முகப்புத்தகக் குழுமம்
தமிழினத்துரோகி கருணாநிதி

Facebook group
**********************************************************************
ஜெயலலிதாவின் இந்த நோட்ஸ்களை வைத்தும் நடவடிக்கை எடுங்கள் மிஸ்டர் பிரைம்மினிஸ்டர்..!
ஆக்கம்: உண்மைத்தமிழன்
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
"வந்தாரை வாழ வைத்த தமிழ்நாடு" இனி தன் பெயரை மாற்றிக் கொள்ள வேண்டியதுதான்.
தமிழ்நாட்டுக்கென்றே இருந்த தனி மரியாதையையும், சிறப்பையும் தனி மனிதர் ஒருவரின் சுயநலத்தால் இழந்து போய் நிற்கிறோம்.
பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் ஏற்கெனவே பல ஆண்டுகள் தமிழகத்தில் திருச்சியில் வசித்தவர். அவருடைய புதல்வர் பிரபாகரன் தனி ஈழத்தின் முதல் தேசியத் தலைவராக தனியாட்சி நடத்திக் கொண்டிருந்தபோதே அந்த அம்மையார் தமிழ்நாட்டில்தான் இருந்தார்.
பிரபாகரன் என்ன தவறு வேண்டுமானாலும் செய்துவிட்டுப் போகட்டும்.. அதைப் பற்றி இப்போது பேச்சில்லை. இந்த 76 வயது அம்மையார் என்ன பாவம் செய்தார்..? தமிழச்சியாக பிறந்தது பாவமா..? அல்லது பிரபாகரனை பெற்றெடுத்ததுதான் பாவமா..?
மூச்சுக்கு மூச்சு தமிழுக்காக உயிரைக் கொடுப்பேன்.. தமிழர்களுக்காகத் தலையைக் கொடுப்பேன் என்று சவுடால்விட்ட முதல்வர் இன்றைக்குச் சட்டசபையில் வாந்தியெடுத்திருக்கிறார்.. அதே தமிழில்தான்.
பார்வதியம்மாள் தமிழகத்திற்கு வந்ததே தனக்குத் தெரியாது என்று.. நாம் தமிழர்கள் அனைவரும் நமது நெஞ்சில் அடித்துக் கொள்ளலாம் இந்த ஒரு வார்த்தையைக் கேட்டுவிட்டும் நாம் இன்னமும் உயிரோடு இருப்பதற்காக.. கிராமப்புறங்களில் சாவு வீட்டில் பெண்கள் தங்களது நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுவார்கள் பாருங்கள்.. அதுபோல்..
ஒரு முதலமைச்சராக இருப்பவருக்கே இது தெரியாது எனில் இவர் எதற்காக முதலமைச்சர் பதவியில் வெட்கமில்லாமல் இருக்கிறார் என்பதை யாரேனும் கேட்டுச் சொன்னால் நன்றாக இருக்கும்.
இவருக்கே தெரியாது என்றால் புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டுக்கு மட்டும் எப்படி தெரிந்ததாம்..? வைகோவும், நெடுமாறனும் முறைப்படி அனுமதிச் சீட்டை வாங்கிக் கையில் வைத்திருந்தும் விமான நிலையலத்திற்குள் அனுமதிக்க மறுத்து ரவுடித்தனம் செய்த காவல்துறையை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தது ஜாங்கிட்தானே..
ஒரு மாநிலத்தில் ஒரு நகர கமிஷனருக்குத் தெரிந்திருக்கும் விஷயம்கூட அந்த மாநிலத்தின் முதலமைச்சருக்குத் தெரியவில்லை என்றால் இதைவிட வெட்கக்கேடு வேறென்ன இருக்க முடியும்..? இப்படியெல்லாம் தமிழர்கள் நினைக்க மாட்டார்களா என்றுகூட யோசிக்காமல் அண்டப்புழுகை வீசியிருக்கிறாரே இந்த 76 வயது முதியவர்.. இவரை என்ன பெயர் வைத்துத்தான் இனிமேல் அழைப்பது. உலக மகா பொய்யன்..
"அவசரப்பட்டு விசா கொடுத்துவிட்டீர்கள்.. ஏன் எங்களிடம் முன்பே கருத்து கேட்கவில்லை. வந்தால் உங்களுக்குத்தான் பிரச்சினை.. பரவாயில்லையா..?" என்று தமிழக அரசின் தரப்பிலிருந்து மத்திய அரசுக்கு கடும் எச்சரிக்கை சென்ற பிறகுதான் மத்திய அரசு திருப்பியனுப்பும் முடிவை நடத்திக் காட்டியிருப்பதாக டெல்லி பத்திரிகையாளர்கள் அனைவரும் சொல்லி வைத்தாற்போல் சொல்கிறார்கள்.
"அந்த அம்மாவை ஆஸ்பத்திரியில் அனுமதித்துவிட்டு தினம்தோறும் அவருடைய உடல்நல அறிக்கையை அறிவித்து அனைத்துக் கட்சிகளும் மீண்டும் இலங்கை பிரச்சினையைக் கையில் எடுப்பார்கள். கோவை உலகத் தமிழ் மாநாட்டு சமயத்தில் இதை வைத்தே ஏதேனும் பிரச்சினை வரும்.. அனுமதிக்காதீர்கள்.." என்ற ஸ்ட்ராங்கான அட்வைஸ் கோபாலபுரத்தில் இருந்துதான் சென்றிருக்கிறது.
இரண்டு அரசுகளுக்குமே இப்போது இலங்கை பிரச்சினை வேப்பங்காய் என்பதால் தூக்கி சாக்கடையில் வீசிவிட்டார்கள் அந்த மூதாட்டியை.
வழக்கம்போல கட்சிகளுக்குள் இதை வைத்து சடுகுடுவும் ஆரம்பமாகிவிட்டது.
வைகோவும், நெடுமாறனும் பிரபாகரனின் அண்ணன் மனோகரனின் மூலமாக பார்வதியம்மாவுக்கு சிகிச்சையளிக்க சென்னைக்கு அழைத்து வரும் வேலைகளை ரகசியமாக செய்து முடித்ததாகச் செய்தி. இதில் கூட்டாளிகளாகத் தங்களை அழைக்காததால் ராமதாஸும், தொல்.திருமாவும் கோபத்தில் இருக்கிறார்கள்.
அதிலும் மேல்சபை வரப் போகிறது. சும்மா இருக்கும் முந்திரிக்காடு தளபதிகளை அதில் தள்ளிவிட அரசுத் தரப்பின் உதவி வேண்டும். இப்போதுதான் ஐயா கொஞ்சம் இறங்கி வந்திருக்கிறார். கூடவே மாநிலங்களவை எம்.பி. பதவியும் தொங்கலில் நிற்கிறது.. போயஸ்கார்டன் பக்கமும் போக முடியாது.. அம்மா பந்த் விஷயத்தை பகிரக்கூட நம்மை அழைக்கவில்லை. எனவே ஐயாவைப் பகைத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டி மத்திய அரசையும் கண்டிக்கவில்லை. மாநில அரசையும் கண்டிக்கவில்லை என்று ரெண்டுங்கெட்டாத்தனமாக ஒரு அறிக்கையை விட்டிருக்கிறார் ராமதாஸ். கூடவே ஒரு நம்பிக்கையும் வேறு.. கருணாநிதிக்கு இது தெரியாது என்றே இவர் நம்புகிறாராம்.. இவரை நம்புகிறவர்களை நாம் நம்பக்கூடாது என்பது தெளிவாகத் தெரிகிறது.
தொல்.திருமாவோ ஒரு மாதத்திற்கு முன்பாகவே தன்னைத் தொடர்பு கொண்டு சென்னையில் வைத்து பார்வதியம்மாளுக்கு சிகிச்சையளிக்க வேண்டும் என்று பலரும் மலேஷியாவில் இருந்து கேட்டுக் கொண்டதாகச் சொல்கிறார். ஆனால் பதிலுக்கு இவர் என்ன நடவடிக்கை எடுத்தார் என்று தெரியவில்லை.
ஆனால் இப்போது பார்வதி அம்மாளை திருப்பியனுப்பியது யாராக இருந்தாலும் அதனை நியாயப்படுத்த முடியாது என்று சொல்லி ஜாம் தடவியிருக்கிறார். அம்பேத்கரின் அரசியலில் இருந்து பெரியாரின் அரசியல்வரைக்கும் கிண்டி கிழங்கெடுக்கும் இந்த சிறுத்தைக்கு பார்வதியம்மாள் திருப்பியனுப்பட்ட பின்னணியில் இருந்தது யாரென்று தெரியாதாம்.. நாமும் அதனை நம்ப வேண்டுமாம்..
எப்போதும் நாட்டு நடப்புகள் என்றால் உடனுக்குடன் அறிக்கை விடும் முதல்வர் ஐயா, இரண்டு நாட்களாக அமைதி காத்துவிட்டார். வழக்கமாக வெளிவரும் தானே கேள்வி. தானே பதில்கூட வராததால் பத்திரிகையாளர்கள் குழப்பத்தில் நிற்க,, லேசுபாசாக ஒரு அறிக்கையை பத்திரிகையாளர்களிடம் பரவவிட்டு மேலோட்டம் பார்த்தது ஆட்சி நிர்வாகம். அதனை ஸ்மெல் செய்த மீடியா அதில் இருந்த மேட்டரை படித்து சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் இப்போதுவரைக்கும்.
முன்பு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதுதான் பார்வதியம்மாள் முறைப்படி விசா பெற்று இலங்கைக்குப் பயணமானார். அவரை அனுப்பிய கையோடு அவரை மீண்டும் தமிழகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என்று குறிப்பாணையை மத்திய அரசுக்கு அனுப்பினாராம் ஜெயலலிதா.
2002-ம் ஆண்டு எழுதியனுப்பப்பட்ட அந்தக் குறிப்பாணையை இப்போது கையில் எடுத்துத் தூசி தட்டிப் படித்துப் பார்த்து, கண் கலங்கி, அறிவு பெருகி, ஆற்றல் பெற்று, இதன் பிறகுதான் பார்வதி அம்மாளை திருப்பியனுப்ப மத்திய அரசு முடிவெடுத்ததாம்..
சபாஷ்.. 2002-ல் புரட்சித் தலைவி எழுதியனுப்பிய ஒரு 'நோட்'..(இது கோரிக்கைதான்.. வேண்டுதல்தான்.. சட்டப்படியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய செய்தியல்ல) இதை வைத்து தற்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் அந்தக் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமென்றால்..
"தினகரன் பத்திரிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு சாதகமாக நடந்து கொண்டு மகன் மு.க.அழகிரியை காப்பாற்றிய தமிழக அரசை டிஸ்மிஸ் செய்..
மத்திய அமைச்சர் ராஜாவின் பல ஆயிரம் கோடி ரூபாய் ஸ்பெக்டரம் ஊழலுக்கு உடந்தையாய் இருக்கும் தமிழக அரசை டிஸ்மிஸ் செய்..
இடைத்தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை வாங்கி ஜனநாயகத்தைக் குழி தோண்டி புதைத்திருக்கும் கருணாநிதி அரசை டிஸ்மிஸ் செய்..
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் பொய்யான தகவலையளித்த தமிழக அரசை டிஸ்மிஸ் செய்..
தமிழகத்தில் மின்வெட்டுப் பிரச்சினை தீர்க்க வக்கில்லாத தமிழக அரசை டிஸ்மிஸ் செய்.."
இவைகளெல்லாம் தமிழகத்தின் தற்போதைய மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவி, முன்னாள் முதலமைச்சர், 2002-ல் 'நோட்' எழுதிக் கொடுத்து, இப்போது உங்களுக்குக் கை கொடுத்திருக்கும் 'கோப்பெருந்தேவி' இந்த நான்காண்டு காலத்தில் எழுப்பியிருக்கும் கோஷங்கள்தான்..
அந்த 'நோட்'டை வைத்து எப்படி நடவடிக்கை எடுத்தீர்களோ.. அதேபோல் இப்போதும் 'போயஸ் ஆத்தா' இந்த மூன்றரை ஆண்டுகளாக எழுப்பிக் கொண்டிருக்கும் இந்த 'நோட்ஸ்'களை வைத்தும் சூடு, சொரணை இருந்தால் நடவடிக்கை எடுங்கள் மிஸ்டர் மன்னமோகனசிங்..!
நன்றி:
http://truetamilans.blogspot.com/2010/04/blog-post_19.html
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.