா ? கருணாநிதியா? என்று ஜெ. மாற்றிப் பலகாலம் கடந்துவிட்டது.


இன்று ஜெயலலிதா ஆட்சியில் இருந்தாலும் இல்லாது போனாலும் அந்தக் கேள்வியின் உயிர் அதே துடிப்புடன் அப்படியேதான் இருக்கிறது.


எப்போது வேண்டுமானாலும் அவர் மீண்டும் எழுந்து வந்துவிடுவார் என்கிற எண்ணம் எப்போதும் கலைஞருக்கு உண்டு என்பதை மறுக்க முடியாது.


தி.மு.க.வின் அடுத்தத் தலைவர் யார் என்பதிலும் , கழகத்தின் அடிமட்டத்தில் உருவாகி , வேரோடி , வளர்ந்து நிற்கும் சில்லறைப் பூசல்களிலும் ஆர்வம் செலுத்தும் தமிழக மக்கள் ஒருபோதும் ஜெயலலிதாவுக்குப் பிறகு அ.தி.மு.க.வின் தலைவர் யார் என்பது குறித்துச் சிந்தித்ததில்லை.


அப்படியொரு சிந்தனைக்கு ஜெயலலிதா இன்றுவரை இடம் வைத்ததில்லை. அ.தி.மு.க. வேறு , தான் வேறு என்று அவர் நினைத்ததில்லை.


தனக்குப் பிறகு கட்சி என்று சிந்தித்ததுமில்லை.


அம்மா என்றும் அரக்கி என்றும் இரண்டு எல்லைகளில் எப்போதும் பேசப்படுகிற ஜெயலலிதா.


தோழி குடும்பத்துக்கும் தோதான ஆள்களுக்கும் அள்ளிக்கொடுப்பவர் என்று எப்போதும் விமரிசிக்கப்படும் ஜெயலலிதா.


காலை வார நினைப்பவர்களிடம் கருணையே காட்டாதவர் என்று பேசப்படும் ஜெயலலிதா.


எம்.ஜி.ஆரின் சரியான அரசியல் வாரிசு என்று சிலராலும் , எம்.ஜி.ஆர். இருந்த இடத்தை அசிங்கப்படுத்திவிட்டார் என்று சிலராலும் எப்போதும் வருணிக்கப்படும் ஜெயலலிதா.


சந்தேகமே இல்லை. எப்படி கருணாநிதியை விலக்கிவிட்டுத் தமிழக அரசியல் பற்றிப் பேச முடியாதோ , அப்படித்தான் ஜெயலலிதாவை விலக்கிவிட்டும் பேச முடியாது.


அப்பா! என்ன வாழ்க்கை அது! புயலைத் தவிர வேறொன்றை உதாரணம் சொல்லவே முடியாது.


தொடரும்..


– ஜெ. ராம்கி-

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis