“வல்வெட்டித்துறை மக்களே! என் தமிழ் ஈழ உறவுகளே! உங்கள் கண்ணீரோடு சேர்ந்து வானமும் அழுகிறது. என் நாடி நரம்புகளில் ஓடுகின்ற குருதி ஓட்டத்திலே கலந்து இருக்கின்ற என் தமிழ் ஈழச் சொந்தங்களே!
இருதயம் எல்லாம் உறைந்துபோன கண்ணீரினுடைய வேதனைப் புலம்பலில் அனைவரும் அழுதுதவித்துக் கொண்டு இருக்கின்ற நேரத்தில் தமிழ்த் தாயின் தவமைந்தனான மாவீரர் திலகமாம் பிரபாகரனை இந்தத் தரணிக்குத்தந்த என் போற்றுதலுக்குரிய மேதகு வேலுப்பிள்ளை அவர்களின் உயிரற்ற சடலத்துக்குப் பக்கத்தில் நீங்கள் அழுதுபுலம்பி அமர்ந்து இருக்கிறீர்கள் அங்கே திரண்டு இருக்கின்றீர்கள் உலகம் எல்லாம் வாழுகின்ற தன்மானத் தமிழர் நெஞ்சமெலாம் இன்றைக்கு நீராகி வேதனைத் தணலில் வெந்துகொண்டு இருக்கின்றது. வல்வெட்டித்துறை என்று சொன்னாலே நம்முடைய நரம்புகளில் மின்சாரம் பாயும். ஆம்! கிறிஸ்தவர்களுக்கு ஒரு ஜெருசலம்; இஸ்லாமியர்களுக்கு ஒரு மெக்கா; இந்துகளுக்கு ஒரு காசி; முருகபக்தர்களுக்கு திருச்செந்தூர் உள்பட அறுபடை வீடுகள்.
அதைப்போல தமிழர்களுக்கு இந்த வல்வெட்டித்துறை தமிழர்களுக்கு இந்த உலகில் ஒரு முகவரியைப் பெற்றுத்தந்த மாவீரர் திலகத்தைத் தந்த ஊர். இருபது ஆண்டுகளுக்கு முன்னாலே அந்த ஊர் மண்ணிலே காலெடுத்து வைக்கின்ற பாக்கியம் பெற்றேன். அந்த ஊர் தான் எங்கள் கிட்டுவைத் தந்தது. ஒவ்வொரு வீட்டிலும் வல்வெட்டித்துறையில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவீரமகன் தன் வீரமகள் தமிழ் ஈழ விடுதலைப்போரில் இரத்தம் சிந்தி உயிர் நீத்திருக்கிறார்கள். எவ்வளவு துக்கமும் துயரமும் உங்களை வதைக்கின்றது என்பதை நான் அறிவேன்.
எக்காலத்திலும் ஏற்படாத பேரழிவு நம் மக்களுக்கு ஏற்பட்டு நமது பிஞ்சுக் குழந்தைகள் கொல்லப்பட்டு நமது தாய்மார்கள் எல்லாம் நாசமாக்கப்பட்டார்களே, மண்ணின் விடுதலையைக் காக்க, தமிழ் ஈழத் தேசத்தை தட்டி எழுப்ப, உலகம் இதுவரைக் கண்டும் கேட்டிராத வீரசாகசங்களை நிகழ்த்திய மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்கள் அந்த வல்வெட்டித் துறையில் பிறந்தார்.
ஒரு பண்புள்ள குடும்பத்தில் அந்த ஊரின் சிவன்கோவிலைத் தந்திட்ட ஒரு பராம்பரியத்தில் திருவேங்கட வேலுப் பிள்ளை – பார்வதி அம்மையாரின் கடைசி புதல்வனாக நமது பிரபாகரன் பிறந்தார். அந்த வேலுப்பிள்ளை அவர்கள் நேர்மையின் சிகரம் ஒழுக்கத்தின் உறைவிடம் பண்பாட்டின் இருப்பிடம். அவரும் பார்வதி அம்மையாரும் ஆதர்ஷ தம்பதிகள். ஒருவருக்காகவே ஒருவர் வாழ்ந்தவர்கள். எப்படி மறப்பேன்? என் வீட்டுக்கு எத்தனையோ முறை அவர்களது காலடிபட்ட பாக்கியம் என் வீட்டுக்குக் கிடைத்தது. என் பேரப்பிள்ளைக்கு இருவரும் என் வீடுதேடிவந்து பிரபாகரன் என்று பெயர் சூட்டினார்கள். அவர்கள் முசிறியில் சிகிச்சைப் பெற்றுக் கொண்டு இருந்த காலங்களில் பலமுறை அவர்களைச் சென்று பார்த்து இருக்கிறேன்.
எந்த உதவியும் யாரிடமும் நாடமாட்டார் பெறமாட்டார். சுயமரியாதைத் தன்மானத்துக்கு இலக்கணமாக வாழ்ந்தவர். அப்படி வாழ்ந்த அவர்களுக்கு எவ்வளவு பெரிய துன்பம். இன்றைக்கு அவர் மறைந்துவிட்டார். எதற்காக அவரை விசாரணை முகாமில் சிங்கள அரசு வைத்து இருக்க வேண்டும்? ஏன் அவர்களை அடைத்துவைத்தார்கள்? என்ன சிகிச்சை தந்தார்கள்? இன்றைக்கு உலகம் முழுவதும் ஏற்பட்ட கொந்தளிப்பின் விளைவாக என் அருமைச் சகோதரர் சிவாஜிலிங்கம் அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியினால் பிரபாகரனுடைய உடன்பிறந்த சகோதரியின் வேண்டுதலுக்கு ஏற்ப இன்றைக்கு வேலுப் பிள்ளையின் உயிரற்ற சடலம் வல்வெட்டித்துறைக்கு வந்திருக்கின்றது.
எந்த மண்ணில் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 பேர் தீயினிலே வைக்கப்பட்டு. நெருப்பில் அவர்களது உடல் கருகியதோ அதே தீவில் இருக்கக்கூடிய வல்வெட்டித் துறையில் இன்றைக்கு வேலுப்பிள்ளையின் உடலை அந்தச் சடலத்தைவந்து அருகிலே இருந்து பூக்களைத் தூவி வீரவணக்கம் மரியாதை செலுத்துகின்ற வாய்ப்பு எனக்கு இல்லை. ஆனால், என் உள்ளம் எல்லாம் அங்கேதான் இருக்கின்றது. அந்த இடத்தில் இருக்கின்ற என் அன்புக்குரிய தாய்மார்களே பெரியோர்களே, என்னுடைய அருமைச் சகோதரர்களே உங்கள் துன்பம் உலகில் எங்கும் யாருக்கும் ஏற்படவில்லை.
ஆனாலும் இந்த வல்வெட்டித்துறை என்ற மண்ணுக்கு வரலாற்றில் ஒரு அழியாத புகழை தந்த குடும்பம் வேலுப்பிள்ளையின் குடும்பம். அவரது மகன் பிரபாகரன். உலகத்தில் பிரபாகரனுக்கு நிகரான ஒரு தலைவன் இதுவரை விடுதலைப் போர்க் களங்களில் தோன்றியது இல்லை. ஒழுக்கம் நிறைந்த தலைவன். அப்படிப்பட்ட ஒரு தலைவன் தமிழ் இனத்தில் மட்டுமல்ல வேறு எந்த இனத்திலும் தோன்றியது இல்லை.
ஆகவே, ஒரு அரசை உருவாக்கி முப்படைகளை உருவாக்கி ஏழு வல்லரசுகளின் ஆயுத பலத்தை எதிர்த்து நின்றவர் பிரபாகரன். அவர் பெயரைச் சொல்லாலேயே உலகத்தில் இருக்கின்ற கோடிக்கணக்கான தமிழர்கள் உள்ளத்தில் வைத்து பூஜிக்கிறார்கள் என்பதை நான் தெரிவித்துக் கொள்கின்றேன். எனவே இந்த நேரத்தில் அழுதுபுலம்புகின்ற வேளையில் என் கண்ணீரைக் கொட்டுகின்ற நேரத்தில் எந்த் இலட்சியத்துக்காக போர்க்களங்களை வல்வெட்டித்துறையின் வீரப்பிள்ளைகளும் வீரமங்கைகளும் கண்டார்களே அந்த இலட்சியத்தை வென்றெடுப்போம். தமிழர்களுக்கு ஒரேயொரு தீர்வுதான் அது வட்டுக்கோட்டையிலே தந்தை செல்வா காலத்தில் போடப்பட்ட சுதந்திர இறையாண்மை உள்ள தனித் தமிழ் தேசம். இதைத்தவிர வேறு தீர்வு இல்லை. இது வேலுப்பிள்ளையின் சடலத்துக்குப் பக்கத்தில் திரண்டு இருக்கின்ற மக்களுக்கு நான் சொல்கிறேன்.
நம்முடைய வேலுப்பிள்ளை அவருடைய உடல் இன்னும் சிறிதுநேரத்தில் எரியூட்டப்பட்டு விடும். தணல் எரியும். அந்த நெருப்பில் அந்த உடல் கருகிவிடும். அவர் அடக்கம் செய்யப்பட்டுவிடுவார். ஆனால், அவரை உலகம் பூராவும் இருக்கக்கூடிய தமிழ் மக்கள் நெஞ்சத்தில் வைத்துப் போற்றுகிறார்கள். என்னுடைய அருமைத்தாயார் பார்வதி அம்மையார் அவர்களை அந்த அரசு இந்தியாவுக்கு அனுப்பட்டும். தமிழகத்தில் நாங்கள் எங்கள் வீடுகளில் வைத்து பராமரிப்போம். என் வீட்டில் வைத்து நான் பராமரிப்பேன். காயமுற்ற புலிகளை ஒன்றரை ஆண்டுகாலம் என் தாயும், என் தம்பியும், நானும் வைத்துப் பராமரித்தோம்.
அந்த உத்தமத் தளபதியைப் பெற்றெடுத்த பத்துமாதம் வயிற்றிலே சுமந்த அந்தத் தாயை எங்கள் தமிழ் மண்ணில் தமிழகத்தில் நாங்கள் போற்றுவோம். அவர் இங்கே வரட்டும். நாங்கள் பாதுகாப்போம். பராமரிப்போம்.
இன்னொன்றையும் சொல்லவிரும்புகிறேன் இந்த நேரத்தில் வல்வெட்டித்துறையின் என் அருமைத் தமிழர்களே, என் அருமைத் தாய்மார்களே சகோதரர்களே, மனம் உடைந்துவிடாதீர்கள். மனம் தளர்ந்துவிடாதீர்கள். விதைக்கப்பட்ட அந்தத் தியாகம் வீண்போகாது. சிந்தப்பட்ட இரத்தம் வீண்போகாது. கொடுக்கப்பட்ட உயிர்கள் வீண்போகாது. உலகத்தில் எங்கும் நடத்தப்படாத கொடுமைகள் தமிழ் இனத்துக்கு நடந்தன. ஆயினும்கூட இந்த விடுதலைப் போர்வரலாற்றில் நமக்கு ஒரு விடியல் வரும். குழப்பங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். அந்தவகையில் பிரபாகரன் வாழ்கிறார்; நெஞ்சில் வாழ்கிறார்; இந்தப் புவியில் வாழ்கிறார்; வருவார். ஒருநாள் போரை நடத்த வருவார் என்ற நம்பிக்கையோடு நாங்கள் இருக்கிறோம்.
எனவே, வேலுப்பிள்ளை என்கின்ற அந்த மாமனிதர் நேர்மை நாணயம் ஒழுக்கம் இவற்றுக்கு இலக்கணமாக வாழ்ந்த அவரை இழந்து இருக்கின்ற வேளையில் பார்வதி அம்மையாரின் துக்கத்தை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. என் உள்ளம் நடுங்குகிறது. என் உள்ளம் வேதனைத் தணலில் வாடிவதங்குகிறது. ஆகவே, இந்த வேளையில் என் அருமைத் தமிழ் ஈழ உறவுகளே கண்ணீர் சிந்துகிறேன். என் வேதனையை என் வீரவணக்கத்தை அந்த மாவீரர் திலகத்தை தரணிக்குத்தந்த அந்த உத்தமர் பண்பாளர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் பூதஉடலுக்கு என்னுடைய வீரவணக்கத்தை அலைகடலுக்கு அப்பாலே இருந்து தாய்த் தமிழகத்தின் தாய்மண் மடியிலே இருந்து இந்த வேளையில் தெரிவிக்கின்றேன்.
உத்தமர் வேலுப்பிள்ளை மறைந்துவிட்டார். நம் மனங்களில் என்றும் மறையமாட்டார். தமிழர்களின் தியாக வரலாற்றில் ஈழத்தமிழர்களின் தியாகவரலாற்றில் வேலுப்பிள்ளையின் பெயர் நிரந்தரமாக இடம்பெற்று இருக்கும். தமிழ் ஈழ மக்களே! உங்களுக்கு இந்த நானிலத்தில் நாதி இல்லை என்று கருதாதீர்கள். நாங்கள் இருக்கிறோம். இனி வளர்கிற தலைமுறை உங்களுக்குத் துணையாக இருக்கும். என்றைக்கும் எந்தத் தியாகத்துக்கும் நாங்கள் தயாராக இருப்போம். உங்கள் துன்பத்தைத் துடைப்பதற்கு நாங்களும் போராடுவோம். நாங்களும் அத்தனை வேதனைகளையும் தாங்கிக்கொள்ள தயாராக இருக்கிறோம்.
ஆகவே, திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் புகழ் வாழ்க! எனச் சொல்லி என் கண்ணீர் அஞ்சலியை நான் என் தாய்த் தமிழகத்து மக்கள் சார்பில் அவருடைய காலடியில் வைக்கின்றேன்.
வெல்க தமிழ் ஈழம்! மலர்க தமிழ் ஈழம்! அந்த ஒன்றே நமக்கு விடியல்!”
இவ்வாறு வைகோ அவர்கள் இரங்கல் உரை ஆற்றினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Thirukkural திருக்குறள் Holykural
Kural குறள் - 533
பொருட்பால் - பொச்சாவாமை
எப்பால் நூலோர்க்கும் துணிவு.
Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.
Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.