Tuesday, 8 September 2009
தவிப்பில் தமிழினம்! மந்திரிப்பதவி ஆசையில் கூட்டமைப்பு?!
ஈழத்தமிழர்களின் உரிமைக்கான விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை வெற்றிகரமாக முறியடித்து விட்டதாக் கொழும்பு அரசு அறிவித்துள்ள இன்றைய சூழலில், தமிழர்கள் தமது எதிர்காலம் குறித்த சூனிய நிலைக்குள் அரசியல் அந்த காரத்துக்குள் சிக்கி, நிலை தெரியாமல், வழிபுரியாமல் தவிக்கின்றார்கள் என்று பல தரப்பிலும் பிரபலாபிக்கப்படுகின்றது.
இந்த இக்கட்டு நிலைமையில் இருந்து தமிழர்களை மீட்டு எதிர்கால சுபிட்சம் நோக்கி வழிநடத்துவதற்காக தமிழ் அரசியல் தலைவர்கள் ஒன்றுபட வேண்டும், ஐக்கியப்பட்டும் செயற்பட வேண்டும் என்றெல்லாம் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.
நல்ல விடயம் தான்.
இன்றைய நிலையில் தமிழர்களின் ஜனநாயக சக்திகள் ஐக்கியப்பட்டு ஏதேனும் சாதிக்கமுடியுமா, மக்களை அழிவில் இருந்து பாதுகாத்து மீட்டுக் கொள்ள முடியுமா என்பது ஆலோசிக்கப்பட வேண்டிய விவகாரமே. இது வரை, இனப்பிரச்சினை விவகாரத்தில் பேரம் பேசும் வலிமையாக சக்தியாக தமிழர் தரப்பிடம் இருந்த ஆயுதவலிமை முற்றாக சிதறடிக்கப்பட்டு, தாக்கப்பட்டு விட்டது என்பது யதார்த்தம்.
இனி தமிழர் தரப்பின் அரசியல் சக்திகள் ஒன்றபட்டு ஜனநாயக ரீதியாக தங்களின் வலிமை மூலம் இப்போது சிதறுண்டு சின்னாபின்னமாகி பேரவலங்கள் மற்றும் அனர்த்தங்களுக்குள் சிக்கிக்கிடக்கும் தமிழினத்தைக் காப்பாற்றி, தூக்கி நிறுத்தி, உரிய உரிமைகளையும் கௌரவ வாழ்வையும் மீட்டுப் பெறமுடியுமா என்பதே கேள்வியாகும்.
அதுவும் தமிழர்களின் இதுவரை காலமான ஆயுத வலிமை அழிக்கப்படுவதற்கு துணைபோன தரப்புக்களே இப்போது ஜனநாயக வழியில் ஐக்கியப்பட்டு சாதிப்போம் என்ற கோரிக்கையை முன்வைப்பது கவனிக்கத்தக்க விடயமாகும். இத்தரப்புகளுடன் ஒன்றிணைவதன் மூலம் எதையும் சாதிக்க முடியுமா என்பதை தமிழ்மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அரசோடு சேர்ந்துபாடி, கொடுப்பதைப் பெறலாம் என்ற தத்துவத்துக்குள் மூழ்கி, அதை நம்பி, செயற்படும் இத்தரப்புகளை ஊக்குவித்து ஆதரவளித்து வலுப்படுத்துவன் மூலமே ஏதேனும் விமோசனம் கிட்டும் என்று தமிழ் மக்கள் கருதுவார்களானால் இத்தரப்புக்களை அரவணைத்து ஐக்கியப்படுவது காலத்தின் கட்டாயம் ஆகும்.
தமிழ் மக்கள் தீர்மானிக்க வேண்டிய முக்கியவிடயம் இது. வரலாற்று திருப்பத்திலே நிற்கும் தமிழினம் இனி மேலும் இவ்விடயத்தில் ஒரு முடிவுக்கு வராமல் அதை ஒத்திப்போட முடியாது. ஒரு முடிவை எடுத்தேயாக வேண்டும்.
இதேசமயம் இதுவரை தமிழர் தரப்பில் ஐக்கியத்தின் பேரால் ஒன்றிணைந்த தரப்புக்களும் கட்சிகளும் சில முடிவுகளை எடுக்க முயல்கின்றன என்ற தகவல்கள் கசியத் தொடங்கியிருக்கின்றன.
தமிழரசுக்கட்சி அகில இலங்கைத்தமிழ் காங்கிரஸ் ஆகியன இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கின. இப்போது தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற பெயரையும் உதயசூரியன் சின்னத்தையும் அதன் தலைவர் ஆனந்தசங்கரி, இலங்கையின் நீதித்துறையைப் பயன்படுத்தி தம்வசம் வைத்திருக்கின்றார். எனினும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெரும்பான்மையான தலைவர்களும் தொண்டர்களும் மறுபக்கத்திலேயே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலேயே உள்ளனர் என்பது வெளிப்படையானது.
இதே சமயம் ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ போன்ற கட்சிகளும் இன்னும் சில உதிரித்தலைவர்களும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் உள்ளனர்.
தமிழர் தரப்பில் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் மூலம் தமிழர்களை அதிகம் பிரதிநிதித்துவம் செய்யும் கட்டமைப்பாக கூட்டமைப்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே உள்ளது என்பதும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமே.
தமிழர்களின் ஜனநாயக ரீதியான சக்திகள் கட்சிகள் ஐக்கியப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படும் இச்சமயத்தில், ஏற்கனவே ஓரளவுக்கு ஐக்கியப்பட்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே சிதறுண்டுபோகும் ஆபத்து ஏது நிலைகள் தென்படுகின்றன என்பது தான் கவலைக்குரிய விடயமாகும். தமிழர்களின் உரிமைக்கான போராட்டச்சக்தி என்ற வலிமையான கயிற்றில் கட்டப்படிருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, இப்போது அந்த பிரதான சக்தி என்ற கயிறு நொந்து நூலாகி போனதால் நெல்லிக்காய் மூட்டையின் வாயைக்கட்டிய கயிறு அறுந்ததால் சித றுண்டு போகும் நெல்லிக்காய் போல சிதறுப்பட்டுப் போகத் தயாராகி வருவதாகத் தோன்றுகின்றது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் சின்னமான "உதயசூரியன்' ஆனந்தசங்கரி அணியிடம் சிக்குண்டமையை அடுத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழரசுக்கட்சியின் "வீடு' சின்னத்திலேயே தேர்தல்களைச் சந்தித்து வருகின்றது. அதைக் காரணம் காட்டி எதிர்காலத்தில் தனித்துக் களமிறங்கும் முயற்சிகளை தமிழ்காங்கிரஸின் மூத்த தலைவர்கள் சிலர் ஏற்கனவே ஆரம்பித்து விட்டனர் எனத் தெரிகின்றது.
இதே போல தமிழ்க்கூட்டமைப்பின் பொது நிலைப் பாட்டுக்கு கட்டுப்படாமல் தான்தோன்றித்தனமாக அறிக்கைகள் வெளியிட்டுத் தனித்தவில் வாசிக்கும் சில பிரமுகர்களும் தமிழ்க் கூட்டமைப்பில் இருந்து தத்தமது கட்சிகளை உடைத்து வெளியேற்றும்தந்திரத்தில் இறங்கித் தம்தலையிலும் தமது இனத்தின் தலையிலும் மண்வாரி இறைக்கத் தயாராகி வருகின்றனர் என்றும் தெரிகின்றது.
இந்தச் சீத்துவத்தை நோக்கும் போது, இருக்கும் ஐக்கியமே சிதறுண்டு போகும் போலத்தோன்றுகின்றது. இந்நிலையில் தமிழ் ஐனநாயகக் கட்சியினருக்கிடையே மேலும் ஐக்கியம் வரும் என்று பேசுவதும் எதிர்பார்ப்பதும் வெறும் கனவு போலவே தோன்றுகிறது....!
Subscribe to:
Post Comments (Atom)
Thirukkural திருக்குறள் Holykural
Kural குறள் - 533
பொருட்பால் - பொச்சாவாமை
எப்பால் நூலோர்க்கும் துணிவு.
Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.
Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.