."ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Saturday, 26 November 2016

முதல் முஸ்லீம் மாவீரர்

முதல் முஸ்லீம் மாவீரர் ஜுனைதீனின் நினைவு நாளும் நவம்பரிலேயே !

தமிழ் ,முஸ்லீம் இனங்களின் ஐக்கியத்துக்கு நாம் என்ன செய்யப்போகிறோம் ?
 

இனப்பற்றிலும், மொழிப்பற்றிலும் தாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதைக் காலங்காலமாக முஸ்லிம்கள் நிரூபித்தே வந்துள்ளார்கள். இந்தியாவில் நீதியரசர் இஸ்மாயில் கம்பன் விழாக்களில் கலந்துகொண்டதிலிருந்தும்  திருவாசகம் பற்றிய அவரது கட்டுரைகள் மூலமும்  இதனை அறியமுடிகிறது. கவிஞர் அப்துல் ரகுமானும், மேத்தாவும் இவரும் மத நல்லிணக்கம் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்கள் மிகவும் பிரசித்தமானவை. அறுபடை வீடுகளின் ஒன்றான திருத்தணியில் ஆஸ்தான வித்துவானாக ஒரு முஸ்லீம் இருந்தார். .இந்திய ராணுவத்தின் வருகை தொடர்பாக  "ஒப்புக்குப் போர்த்த அமைதித் திரையின் ஓரங்கள் பற்றி எரிகின்றன "  என்ற கருத்தாழமிக்க பாடலை எழுதி தமிழ் மக்கள் நெஞ்சில் இடம்பிடித்தார் கவிஞர் இன்குலாப். ஏன் இலங்கைத் தமிழர் விடயத்தில் முதன் முதல் தீக்குளித்தவர் ஷாஜகான் என்னும் இளைஞரே.

தமிழகத்தில் தமிழுக்கு முஸ்லிம்கள் ஆற்றிய பங்களிப்பு மிகவும் காத்திரமானது.  இது குறித்து  தனியே ஒரு நூலே வெளியிடலாம். திரை இசைத்துறையில் தனது ஆற்றலை நிரூபித்த  இசையமைப்பாளர்  ஏ .ஆர் . ரகுமான் ஆஸ்கார் விருதைப்  பெறும் போது  "எல்லாப் புகழும் இறைவனுக்கே" எனத் தனது தாய் மொழியிலேயே தன்னடக்கத்தை வெளிப்படுத்திமையும் இதில் அடங்கும்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்கள் ஆற்றிய பங்கு மிகவும் காத்திரமானது.தென் தமிழீழத்தில் உருவாகிய இயக்கங்களுள் "தமிழீழ விடுதலை நாகங்கள் "  (நாகபடை) சிலகாலம் பரபரப்பை உருவாக்கியது . இதற்கு தலைமை தாங்கியவர் ஒட்டமாவடியைச் சேர்ந்த ஜுனைதீன். அரசுக்குத் துணைபோன ஐ .தே. க . பிரமுகர் மாலா இராமச்சந்திரனை சுட்டுக் கொன்றமை, நாகேந்திரம், டொட்டி பிரான்சிஸ் , ஆகிய பிரமுகர்கள் மீது தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டமை என நாகபடை மேற்கொண்ட சகல நடவடிக்கைகளிலும் பங்கு பற்றியவர் இவர் .


இக்குழுவுக்கு எதிராக போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக தொடர்ந்து இயங்க முடியாமற் போயிற்று . அந்நிலையில் தனது எதிர்காலப் பங்களிப்பைத் தமிழீழப் விடுதலைப் புலிகள் மூலமாக வழங்க முடிவெடுத்தார். ஜுனைதீன் .  இந்தியாவில் புலிகளின் மூன்றாவது பயிற்சி முகாமில் பொன்னம்மான் , புலேந்திரன் ஆகியோரிடம் பயிற்சி பெற்றார் . இக்காலத்தில் ஜோன்சன் எனும் பெயர் இவருக்கு சூட்டப்பட்டது. முகாமில் தனது தனித் திறமைகளை அடிக்கடி வெளிப்படுத்தினார் இவர். ஓவியத்துறையிலும் இவருக்கு ஈடுபாடு இருந்தது . அவர் வரைந்திருந்த ஓவியங்களில் உப இயந்திரத் துப்பாக்கி எனும் படம் தேசியத்தலைவரின் கவனத்தை ஈர்த்தது.

ஒரு ஆயுதப் போராட்டக் குழுவை ஆரம்பித்து இனவிடுதலைக்காகப் போராடியவர் என்ற வகையில் இவர் மீது தனிப்பற்று அவருக்கு இருந்தது.  பிரபாகரனே தனது தலைவர் என்று ஏற்றுக்கொண்ட ஜோன்சனுக்கு அவருடனான சந்திப்புக்கள் மன நிறைவைக் கொடுத்தன. இச்சந்திப்புக்களில் விடுதலைப் போராட்ட வழிமுறைகள் பற்றியே அதிகம் கலந்துரையாடப்பட்டன. அதில் தமிழ் -முஸ்லீம் இனங்களின் உறவை  பலப்படுத்த ஆற்ற வேண்டிய பணிகள் முக்கியத்துவம் பெற்றன.

பயிற்சி முகாமிலிருந்து வெளிவந்ததும் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டார் ஜுனைதீன். கிட்டு தலைமையில் 1985 நடைபெற்ற யாழ்ப்பாணம் பொலீஸ் நிலையத் தாக்குதலில் பங்கு பற்றி தனது ஆற்றலை நிரூபித்தார். 1985/02/13  அன்று நடைபெற்ற கொக்குளாய் இராணுவ முகாம் மீதான தாக்குதலிலும்    பங்குபற்றினர்.
அதன் பின்னர் மட்டக்களப்புக்குச் சென்றார். அங்கே புதிய பலத்துடன் களமாடும் கனவுகளோடு இருந்தார். அக்காலத்தில் மட்டக்களப்பில் முஸ்லீம் கிராமங்களில் போராட்டத்தின் தேவை பற்றி எடுத்துரைத்தார்.
மன்னார் முருங்கனில் ஈரோஸ் இயக்கத்தினரால் இரு முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனைச் சந்தர்ப்பமாகப் பயன்படுத்த அரசு தீர்மானித்தது . அக்கரைப்பற்றில் இச் சம்பவத்தைக் கண்டித்து முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தமிழ் முஸ்லீம் உறவைச்  சீர்குலைக்க அவசரஅவசரமாக அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.


விசேட அதிரடிப் படையினர் காரைதீவு கிராமத்தைக் சுற்றி வளைத்தனர். முஸ்லீம் தொப்பி அணிந்த காடையர்கள் பல்வேறு வன்முறைகளில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து கிழக்கின் பல்வேறு இடங்களிலும் தமிழ் - முஸ்லீம் மக்களிடையே பரஸ்பரம் அவநம்பிக்கை மேலோங்கியது.குறிப்பாக எல்லைப்பகுதிகளில் இதன் தாக்கம் அதிகமாக இருந்தது.

முன்னாள் அமைச்சர் இராஜதுரை " கிழக்கில் குழல் புட்டுப்போல தமிழரும் முஸ்லிமும் வாழ்ந்து வருகிறோம் தேங்காய்ப் பூ அடுத்து மா என மாறி மாறி இருப்பதுபோல் நாங்கள் இருக்கிறோம்" என ஒரு கூட்டம் ஒன்றில் சொன்னார்.
அவ்வாறு அடுத்தடுத்து இருந்த கிராமங்களில் வன்முறைகள் வெடித்தன. படுவான்கரையில் இருந்த ஒரே ஒரு முஸ்லீம் கிராமமான பாவற்கொடிச்சேனையில் ஈ .பி . ஆர் .எல் .எப் இயக்கம் மிக மோசமான வன்முறையில் ஈடுபட்டது. சில பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டனர்.


பல்வேறு இயக்கங்கள் இருந்ததால் ஒன்றையொன்று கட்டுப்படுத்த முடியாத நிலை. ஒவ்வொரு இயக்கமும் தத்தம் வளர்ப்புக்கு கேற்ற வகையில் நடந்துகொண்டன. புலிகள் , ஈரோஸ் , தமிழீழப் பாதுகாப்பு பேரவை தவிர்ந்த ஏனைய இயக்கங்கள் தறிகெட்டு நடந்து கொண்டன. காரைதீவில் முஸ்லீம் தொப்பி அணிந்து வன்முறையில் ஈடுபட்டது சிங்களக் காடையரும் படையினருமே என்ற உண்மை மிக விரைவிலேயே  தெரிந்துவிட்டது.

இஸ்ரேலிய உளவுப்படையான மொஸாட்டின் வழிநடத்தலிலேயே இந்த வன்முறை மேற்கொள்ளப்பட்டது எனத்  தெரிந்ததும் தமிழர் தரப்புச் சற்றுத் தணிந்தது.

 எனினும் பாதிக்கப்பட்ட காத்தான்குடி மக்கள் (பாவற்கொடிச்சேனையில் இருந்து விரட்டப்பட்டோர் பெரும்பாலும் காத்தான்குடியைப் பூர்வீகமாகக் கொண்டவர்களே.) எல்லைப்  புறக்கிராமமான மஞ்சந்தொடுவாய் மீது தாக்குதல் மேற்கொள்ள வந்தனர். அதிரடிப் படையினர்  இவர்களுக்கு காவலாக இருந்தனர். அச் சமயம் தமிழர்கள் "நீங்கள் வேண்டுமானால் எங்களைக் கொல்லுங்கள் இவர்களுக்கு ஏன்ஆதரவு கொடுக்கிறீர்கள்?“ எனக் கேட்டனர். அதற்கு "நீங்கள் வேண்டுமானால் புலிகளைக் கொண்டுவந்து இவர்களை அடித்து விரட்டுங்கள் "  எனப் பதிலளித்தனர் விசேட அதிரடிப் படையினர். அப்போதுதான் தங்கள் இரு இனத்தவரையும் மோதவைக்க படைத்தரப்பு முயற்சிப்பதை அனைவரும் உணர்ந்தனர்.

மஞ்சந்தொடுவாய்  பக்கம் வரும் முஸ்லிம்கள் மீது தமிழர்கள் சிலர் வன்முறையில் ஈடுபடுவதாக  புலிகளுக்குச் செய்திகள் கிடைத்தன சம்பந்தப்பட்டவர்களை உடன் கொண்டு வருமாறு யாழ் பல்கலைக் கழக மருத்துவப்பீட மாணவனும் மருத்துவப் பிரிவில் அங்கம் வகித்தவருமான லெப் .சுதர்சனுக்கு ( பூபாலபிள்ளை சிவகுருநாதன் , ஆரையம்பதி ) கூறப்பட்டது அவரும் அவ்வாறே செய்தார். தோணிகளில் கொண்டுவரப்பட்டோர் மீது விசாரணை நடந்தது. மறுதரப்பால் இவர்களும் பாதிப்புக்குள்ளானது தெரியவந்தது. இந்த விசாரணைகளை ஜோன்சனும் பார்த்துக்கொண்டிருந்தார்.விசாரித்துக்  கொண்டிருந்த அப்போதைய மட்டக்களப்பு  தலைமையை தனியே அழைத்தார்

" அவர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் நாங்கள் ஒரு தரப்புக்குச் சாதகமாக நடந்து கொள்ளக்கூடாது  பாதிப்பின் வலியும் , வேதனையும் எல்லோருக்கும் ஒரே மாதிரித்தான் வேணுமெண்டா கடுமையா எச்சரிச்சுப் போட்டு அனுப்புங்கோ வேறு ஒன்றும் செய்யவேண்டாம்."  என வலியுறுத்தினார். இந்த நிதானமான  வார்த்தைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஒரு பதட்டமான சூழ்நிலையிலும் இரு இனங்களின் ஐக்கியத்தையே முதன்மைப் படுத்தினார் அவர்.

07 /05 /1985  அன்று கரடியனாற்றில் பொலிஸ்சாருடன் மோத வேண்டிய   வேண்டிய சூழல் ஏற்பட்டது . G3  துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே தப்பி வந்தார்  இதே போல் ஈரளக்குளப்பகுதியில் அமைக்கப்படட பயிற்சி முகாமில் புதிதாக இயக்கத்தில் இணைந்து கொண்டோர் இருந்தனர்.அந்தப்பகுதியை வட்டமிட்டு தாக்குதல்  நடாத்திய  உலங்கு வானுர்தியை கீழே இறங்கவிடாமல் G3. துப்பாக்கியால் சுட்டு விரட்டினார்.
இந் நிலையில் இந்திய அரசின் ஏற்பாட்டில்  பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. பூட்டான் தலைநகர் திம்புவில் நடந்த இப் பேச்சு வார்த்தைகளில் அரசதரப்பும் போராளிகள் குழுக்களும் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கின . எனினும் இந்த உடன் பாட்டில் ஒரு தரப்பு மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டது. வவுனியாவில் நடந்த முற்றுகையில் ஒரு போராளி வீரச்சாவடைந்தார். யுத்த நிறுத்தம் தானே என்ற நம்பிக்கையில் ஜுனைதீனும், ஜோசெப்பும்  கரடியனாற்றில் இருந்து ஆயித்தியமலைக்குச் சென்றனர். மோட்டார் சைக்கிளில் சென்ற இவர்களை ஒரு பார ஊர்தியின் பின்னால் மறைந்திருந்த பொலீசார்  உதைத்து வீழ்த்தினார் . மிகக்குறுகலான வழியில் நிதானமாக பார ஊர்தியை விலத்தி சென்றதைப் பயன்படுத்தி  பொலீசார் யுத்த நிறுத்தத்திற்கு மாறாக இவர்களைக் வீழ்த்தி கைது செய்தனர். இந் நடவடிக்கைக்கு  ஏறாவூர் பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தியோபிளஸ் தலைமை தாங்கினார்.


அவருக்கு ஏற்கனேவே ஜுனைதீனைத் தெரியும். ஏனெனில் ஜுனைதீன்  ஏறாவூர் அலிகார் மகா வித்தியாலயத்தில்  படித்தவர். மாணவ தலைவராகவும் இருந்தவர். ஒரு முஸ்லீம் போராளி குழுவை ஆரம்பித்துள்ளார்  என்ற செய்தி கிடைத்த காலம் முதல் அவரைத் தேடித் திரிந்தவர் தியோபிளஸ். கைதான இருவரும் பனாகொடை இராணுவ முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.

இந்த முகாமில் இருந்து தான் ஏற்கனவே பனாகொடை  மகேஸ்வரன் என்றழைக்கப்படும் ஒருவர் தப்பியிருந்தார்.( இவரே தமிழீழ இராணுவம் என்ற ஆயுதக் குழுவின் தலைவர் ) ஜுனைதீனும், ஜோசெப்பும் அங்கிருந்து தப்பிச் செல்ல வேண்டிய தேவை இருந்தது.சித்திரவதைகள் தொடர்ந்தால் பாதகமான நிலைமைகள் ஏற்படும் என உணந்தனர். 30/11/1985 அன்று  படையினரைத் தாக்கிவிட்டு தப்பிச் செல்கையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இரையாகினர்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் முஸ்லீம் மாவீரன் என வரலாற்றில் தனது பெயரைப் பதித்துக் கொண்டார் ஜுனைதீன் .
  இவர் மூலம் முஸ்லீம் கிராமங்களில் ஏற்பட்ட தொடர்புகளை புலிகள் மேலும் விஸ்தரித்தனர்.அதுவரை புலிகளுக்கு உணவும் பாதுகாப்பும் மட்டுமே கிடைத்து வந்தது. குமரப்பா மட்டக்களப்புக்குத் தலைமை தாங்கிய பின்னர்  ஆயுதப்போராட்ட நடவடிக்கைகளிலும் பங்களிப்புக் கிடைத்தது . குறிப்பாக வடகிழக்குக்கு வெளியே நடைபெற்ற தாக்குதல்கள் அரசை அதிரவைத்தன. இதனைத் தொடர்ந்து சில முஸ்லிம்கள் கைதாக வேண்டிய சூழ்நிலையையும் ஏற்பட்டது. போராட்டத்தைப் பொறுத்தவரை இந்திய இராணுவத்தின் காலத்தில் கிழக்கில் முஸ்லிம்களின் பங்களிப்பு காத்திரமானதாக இருந்தது. யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி ஏறாவூர் முஸ்லிம்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது முஸ்லீம் காங்கிரசில் அங்கம் வகிக்கும் பசீர் சேகு தாவுத் என்பவரே இதற்கான ஏற்பாடுகளைச்  செய்தார்.   அவர் அப்போது ஈரோஸ் இயக்கத்தில் அங்கம் வகித்தார்.இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இந்திய இராணுவத்தின் துணையுடன் வந்த ராசிக் குழுவினர் அடித்துத் துரத்தினர்.


மிக இறுக்கமான சூழ் நிலையை இந்திய இராணுவம் ஏற்படுத்தி இருந்தது. போராளிகளுக்கான உணவு கிடைப்பது மிகச்  சிரமமாக இருந்தது . முஸ்லிம் களே இவற்றைச் சுமந்து வந்தனர் ஒட்டமாவடி , ஏறாவூர் ,காத்தான்குடி மக்களின் பங்களிப்பு மிக்க காத்திரமாக  இருந்தது .

இந்திய இராணுவம் வந்த புதிதில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின்  ஏற்பாட்டில் " இலங்கை இந்திய  ஒப்பந்தமும் முஸ்லிம்களின் எதிர்காலமும்" என்ற தலைப்பில்  இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்த வணசிங்கா ஆசிரியர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று 1/9/1987 அன்று மட்டுநகரில் உள்ள சாள்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.  முஸ்லீம் காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்ட அக்காலத்தில்  அதன் பிரதிநிதியாக ஹிஸ்புல்லாவை அஸ்ரப் அனுப்பி வைத்தார். (அப்போது அவர் ஒரு மாணவனாக இருந்தார்.)  மற்றும்  பேராசிரியர் சித்திக் உட்பட இன்னும் பல முஸ்லீம் பிரமுகர்கள் கலந்து கொண்டனர் , தமிழர் தரப்பில் பேராசிரியர் சிவத்தம்பி , அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ    , சட்டத்தரணி பொன். வேணுதாஸ்  அன்றைய மட்டக்களப்பு முக்கிய பத்திரிகையாளர் நித்தியானந்தன்   போன்ற பலர் கலந்து கொண்டனர். இவர்களில் வணசிங்கா ஆசிரியர் , அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ ஆகிய இருவரையும் பின்னாளில் இரா . துரைரத்தினம் தலைமையிலான E.P.R.L.F. குழுவினர் சுட்டுக் கொன்றனர் .

காத்தான்குடியில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய பொட்டம்மான் " இந்த ஊரை காத்தவர் குடியென்றே கூறுவேன் போராட்டத்தின் நெருக்கடியான காலங்களில் எம்மைப் பாதுகாத்து உணவளித்தவர்கள் நீங்களே " எனக் குறிப்பிட்டார். அக்காலத்தில் குறிப்பிடப்பட்டளவு  முஸ்லீம் போராளிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டனர் .இதற்கு முன்னதாக ஒரு முஸ்லீம் போராளியான  லத்தீப் முகமது அலியார் (முகமது லத்தீப் )ஒல்லிக்குளத்தில்  வைத்து 24/12/1986 அன்று E.P.R.L.F. வினராலும்,  பின்னர் காத்தான்குடியில் முகமட் நசீர் என்னும் முஸ்லீம் போராளி 30/12/1987  அன்று முஸ்லீம் ஊர்க்காவல் படையினராலும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்திய இராணுவம் இம் மண்ணை விட்டுச் சென்றதும் நல்ல சூழல் நிலவியது, முஸ்லீம் பிரதேசங்களில் புலிகள் கோலாட்டத்துடன் வரவேற்கப்பட்டனர் .
மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் 23 /3 /1990. அன்று விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி சார்பாக நடைபெற்ற  கூட்டமொன்றில் உரையாற்றிய ஏறாவூரைச் சேர்ந்த ஆசிரியர் காதர்   "தமிழரும் முஸ்லிம் களும் கடித உறையும், முத்திரையும்  போன்றவர்கள்.  ஒன்றில்லாவிட்டால் ஒன்று  போய்ச் சேராது . ஆகவே இரு இனமும் ஒன்றிணைந்தால்தான் எதையும் செய்யமுடியும். தனித்து எந்த இனமும் எதையும் சாதிக்க முடியாது“ எனக்குறிப்பிட்டார் . அதனை வரலாறு நிரூபித்தது.


1990 இல் எடுத்த துரதிஷ்ட வசமானமுடிவு ஆயுதப் போராட்டத்தின் முடிவுக்குக்  காரணமாகியது. .உண்மையில் முஸ்லிம்களின் வெளியேற்றமே போராட் டத்தின்  தோல்விக்கு அத்திவாரம். தோல்விக்கான காரணங்களை அடுக்குபவர்களின் மனதில் இந்த விடயம் ஏனோ உறைக்க வில்லை. இந்த முடிவு உலகத்தில் உள்ள அத்தனை முஸ்லீம் நாடுகளையும் எமது போராட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கக்  தூண்டியது . தந்தை செல்வா காலத்திலிருந்து இன உறவுக்காக குரல் கொடுத்த அத்தனை முஸ்லீம் சக்திகளையும் வாயடைக்க வைத்தது .

இந்த முடிவினை மறு பரிசீலனை செய்யும் படி புதுவை இரத்தின துரை உள்ளிட்டோர் வேண்டினர் .குறிப்பாக முஸ்லீம் வீடுகளில் சாப்பிட்ட பாதுகாக்கப்பட்ட அநேகர் இருந்தனர். எனினும் இந்தத் தவறுக்கான  பொறுப்பை தமிழர் அனைவரும் ஏற்கத்தான் வேண்டும் .


தமிழினி சொல்வது போல " போராட்டத்தின் வளர்ச்சியிலும் வெற்றிகளிலும் நானும் பங்காளி. ஆனால் கட்டாய ஆட்சேர்ப்பில் எனக்கு உடன் பாடில்லை " என்று சொன்னால் உலகம் நம்பிவிடாது .வெற்றிகளில் எமக்கு  எவ்வளவு பங்கு உள்ளதோ அவ்வளவு தோல்விகளிலும், தவறுகளிலும் உள்ளது . இதை ஒத்துக் கொள்ளாவிடில்  எம்மை மனச்சாட்சியுள்ள மனிதராக உலகம் ஏற்றுக்கொள்ளாது.

எந்தக்  காலத்திலும் விளைவுகளைக் கருதாமல் பகிரங்கமாக முஸ்லிம்கள் பக்கமுள்ள நியாயத்தை எடுத்துரைத்த ஓரிருவர் இருக்கத்தான் செய்தார்கள். இவர்களில் முக்கியமானவர் கவிஞர்  வ. ஐ. ச..ஜெயபாலன் இந்தச் சூழ்நிலையிலும் சில மனிதர்கள் தமது உயரிய பண்பை  வெளிப் படுத்தினார் "  மரணத்துள்  வாழ்வோம் " மற்றும் மகாகவியின் கவிதைகள் போன்ற நூல்களை வெளியிட்ட பேராசிரியர் நுஃமான்  போன்றோர் அவர்களில் ஒருவர். யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறும் போது அவரது நண்பர்கள் கண் கலங்கினர். அப்போது  நுஃமான்  "நாங்கள் பிறந்த இடத்தைவிட்டுப் போவது  கவலைதான். எனினும் இந்த  உலகத்தில் இலங்கைத் தமிழினம் தனித்து விடப் போகின்றதே என்பதுதான் எனக்குள்ள மகாகவலை“  எனக்குறிப்பிட்டார். காலம் அதனை நிரூபித்தது. தமிழர் கைவிடப்படும் போது, ஐ .நா உட்பட உலகம் வேடிக்கை பார்த்தது. சாத்தியமாகா விட்டாலும் வன்னியிலுள்ள மக்களுக்காக காத்தான்குடி வர்த்தகர்கள் பணமும் பொருளும் சேகரிக்கிறார்கள் என்ற செய்தி தமிழர்களைக் கூனிக்குறுக வைத்தது.


இடம்பெயர்ந்த காலத்திலும் முஸ்லிம்கள் நம்பிக்கை இழக்கவில்லை தமிழீழ விடுமுறை  நாட்கள் பட்டியலில் ஹஜ்ஜிப் பெருநாள் இடம்பெற்றிருப்பதை பலரிடமும் சுட்டிக்காட்டினார்கள் . சண்முகராஜா என்றொரு அதிபர் கிளிநொச்சி உருத்திரபுரத்தைச் சேர்ந்தவர். ஒரு முஸ்லீம் தையல்காரரிடம் உடுப்புத்தைப்பது வழக்கம். அந்த முஸ்லீம் இடம்பெயர்ந்து கொழும்புக்குச் சென்ற பின்பும் இதே நிலைமை தொடர்ந்தது. ஒரு நாள் இவர் அவரது தையல்கடைக்குச் சென்றார்.

அங்கே ஒரு வாடிக்கையாளரும் அந்தக் தையல்கடைக்காரரும் முரண் பட்டுக்கொண்டிருந்தார்கள் குறிப்பிட்ட திகதியில் உடுப்புத்தைத்துத் தருமாறு வாடிக்கையாளர் கேட்க இவர் சாத்தியமில்லையெனக்  கூறிக்கொண்டிருந்தார். இதனை அவதானித்த அதிபர் சற்றுத்தள்ளி நின்றுகொண்டிருந்தார். இதனை கண்ட தையல்காரர் "வாங்கோ மாஸ்டர் உடுப்புத் தைக்க வேண்டுமா? எப்போ நீங்கள் போகிறீர்கள் கிளிநொச்சிக்கு?“ எனக்கேட்டார். "நாளைக்கு" எனப் பதிலளித்தார் அதிபர். "பிரச்சினையில்லை கொண்டாங்கோ" என அவர் சொன்னதும் ஏற்கெனவே அவருடன் முரண்பட்டுக்கொண்டிருந்த கொழும்பு வாடிக்கையாளருக்கு கடுப்பேறி விட்டது.  "நான் இவ்வளவு நேரமும் கேட்டுக்கொண்டிருக்கிறன் எனக்கு மாட்டன் என்று சொல்லிட்டு இப்பவந்தவருக்கு உடன தைச்சுக் குடுக்கிறனெண்டு சொல்லுறீங்களே“ எனக் கேட்டார், அதற்கு அவர் "நான் கொழும்பில இருக்கிறது தற்காலிகமாகத்தான். இவர் என்னுடைய நிரந்தர வாடிக்கையாளர். நாளைக்கே  கிளிநொச்சிக்குப்  போற நிலைமை வந்தா நான் அங்கே போய்விடுவேன். ஆனபடியால் அவரை நான் இழக்க முடியாது“ என பதிலளித்தார்.

கருணாவின் பிளவின் பின் கேணல் ரமணன் உட்பட சிலரை கிளிநொச்சியிலிருந்து பழுகாமத்துக்கு பாதுகாப்பாக கொண்டுபோய் சேர்த்தவர்கள் முஸ்லிங்களே
சமாதான காலத்தில் முஸ்லிம்கள் கிளிநொச்சிக்கு வந்தனர் அவர்களைப் புலிகள் வரவேற்றனர். 1990 இல் முஸ்லிம்கள் விட்டுச்சென்ற காணிகளை அவர்களிடமே கையளிக்குமாறு தமது தலைமை சொன்னதாகத் தெரிவித்தனர். அப்போது முஸ்லிம்கள்  "எங்களை அனுப்பின போராளிகள் தலைமை சொன்னபடியால்தான் நாங்கள் உங்களை அனுப்புறம் ஆனால் நீங்கள் திரும்பி வருவீங்கள். நீங்கள் வரவேணுடுமெண்டதுதான் எங்கட விருப்பமும். ஆனா நீங்கள் வரும்போது நாங்கள் உயிரோடு இருக்கிறோமோ தெரியாது எண்டு சொன்னவை. அது போல் எங்கள அனுப்பிய முகங்களில  ஒண்டையும் இண்டைக்கு காணேல்ல“ என்று நெகிழ்ச்சியுடனும்,கவலையுடனும் கூறினர்.


மானுடத்தின் ஒன்று கூடல் நிகழ்வுக்கு ஒட்டமாவடியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் S.L.M. ஹனிபா வருகை தந்திருந்தார். ஒருநாள் வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்னால் தமிழராய்ச்சி மகாநாட்டில் உயிர் இழந்தோரின் நினைவிடத்துக்கு சென்றார். அதில் காணப்பட்ட எழுத்துப் பிழைகளைக் கண்டதும் கோபமுற்றார். ஒரு கரிக்கட்டியை எடுத்து தவறுகளை வெட்டி அதற்கு மேல் சரியான எழுத்துக்களை எழுதினார். "எனது தாய் மொழியை எவரும் பிழையாக எழுத அனுமதிக்க முடியாது" என ஆணித்தரமாக கூறினார். அங்கிருந்த அனைவரும் அவரது தமிழ் பற்றுக்கு தலைவணங்கினர். 

2006 காலப்பகுதியில்  ஒரு முஸ்லீம் இளைஞர் போராட்டத்தில் இணைந்து பின்னர் முகமாலை முன்னரங்கில் மாவீரர் ஆனார். இவர் வட்டக்கச்சி. இராமநாதபுரத்தைச் சேர்ந்தவர். மேலும் காத்தான்குடியைச் சேர்ந்த இன்னொரு முஸ்லீம் போராளி ஆழ ஊடுருவும் படையினரின் தாக்குதலில் வீரச்சாவு ஏய்தார்.இந்த இருவரதும் வித்துடல்கள் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்.பட்டன
முன்னர் முஸ்லீம் மாவீரர்களது வித்துடல்கள் மையவாடியில்களில் விதைக்கப்பட்டன.இவர்களது வித்துடல்கள்  இந்து, கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த மாவீரர்களுக்கு நடுவில் விதைக்கப்பட்டன.


எந்தச் சூழ்நிலையிலும் எந்த வசதி வாய்ப்பிலும் தாங்களும் நிலைகுலையமாட்டோம் என்பதை முஸ்லிம்கள் நிரூபித்தனர்.யுத்தத்துக்குப் பின்னர் தேசியப் பட்டியல் மூலம்  பாராளுமன்றத்துக்கு தெரிவான தமிழர் ஒருவர் தமிழரது உணர்வுகளைப் புரிந்துகொள்ளாது சிங்கள எம்பிக்களுடன் கிரிக்கட் ஆடி மகிழ்ந்தார். இது தமது ராஜதந்திரம் என மகசீன் சிறையிலுள்ள அரசியல் கைதிகள் மத்தியில் தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டார். ஆனால் புலிகளின் காலத்தில் தேசியப் பட்டியல் மூலம் தெரிவான சட்டத்தரணி இமாம் கொள்கையிலிருந்து பிறழாமல் மக்களுக்கு தனது பதவிக்காலத்தில் எதைச் செய்யவேண்டுமோ அதை மட்டும் செய்தார்.ஏனெனில் இமாம் தந்தை செல்வா காலத்துத் தமிழரசுக்கட்சிகாரர். தமிழ் மக்கள் மத்தியில் வாழாது, போராட்டப் பங்களிப்பு வழங்காது, போராட்டத்தால் பாதிக்கப்படாது வாழ்ந்து கட்சியில் இடைச் செருகலாக வந்தவர் அல்ல அவர் .

 இன்னுமொரு சம்பவத்தையும் குறிப்பிட வேண்டும். யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்குத் தடையாக உள்ள விடயங்கள் என்ன என்பதை அறிந்து ஈழநாதம் மட்டக்களப்புப் பதிப்புக்குக் கட்டுரையை எழுத முனைந்தார் ஒரு பத்திரிகையாளர். அவர் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியைக் படம் பிடிப்பதைக் கண்ட சி
Got itல முஸ்லிம்கள் அவரை என இனங்கண்டனர்."வாற 31ம் திகதி வீரசிங்கம் மண்டபத்தில் ஒரு கூட்டம் இருக்கு வருவீர்களா?“  என அவரைக்  கேட்டனர். மீள்குடியேற்றம் சம்பந்தமான கூட்டமாக இருக்கும் என நினைத்து அவர் என்ன கூட்டம் என்று கேட்டார். " தந்தை செல்வாவின் நினைவு நாள் " என பதிலளித்தார்கள் முஸ்லிம்கள். ஒரு கணம் அதிர்ந்து விட்டார் அவர். தாங்கள் தமிழரால் வெளியேற்றப்பட்டு ஒன்டறை தசாப்த காலமும் முடிகிற நிலையிலும் தந்தை செல்வாவையே தமது தலைவராக போற்றுகிறார்களே என உணாந்தார். அதுவரை அவரது மனதில் இருந்த மதிப்பில் மேலும் பலமடங்கு உயர்ந்து நின்றார் தந்தை செல்வா.

தமிழர்கள் பிராயச்சித்தமாக நிறைய விட்டுக்கொடுப்புகளைச் செய்யவேண்டியுள்ளது. இனப்பிரச்சினைக்கான தீர்வில்  இதனைக் கருத்திற் கொள்ளவேண்டும். இதே வேளை தமது அரசியல் எதிர்பாப்பு  என்ன என்பதை முஸ்லிங்கள் ஒரே குரலில் தெரிவிக்க வேண்டும்.  கொழும்பின் தேவைகளுக்காக இரு இனத்தவர்களையும் பகைமையை மூட்டி தொடர்ந்து குளிர்காயும் அரசியல் வாதிகளை முஸ்லிம்கள் இனம் காண வேண்டும். தமிழீழப் விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன் முதலாக தமிழரின் தாகம் எனும் குறும் படத்தை இயக்கிய ரகுமான் சுகூர் போன்றோர் இன்னும் இருக்கின்றனர்.


இஸ்ரேலிய உளவுப்படையான மொஸாட்டின் வருகையின் போது ஆர்ப்பாட்டங்களை ஒழுங்குபடுத்திய மருதமுனை கமால்தீன் ஆசிரியர் போன்றோர் தமிழ் முஸ்லீம் உறவைப் பலப்படுத்த வேண்டுமென்ற கனவுடன் இருக்கிறார்கள்
சுதுமலையில் கிட்டுவின் முகாம் முற்றுகையிடப்பட்டபோது வாகனம் கிடைக்காத நிலையிலும் ஆயுதங்களுடன் யாழ்ப்பாணத்திலிருந்து சுதுமலைக்கு ஓடிச்சென்ற பாறூக் (கனிபா அக்கரைப்பற்று)  தலைமையிலான முஸ்லீம் போராளிகள் இன்னும் எம் நினைவில் உள்ளனர் .

ஒவ்வொரு ஆண்டும்   கார்த்திகை  21  தொடக்கம் கார்த்திகை 27  வரை அனுஷ்ட்டிக்கப்படும் மாவீரர் தின வாரத்தில் இதுவரை வீரச்சாவெய்திய  45 முஸ்லீம்மாவீரர்கள் உட்பட அனைத்து மாவீரர்களையும்  இந் நாட்களில்  நினைவு கூருகிறோம்.
ஞானி

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் HolykuralKural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis