."ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Wednesday, 21 April 2010

காணொளி : புலிகள் - எம்.ஜி.ஆர் உறவும் இறுதிச் சந்திப்பும்

பாவை சந்திரன்

உங்களுடைய ஒத்துழைப்போ, ஆதரவோ இல்லாவிட்டாலும் ஒப்பந்தம் கையெழுத்தாவது உறுதி என்கிற வெளியுறவுச் செயலர் தீட்சித்தின் பேச்சிலேயே வெறுப்படைந்து விட்டிருந்த பிரபாகரன், அந்தமானில் சிறை வைக்கப்படுவீர்கள் என்று அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தார்.


பொறுமை இழந்த நிலையில் பிரபாகரன், "அப்படியென்றால் நீங்கள் இந்தப் பாதுகாவலை நீண்டநாள்கள் மேற்கொள்ளவேண்டியிருக்கும்; ஆண்டுகள் கூட ஆகலாம். நாங்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்க இயலாது - அதுவும் ஆயுதத்தை ஒப்படைப்பது என்பதை ஏற்கவே முடியாது' என்று ஆத்திரத்துடன் கூறினார்.
"நீங்கள் ஆயுதத்தை ஒப்படைக்காவிட்டால் நாங்கள் பறிமுதல் செய்வோம். எங்கள் ராணுவத்தினை ஈடுபடுத்தி அதைச் செய்வோம். எங்கள் ராணுவத்தின் முன் நீங்கள் ஒரு தூசு. எனது பைப்பில் உள்ள புகையிலைத் தூளைப் புகைத்து முடிப்பதற்குள் - ராணுவம் அந்த வேலையைச் செய்து முடித்துவிடும்' என்று அவர் குரலை உயர்த்தினார்.

பிரபாகரன், "உங்கள் விருப்பப்படி எது வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் நாங்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம். எங்களுக்கு எது நடைபெற்றாலும் சரி' என்றார்.

தீட்சித் கோபத்தின் உச்சத்துக்குச் சென்று, "பிரபாகரன் - இதுவரை நான்கு தடவை இந்தியாவை ஏமாற்றி விட்டீர்கள்' என்றார்.

"அப்படியா, நல்லது. எங்கள் மக்களுக்கு நான்கு தடவை நல்லது செய்திருக்கிறேன் என்று அதற்குப் பொருள்.'

உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த உயர் அதிகாரியான தீட்சித், அந்த அறையில் இருந்து வெளியேறினார்.

கடுமையான முறை பயன்தராததைக் கண்ட அதிகார அமைப்பு, இலகுத் தன்மையுடன் கூடிய அணுகுமுறையைக் கையாளும் எண்ணத்துடன் மீண்டும் பிரபாகரனிடம் வந்தனர். இம்முறை அதிகாரிகள் குழுவில் இந்திய உளவு அமைப்பு இயக்குநர் எம்.கே.நாராயணன் (தற்போது பிரதமர் மன்மோகன்சிங் ஆலோசகர்), வெளிநாட்டு உறவு இணைச் செயலாளர் சகாதேவ், வெளிவிவகார அமைச்சகத்தைச் சேர்ந்த நிகல் சேத், கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தைச் சேர்ந்த ஹர்தீப் பூரி ஆகியோர் தொடர்ச்சியாகத் தனித்தனி சந்திப்புகளை மேற்கொண்டு, சம்மதிக்க வைக்க முயன்றனர். ஆனாலும் பிரபாகரனும் மற்றவர்களும் ஒப்பந்தத்திற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை.

இதே நேரம், பழ.நெடுமாறன் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருந்தார். அங்குள்ள பத்திரிகைகள் "பிரபாகரனுக்கு ராஜீவ் திடீர் அழைப்பு' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு, அதன் விவரத்தையும் பிரசுரித்திருந்தன. இந்த ஒப்பந்தத்தைப் படித்ததும், நெடுமாறன், சென்னையிலுள்ள திராவிடர் கழகச் செயலாளர் கி.வீரமணியைத் தொடர்பு கொண்டார்.

""ஆமாம், பிரபாகரனை தில்லிக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். ஒப்பந்தத்தை ஏற்கும்படி வற்புறுத்தப்படுகிறார் என்று தெரிய வருகிறது'' என்றார் வீரமணி. "பிரபாகரன் எங்கிருக்கிறார்' என்று பழ.நெடுமாறன் கேட்கவும், அசோகா ஓட்டலில் இருப்பதாக கி.வீரமணி தெரிவித்தார். நெடுமாறன் அசோகா ஹோட்டலுக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டார்.

ஆஸ்திரேலியாவில் இருந்து, பிரபாகரனுக்கு போன் என்றதும், விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை அறியாத டெலிபோன் ஆபரேட்டர், பிரபாகரன் அறைக்கு இணைப்பை அளித்தார். இதுகுறித்து பழ.நெடுமாறன் கூறியதாவது:

""நான் போன் போட்டதும், மறுமுனையில் தம்பி பிரபாகரனே எடுத்தார். எனக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. தம்பி - நான் கேள்விப்படுகிற செய்தி உண்மையா?'' என்றேன். அவர், "ஆமாம் அண்ணா! எங்களைச் சிறைவைப்பது போன்று அடைத்து வைத்திருக்கிறார்கள். யாரையும் சந்திக்கவும் அனுமதிக்கவில்லை. வை.கோபால்சாமி உள்ளே வந்தபோது அவரையும் சந்திக்கவிடவில்லை. உடன்பாட்டை ஏற்க வேண்டும் என்று நிர்பந்திக்கிறார்கள். தீட்சித் மிரட்டுகிறார். இந்திய ராணுவத்தின் மூலம் ஆயுதங்களை எங்களிடமிருந்து பறிப்போம் என்கிறார். நான் எல்லாவற்றுக்கும் மறுத்து வருகிறேன்' என்றார்.

தம்பி கூறியதைக் கேட்டதும் எனக்குப் பதைபதைப்பு அதிகமானது. ""அப்படியானால் எனது சுற்றுப்பயணத்தை ரத்துசெய்துவிட்டு உடனடியாகத் திரும்புகிறேன்'' என்றேன். அவர் ""ஆமாம் அண்ணா! உடனடியாகத் திரும்பினால் நல்லது'' என்றார். எனது பயண ஏற்பாடுகளை ஆஸ்திரேலியாவில் செய்த சோமசுந்தரமும் தம்பியுடன் அப்போது பேசினார். உடனடியாகத் தாயகம் திரும்பினேன். (நேர்காணல் - பழ.நெடுமாறன் - 29-8-2009)

இதனிடையே பிற இயக்கங்கள் அனைத்தின் பிரதிநிதிகளும் தில்லிக்கு அழைக்கப்பட்டு, அவர்களின் ஒப்புதலும் பெறப்பட்டது. இவர்கள் அனைவரும் தங்களது சொந்தச் செலவில் சென்னையிலிருந்து தில்லிக்கு ரயிலில் வந்து தங்கிச் சென்றனர்.

"விடுதலைப்புலிகள் விஷயம் என்னவாயிற்று' என்று ராஜீவ் கேட்டதும் "பிரபாகரன் ஏற்க மறுக்கிறார்' என்றும் தெரிவிக்கப்பட்டது.

அவரின் ஆலோசனைக்கு ஏற்ப தமிழக முதலமைச்சருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, சிறப்பு விமானம் மூலம், அவர் தில்லி வரவழைக்கப்பட்டார்.

தமிழக முதலமைச்சர் தில்லி வந்ததும், தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். அன்றைய இரவே, அசோகா ஹோட்டலில் இருந்த பிரபாகரன் குழுவினரைத் தமிழ்நாடு இல்லத்துக்கு அழைத்துச் சென்றார்கள். இது தொடர்பான விவரங்களை அன்டன் பாலசிங்கம் தான் எழுதிய "விடுதலை' நூலில் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பகுதி வருமாறு:

""தலைவர் பிரபாகரனும் நானும் யோகி என்கிற யோகரத்தினமும் எம்.ஜி.ஆரிடம் அழைத்துச் செல்லப்பட்டோம். முதலமைச்சருடன் தீட்சித்தும் இருந்தார். இந்திய - இலங்கை ஒப்பந்தம் பற்றியும் அதில் பரிந்துரைக்கப்பட்ட மாகாண சபைத் திட்டம் பற்றியும் இம் மாகாண சபைத்திட்டம் மூலம் ஈழத் தமிழரின் அரசியல் அபிலாஷைகள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளது என்றும் தீட்சித் சொன்னதை நாடியில் கையூன்றியவாறு பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர்.''

""தமிழர் விடுதலைக் கூட்டணியும் சகல போராளிக் குழுக்களும் இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கின்றன. ஆனால் இவர்கள் மட்டும் இதனை எதிர்க்கிறார்கள். தமிழீழத் தனியரசைத் தவிர இவர்கள் எதையுமே ஏற்க மாட்டார்கள் போலத் தெரிகிறது. ஆனால் இந்திய அரசு தனியரசு அமைவதை ஒருபொழுதும் அனுமதிக்கப் போவதில்லை. இவர்கள் இந்தியாவை விரோதித்தால், பாதகமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்'' என்றார் இந்தியத் தூதுவர்.

""இந்த மாகாண சபைத் திட்டத்தில் உருப்படியாக ஒன்றுமில்லை. தமிழ் மக்களின் அபிலாஷையை இது பூர்த்தி செய்யவில்லை. அப்படியிருக்க, இத்திட்டத்தை நாம் எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும்?'' என்றார் யோகி என்கிற யோகரத்தினம். இதைத் தொடர்ந்து யோகிக்கும் தீட்சித்துக்கும் கடும் வாக்குவாதம் மூண்டது.

""சென்றவாரம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பூரி இந்த ஒப்பந்தம் பற்றியும் மாகாணசபைத் திட்டம் பற்றியும் உமக்கு விவரமாக விளக்கினாராம். அப்போது அதற்கு ஆதரவு தெரிவித்த நீங்கள் இப்போது எதற்காக எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்?'' என்று தீட்சித் கேட்க, ""யாழ்ப்பாணத்தில் இந்த ஒப்பந்தம் பற்றி எதுவுமே பேசப்படவில்லை'' என்றார் யோகி.

""என்னை ஒரு பொய்யன் என்று சொல்கின்றீர்களா?'' என்று கேட்டார் தீட்சித். ""நீங்கள் உண்மை பேசவில்லை'' என்றார் யோகி.

வாக்குவாதம் சூடுபிடித்தது. முதலமைச்சரைப் பார்த்து, ""பாருங்க சார், என்னைப் பொய்யன் என்று சொல்கிறார்'' என்றார் தீட்சித்.

இந்தியத் தூதுவர் தீட்சித் உணர்ச்சிவசப்படுகிறார் என்பதை உணர்ந்த எம்.ஜி.ஆர்., ""நீங்கள் சிறிது நேரம் வெளியே இருக்கிறீர்களா? நான் இவர்களுடன் பேச வேண்டும்'' என தீட்சித்தை வேண்டிக்கொண்டார். சிறிது தயக்கத்துடன் அங்கிருந்து வெளியேறினார் இந்தியத் தூதுவர்.

இந்திய - இலங்கை ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகள் பற்றியும் அதனை ஏற்றுக்கொள்ள நாம் மறுப்பதன் காரணங்கள் பற்றியும் எம்.ஜி.ஆர். எம்மிடம் வினவினார். ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி எமது நிலைப்பாட்டைத் தெளிவாக விளக்கினோம்.

ஈழத்து அரசியல் கட்சிகளும், ஆயுதக் குழுக்களும் இந்திய அரசின் நெருக்குதலுக்கும், மிரட்டலுக்கும் பணிந்துவிட்டார்கள் என்றும், இந்திய அச்சுறுத்தல்களுக்குப் பணிந்து நாம் எமது மக்களின் உரிமைகளை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என்றும் சொன்னோம்.

தமிழரின் இனப் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணாத நிலையில், சிங்கள ஆயுதப் படைகள் தமிழர் மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் சூழ்நிலையில், எமது ஆயுதங்களைக் கையளித்து, எமது போராளிகளைச் சரணடையுமாறு கேட்பது நியாயமற்றது என்பதையும் எடுத்து விளக்கினோம்.

எமது விளக்கங்களை முதலமைச்சர் பொறுமையுடன் செவிமடுத்தார். எமது நிலைப்பாட்டின் நியாயப்பாடுகளையும் அவர் புரிந்து கொண்டார். இந்திய - இலங்கை ஒப்பந்தமானது இந்தியாவின் கேந்திர - புவியியல் நலனைப் பேணுவதற்காகவே செய்து கொள்ளப்பட்டது என்பதையும் உணர்ந்து கொண்டார். இந்திய - இலங்கை ஒப்பந்த விவகாரத்தில் பிரபாகரன் என்ன முடிவு எடுக்கின்றாரோ, அதற்குத் தனது முழு ஆதரவும் இருக்கும் என்றார் எம்.ஜி.ஆர். அழுத்தங்களுக்கு விட்டுக் கொடுக்காது, கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பது குறித்து பிரபாகரனை அவர் பாராட்டவும் தவறவில்லை.

முதலமைச்சருக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம். முதலமைச்சரின் சந்திப்பு அறைக்கு வெளியே தீட்சித்தும் ஓர் இந்தியப் புலனாய்வு அதிகாரியும் நின்று கொண்டிருந்தனர். எம்மை வழிமறித்த இந்தியத் தூதுவர், ""ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி முதலமைச்சர் வற்புறுத்தினார் அல்லவா?'' என்று கேட்டார். நாம் பதிலளிக்காது மௌனமாக நின்றோம். ""முதலமைச்சர் சொன்னபடியே செய்யுங்கள்'' என்றார். ""அப்படியே செய்வோம்'' என்று கூறிவிட்டுச் சென்றோம்.

முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களுடனான விடுதலைப் புலிகளின் கடைசிச் சந்திப்பு அதுதான்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் HolykuralKural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis