1963ம் ஆண்டு துரு துரு என்று சுழன்றுகொண்டிருக்கும் பார்வை. ஆனால் எதையுமே ஊடுருவிப் பார்க்கும் அழகான பெரிய விழிகள் ஏகாந்தமாக அக்கோயில்களின் வீதிகளினை அளந்து கொண்டிருக்கும் சிறிய கால்கள்.
ஆனால் ஏனைய சிறுவர்களுக்கு இருக்கும் அதீதமான குறும்புகள் அற்று யாரைப்பார்த்தாலும் வெட்கப்பட்டு அல்லது சங்கோசப்பட்டு அமைதியாக ஒதுங்கிப் போகும் சுபாவம்.
இதுதான் மட்டக்களப்பிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பி வந்திருக்கும் உறவினரான வேலுப்பிள்ளையின் கடைக்குட்டிச் சிறுவனான பிரபாகரன்.
பார்க்கப் பார்க்க காரோடும் வெள்ளைச்சாமிக்கு (சோமசுந்தரம் சிவபாதசுந்தரம்) என்னவோ செய்தது.
ஆனால் எதையுமே புரிந்து கொள்ள முடியவில்லை!. ஏதோ ஒரு வித்தியாசம்?... தந்தை வழிச் சொத்தான வல்வை வைத்தீஸ்வரர் கோயில் உற்சவங்களிலும் மற்றும் விசேட தினங்களிலும் சாமி வீதிவலம் வரும்போது அர்ச்சகருக்கு முன்பாக கொடியுடன் நடந்து வருபவர்தான் சிறுவன் பிரபாகரன்.
வெள்ளைச்சாமிக்கு ஏனோ புரியவில்லை சாதாரண சிறுவர்கள் காரில் செல்லும்போது தம்மையே சாரதியாக எண்ணிக் கொண்டு முண்டியடித்து முன் சீற்றிலேயே ஏற விரும்புவார்கள்.
ஆனால் சிறுவன் பிரபாகரனோ கார் ஓடும்போது ஏற்படும் அந்தப் பெற்றோல் எரியும் மணம் பிடிப்பதில்லை எனக் கூறி பின் சீற்றிலேயே அமர்ந்து கொள்வதும் வெளியிலே அமைதியாகப் பார்த்துக் கொண்டு வருவதும் வழமையான நிகழ்ச்சியே.
ஆனால் வெள்ளைச்சாமிக்கு ஏனோ ஆச்சரியம் இவ்வாறான சந்தர்ப்பங்களில் வெள்ளைச்சாமி சிறுவனுக்கு வேடிக்கையாகக் கூறுவது “டேய் உன் மூக்கை வீட்டிலேயே கழற்றி வைத்து விட்டு வா.” அதேசமயம் தாய் தந்தையர்க்குக் கூறுவது “இவன் ஒரு வித்தியாசமான ஆள் என்னவென்று புரியவில்லையே”.
ஆம் அன்று அந்த ஒன்பது வயதுச் சிறுவனை வெள்ளைச்சாமிக்கு மட்டுமே புரியவில்லை. ஆனால் இன்று ஐம்பது வயது கட்நத அதே பிரபாகரனை முழு உலகத்திற்கும் புரியவில்லை.
ஏன் உலகின் உச்சமான வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கும் புரியவில்லை. ஏன் இவ்வாறு நடந்தது? யார் இந்தப் பிரபாகரன்?
இவர் வெறுமனே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரா? அல்லது தமிழீழ மக்களின் தேசியத் தலைவரா? பலரும் பலவாறாக எழுதுகின்றார்கள் பேசுகின்றார்கள்.
ஆனால் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்னும் இவரது பெயர் வெற்றி பெற்ற விடுதலைப் போராட்ட வீரர்களான மாசேதுங், கோஷிமின், பிடல்கஸ்ரோ என்போரின் வரிசையில் சேர்க்கப்பட்டு விட்டது.
ஆனால் முன் கூறிய மூவருக்கும் இல்லாத தனிச்சிறப்பு இவருக்கு உண்டு.
இருபதாம் நூற்றாண்டிலும் இருபத்தியோராம் நூற்றாண்டிலும் ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் போராட்டத் தலைமையை ஏற்று நடத்திய தொடர் போராட்ட வீரர். அல்லது விடுதலை இயக்கத் தலைவர் என்னும் தனிச்சிறப்பாகும்.
உலகின் ஏனைய விடுதலைப் போராட்டங் களுடன் ஒப்பிடும்போது தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது நம்பமுடியாத பல உண்மைகளைக் கண்டு நகர்ந்து கொண்டிருப்பதாகும்.
கடலினால் சூழப்பட்ட தரைவழித் தொடர்புகளற்ற ஒரு தீவில் சிறுபான்மை இனமொன்று தன்னைவிடப் பலமடங்கு வலிமை கொண்ட அரச இயந்திரம் அதிலும் ஏகாதிபத்திய பிராந்திய மற்றும் உலக வல்லரசு களில் துணை கொண்டு இனம் மொழி நிலம் என ஆக்கிரமிப்பு மற்றும் அழிப்பு நடவடிக் கையில் ஈடுபடும் பொழுது அதனை எதிர்த்து வெற்றி கொள்வதாகும்.
இவ்வாறான நிலைமை எவ்வாறு சிறுபான்மை ஈழத்தமிழ் இனத்திற்கு சாத்தியமானது. இதுதான் இன்று உலகளாவிய ரீதியில் கேட்கப்படும் ஒரே கேள்வியாகும்.
அதற்கான விடை தலைவர் பிரபாகரன் நினைத்தால் எதுவும் சாத்தியமாகும் என்பதே.
இந்நிலையில்தான் யார் இந்தப் பிரபாகரன் என்னும் கேள்வி பூதாகரமாக எழும்புகின்றது.
இதற்கான விடையை பேனா முனை வீரர்கள் எனப்படும் பத்திரிகையாளர்கள் மற்றும் நூலாசிரியர்கள் என்போர் பேட்டிகள் மூலமும் தமது ஆய்வுக் கட்டுரைகள் மூலமும் எதிர்வு கூறல்கள் மூலமும் எழுத முற்படுகின்றார்கள். ஆனால் முழுமை காணமுடியவில்லை.
இதேபோலவே அவரோடு உடனிருந்த தளபதிகள் மற்றும் போராளிகள் என்போரும் அவரைப்பற்றி எழுத முற்படுகின் றார்கள். ஏனெனில் அவர் ஒரு சரித்திர புருஷர்.
அவர் வரலாறு சாகாவரம் பெற்றது. இன்று மட்டுமல்ல இன்னும் ஆயிரம் வருடங்கள் அல்ல இரண்டாயிரம் வருடங்கள் கழிந்தாலும் அவர் வரலாறு ஆய்வுக்கு உட்ப டுத்தப்படும்.
இந்நிலையில்
“இயற்கை எனது நண்பன்”
“வாழ்க்கை எனது தத்துவாசிரியன்”
“வரலாறு எனது வழிகாட்டி”
என வரலாறாய் வாழும் அவரைப்பற்றிக் கூற முற்படும்போது முதலாவதாக அவர் பிறந்தபோதினில், 1954ம் ஆண்டு கார்த்திகை மாதம் 26ம் நாளில் தலைவர் பிரபாகரன் அவர்கள் பிறந்தார். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த வேலுப்பிள்ளை பார்வதி தம்பதியினருக்கு அன்று பிரபலமாயிருந்த இணுவில் மகப்பேற்று நிலையத்தில் இவர் அவதரித்தார்.
அவருடைய தாய்மாமனான வல்லிபுரம் வேலுப்பிள்ளை தமிழரின் வரலாற்றை மாற்றப்போகும் அக்குழந்தைக்கு பிரபாகரன் என்னும் பெயரை இட்டார் இது ஒரு சாதாரண நிகழ்ச்சியே. ஆனால் இதன்பின்பேதான் பெரும் வரலாறு மறைந்து கிடந்தது.
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை உத்தியோகம் நிமித்தம் அநுராதபுரத்திற்கு 1953 செப்டெம்பரில் மட்டக்களப்பிலிருந்து மாற்றலாகிச் சென்றார்கள்.
அவர்களுக்கான தங்கும் விடுதி குருநாகல் வீதியில் இருந்த ஏலாலசோண என்னும் இடத்திலேயே கொடுக்கப்பட்டிருந்தது. இவ்விடுதி அன்றைய குருநாகல் - புத்தளம் பிரதான வீதிகளை இணைக்கும் சிறு வீதி ஒன்றில் குருநாகல் அநுராதபுர வீதிக்கு சமீபமாக அமைந்தது.
இவர்களின் விடுதிக்கு அருகாமையில் நெல்லியடியைச் சேர்ந்த இராசையா என்ற அரசாங்க ஊழியருக்கு கொடுக்கப்பட்ட விடுதி அமைந்திருந்தது.
ஏலாலன், எல்லாளன், ஏலாரா என்னும் பெயர்கள் யாவுமே குறிப்பது ஈழாளன் என்னும் அரசனையே ஆகும். “ஈழம்” என்பது தூய தமிழ்ச் சொல்லாகும்.
ஈழாளனுடைய காலமான கி.மு 145 – 101 வரையான காலப்பகுதியில் இன்றைய இலங்கை முழுவதுமே ஈழம் என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளது.
ஈழம் என்னும் அடியாகப் பிறந்த பெயரே இலங்கா என்பதாகும் இதுவே பின்பு இலங்கை என தமிழில் மாற்றமடைந்தது. இங்கு குறிப்பிடத் தக்கது. இவ்வாறு ஈழம் என்னும் இடத்தைக் குறிப்பிடும் பல தொல்லியல் சான்றுகளை INSCRIPTIONஸ் OF CEYLON – VOLUME 1 என்னும் புத்தகத்திலும் ANNUAL RE-PORT ON SOUTH INDIAN EPIGRAPHY – VOLUME 1(1908) என்னும் புத்தகங்களிலும் நாம் காணமுடியும்.
இங்கு கூறப்பட்டவை யாவுமே 2000 வருடங்களுக்கு முற்பட்ட வையாகும். ஆரம்ப காலங்களில் முழு இலங்கையையும் குறிக்கப்பயன்பட்ட இச்சொல்லா னது இன்று இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களிற்குள் சுருங்கியது பெரு வரலாறாகும்.
“ஈழ” என்பதன் அடியாகப் பிறந்த “இலங்கா” என்பது முழு நாட்டினையும் குறிக்க அதன் மூலச்சொல்லான ஈழம் என்பது இலங்கையின் வட, கிழக்குப் பகுதியினையே இன்று குறித்து நிற்கின்றது.
இன்றைய உலகின் மெக்ஸிக்கோ நாட்டின் தலைநகராக மெக்ஸிக்கோசிற்றி குறிக்கப்படுவதுபோல அன்றும் ஈழத்தில் “ஈழஊர்” என்னும் ஓரிடத்தை வரலாற்றில் நாம் காணமுடியும். இது இன்றைய பூநகரிப் பகுதியின் “வேரவில்”; எனப்படும் பகுதியாகும். அதன் அருகில் இருக்கும் குடா “ஈழவன் குடா” என அழைக்கப்பட்டது.
இவ்வாறு போர்த்துக்கேயர் காலம்வரை குறிப்பாக 1621ம் ஆண்டு இப்பகுதி ஈழ ஊர் என அழைக்கப்பட்ட வரலாற்றுக் குறிப்புகள் எம்மிடம் உண்டு. (THE TEMPRAL AND SPIRITUL CONQUEST OF CEYLON,FERNAO DE QUEYROZ) அநுராதபுரத்திற்கு வடக்கே இருந்து வருபவர்களை குறிக்கும் சொற்களாக சோழ, ஈழ என்பன பௌத்த இதிகாசங்களில் காணப்படுகின்றன. இதுபோலவே பௌத்த மத இலக்கியமான மகாவம்சத் திலும் மேற்கூறிய ஈழாளனை சோழ நாட்டிலிருந்து வந்ததாக குறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மூலநூலான தீபவம்சத்தில் இவனுடைய பெயர் (ஈ)ஏலார எனக் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர சோழநாட்டில் இருந்து வந்தவன் என்ற குறிப்பேது மில்லை.
இவ்வாறு ஈழ ஊர்ப்பகுதியிலிருந்து அநுராதபுரத்தை வெற்றி கொண்ட காரணத்தால் இவனுடைய பெயர் ஈழாளன் அல்லது ஈழரா(சா) என அழைக்கப்பட்டுள்ளது. எனினும் மொழிமாற்றத்தில் ஏற்பட்ட தொடரான குளறுபடியால் பின்பு ஈழாளன், ஏலாலன் அல்லது எல்லாளன் என
மாற்றமடைந்தது. இவ்வரசன் 44 வருடங்கள் அநுராதபுரத்திலி ருந்து நல்லாட்சி செய்தபின் தனது வயோதிப வயதில் துட்டகைமுனு என்னும் இளையனான பௌத்தமத அரசானால் தனிச்சமரில் கொல்லப்பட்டார். இவ்வாறு இவன் வீரமரண மடைந்து அவனது இறுதிக்கிரியை நடைபெற்ற இடத்திலேயே துட்டகைமுனுவால் ஒரு நினைவுத்தூபி அமைக்கப்பட்டு அது ஏழாளன் நினைவுத் தூபி (TOMB) எனவும் அழைக்கப்பட்டு வந்தது.
அப்பகுதி ஏழாளனின் நினைவுத் தூபிக்கு அருகா மையில் இருந்ததால் ஏழாளசோண என அன்று முதல் அழைக்கப்பட்டு வருகின்றது. “சோண” என்னும் வடமொழிச் சொல் அருகாமை என்னும் பொருள் கொண்டது.
இந் நினைவுத்தூபிக்கு முன் இருந்த ஒழுங்கையிலேயே பிரபாகரனின் தந்தையாரான திரு.வேலுப்பிள்ளைக்கு உரிய விடுதி வழங்கப்பட்டிருந்தது. இவ்விடுதியிலிருந்து புறப்பட்டு வேலைக்கு அல்லது வெளியில் எங்கு செல்வதானாலும் ஈழாளனுடைய நினைவைத் தாங்கி நிற்கும் இச் சேதியத்தைக் கடந்துதான் செல்லவேண்டும். இது தினசரி நடைபெறும் சம்பவமாகும். இந்நிலையில் பவித்திரமான வேலுப்பிள்ளை பார்வதி தம்பதியினருக்கு கருவுண்டானது.
இக்கருவே பிரபாகரனாக பின்பு அவதாரமானது. தினம் தினம் ஈழாளனுடைய அந்த நினைவுத்தூபியினைத் தரிசித்து வாழ்ந்த அந்தத் தம்பதியினருக்கு தமிழ்ஈழம் என்னும் நாட்டைஉருவாக்க முயன்ற மகன் பிறந்தது ஆச்சரியமில்லை. கர்ப்பமுண்டாகிய பெண் தொடர்ச்சியாக எதனைக் கவனமாக மிக உள்ளுணர்வுடன் பார்க்கின்றாரோ அல்லது சிந்திக்கின்றாரோஅவ்வாறே குழந்தையின் உணர்வுகளும் உருவாகும் என்பது இக்கால நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்பு. இதுவே 55 வருடங்களுக்கு முன் பிரபாகரன் உருவாகிய வரலாறு.
இதனையே திருமூலர் தனது திருமந்திரத்தில்
“ஏயங்கலந்த இருவர்தஞ் சாயத்துப்
பாயுங்கருவும் உருவாம் எனப் பல
காயங்கலந்தது காணப்பதிந்தபின்
மாயங்கலந்த மனோலயமானதே”
என தனது திருமந்திரம் முதலாம் பாகத்தில் 459ம் பாடலில் இவ்வாறு கூறியிருப் பதும் எமது முன்னைய தமிழர்களின் நுண்ணறிவிற்குச் சான்றாகும்.
நன்றி : வல்வை
http://www.valvai.com
*குறிப்பு
ஏலாலன், எல்லாளன், ஏலாரா என்னும் பெயர்கள் யாவுமே குறிப்பது ஈழாளன் என்னும் அரசனையே ஆகும். “ஈழம்” என்பது தூய தமிழ்ச் சொல்லாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
Thirukkural திருக்குறள் Holykural
Kural குறள் - 533
பொருட்பால் - பொச்சாவாமை
எப்பால் நூலோர்க்கும் துணிவு.
Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.
Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.