* புராதன, சரித்தரப் புகழ்பெற்ற ஈழத்தமிழர் தலைநகர் திருகோணமலையில் தமிழர் 3வது இடத்தில்.
* துரோகப்பட்டியல் சேர்ப்பதில் தமிழன் நேரத்தை வீணடிப்பு
* ஒட்டு மொத்தத்தில் இன்னும் 20 வருடங்களில் தமிழர் பூர்வீகத்தாயகம் ஈழம் செத்துவிடும். அதாவது தமிழர்களைப் பெரும்பாண்மையாக கொண்ட எந்த மாவட்டமும் ஈழத்தில் இருக்காது.
இந்த யதார்த்தத்தை உணர்ந்து இராஐதந்தரத்தடன் செயலாற்ற ஈழத்தமிழினம் ஒன்றுபடுமா?!
தமிழீழ தனியரசு – கனவு, விரும்பம், யதார்த்தம். - இரா.துரைரத்தினம்

அண்மைய நாட்களில் நான் எழுதிய கட்டுரைகள் அனைத்தையும் வாசித்ததாகவும் தாங்கள் வெளியிட்ட அறிக்கையை ஒருமுறை வாசிக்கும் படியும் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளரும், தற்போது அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் யாழ். மாவட்ட வேட்பாளர்களில் ஒருவருமான என்னுடைய நெருங்கிய நண்பர் கெனடி மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருந்தார்.
திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய தேர்தல் மாவட்டங்களில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு தோற்கடிக்கப்படல் வேண்டும். அதுவே தமது நோக்கம் என்றும் அவர்கள் தமது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் அறிக்கை வெளியிடப்பட்ட மறுநாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பதில் அறிக்கை வெளிவந்திருக்கிறது.
தேசம், தேசியம், இறையாண்மை, சுயநிர்ணய உரிமை எதனையும் விடவில்லை. ஆனால் தந்திரோபாயமாக இன்றிருக்கும் எமக்கு சாதகமாக சர்வதேச சூழலைப் பயன்படுத்தி தீர்வைக்காண முயற்சிக்கின்றோம் என்றும் பிளவு படாத இலங்கைக்குள் தமிழ் மக்களின் தேசம் அவர்களின் இறையாண்மை, சுயநிர்ணய உரிமை என்பவற்றை கைவிடாத நிலையில் தமிழ் மக்களுக்கான தீர்வு ஒன்றை சமாதான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் பெறலாம் என்ற நம்பிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டிருக்கிறது.
அறிக்கை போர் ஆரம்பித்திருப்பதை பார்க்கும் போது இந்த இருதரப்பும் நடைபெறப்போகும் தேர்தல் பிரசாரங்களில் தங்களுக்கிடையில்தான் மோதிக்கொள்ளப்போகிறார்கள் என்பது புரிகிறது.
சிங்களப் பேரினவாதிகள் வடக்கு கிழக்கில் தமது வேட்பாளர்களை நிறுத்தியிருப்பதுடன் தங்களுக்கு கிடைக்காமல் தமிழ் கட்சிகளுக்கு செல்லும் வாக்குகளை சிதறடிப்பதற்காக வரலாற்றில் இல்லாத அளவிற்கு சுயேச்சை அணிகளை நிறுத்தியிருக்கும் இவ்வேளையில், ஒற்றுமையாக இருந்து தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டிய இவர்கள் தங்களுக்குள்ளேயே மோதி பலவீனப்பட்டுக்கொள்வது எதிரிக்கு மிகவும் சாதகமான சந்தோசமான விடயம் தான்.
இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்றும், தமிழ் காங்கிரஸ் என்றும் தங்களுக்குள் மோதிக்கொள்வது எந்த வகையிலும் தமிழ் மக்களுக்கு ஒரு வீதம் கூட சாதகமான விளைவை தரப்போவதில்லை. அதற்கு மாறாக சிங்கள பேரினவாத கட்சிகளில் போட்டியிடுபவர்களின் வெற்றி வாய்ப்பைத்தான் இவர்கள் உறுதி செய்கிறார்கள்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு ஏற்பட்ட தோல்வியினால் சோர்வடைந்திருந்த மகிந்த ராசபக்சவின் பிரகிருதிகளான டக்ளஸ், கருணா, பிள்ளையான், போன்றவர்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தமிழ் காங்கிரஸ் பிரிந்து சென்றது அவர்களுக்கு நெஞ்சில் பாலை வார்த்திருக்கிறது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் தமிழீழத்தை தவிர வேறு எதையும் பெறப்போவதில்லை என்று திட்டவட்டமாக கூறிவருகின்றனர். அந்த உறுதி பாராட்டப்பட வேண்டியதுதான். ஆனால் அதற்கு முதல் தமிழீழ தனியரசை எந்த வழியில் பெறப்போவதாக அவர்கள் மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும். அதன் பின்னரே அவர்கள் மக்களிடம் வாக்கு கேட்பதே நியாயமாகும்.
வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையில் தமிழீழ தனியரசை அமைப்பதற்கு தமிழ் மக்களிடம் அங்கீகாரம் கோரி 1977ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிட்டது. உங்கள் வாக்குகளை தாருங்கள் நாங்கள் தமிழீழத்தை பெற்றுத்தருகிறோம் என மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஊட்டியிருந்தனர். அவர்கள் எந்த வழியில் தமிழ் ஈழத்தை பெறப்போகிறோம் என்று மக்களுக்கு சொல்லவில்லை. அப்போது 19வயது இளைஞனாக இருந்த நானும் எங்கள் தலைவர்கள் தமிழீழத்தை பெற்றுத்தருவார்கள் என்ற நம்பிக்கையில் பருத்தித்துறையிலிருந்து சுண்டிக்குளம் வரையும் பாதயாத்திரையாக சென்று தேர்தல் பிரசாரங்களை செய்திருந்தோம். அந்த நேரத்தில் எங்களுடன் சந்ததியாரும் வந்திருந்தார். நாங்கள் யாரும் அந்த நேரத்தில் தமிழ் தலைவர்களைப் பார்த்து எந்த வழியில் தமிழீழத்தை பெற்றுத்தருவீர்கள் என்ற கேள்வி கேட்க துணியவில்லை.
ஆனால் வெற்றிபெற்ற கையோடு அவர்கள் தமிழீழத்தை பெற்றுக்கொண்டு வருவதாக சென்றவர்கள் சென்றதுதான்.
அதன் பின்னர் ஆயுதப் போராட்டத்தின் மூலம் தமிழீழத்தை பெற முடியும் என நடத்தப்பட்ட போராட்டமும் கடந்த மே 19 ம் திகதியுடன் பெரும் அவலத்துடன் முடிவடைந்திருக்கிறது.
மேற்குலக நாடுகளில் வாழும் தமிழர்கள் பலர் தமிழீழ கனவுடன் வாழ்ந்து வருகின்றனர். இது அவர்களின் கனவு, விரும்பம். அந்த கனவுகளை கலைப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை.
ஆனால் அதற்காக யதார்த்தமும் அதுதான் என சொல்லமுடியாது.
பில்கேட்ஸ் போல ஒரு பணக்காரனாக வரவேண்டும் என்பது தான் எனது கனவும் விரும்பமும். ஆனால் யதார்த்தம் அதுவல்ல. மாதத்தில் 25 நாட்களுக்கு மேல் எனது வங்கிக்கணக்கு மைனசாகத்தான் இருக்கும்.
இதை நான் சொல்கின்ற போது பலர் எனக்கு துரோகி பட்டம் தருவதற்கு தயாராகலாம். அதற்காக யதார்த்தத்தை உண்மையை சொல்லாமல் மறைக்க முடியாது
வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசம், தமிழர் தாயகம், அதை மீட்டெடுப்போம் என நாங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால் நாங்கள் தமிழர் பிரதேசம் என சொல்லுகின்ற பிரதேசம் தமிழர்களின் கைகளில் இருக்கிறதா? உண்மையில் கிழக்கு மாகாணம் முக்கியமாக தமிழீழத்தின் தலைநகர் என்று சொல்லும் திருகோணமலையில் தமிழர்களின் நிலை என்ன என்பதை இந்த படத்தை பாருங்கள்.
கிழக்கு மாகாணம் எவ்வாறு பறிபோயிருக்கிறது. கிழக்கு மாகாணம் மட்டுமல்ல வடமாகாணத்தின் பெரும்பகுதியும் இன்று தமிழர்களிடம் இல்லை என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோமா?
உடுத்தால் நீங்கள் காஞ்சிபுரம் பட்டுச்சேலையைத்தான் உடுக்க வேண்டும். நாங்கள் அதை வாங்கித் தருவோம். அதுவரைக்கும் நீங்கள் அம்மணமாகத்தான் இருக்க வேண்டும் என்று இங்கு சொல்லிக்கொண்டிருக்கிறோம். வெயிலிலும் குளிரிரும் வெந்து கொண்டு இருக்கும் எமது உறவுகளுக்கு சுற்றிக்கொள்வதற்காக ஒரு அடையாவது அவர்கள் பெற்றுக்கொள்வதை நாம் தடுக்க வேண்டுமா?
வடகிழக்கு மாகாணத்தின் உண்மையான இன்றைய நிலை என்ன, அது இன்னமும் தமிழர் பிரதேசமாக உள்ளதா? அதிர்ச்சியும் வேதனையும் தரும் அந்த விபரங்கள் விரைவில்.....
இரா.துரைரத்தினம்
thurair@hotmail.com
is that so.
ReplyDeleteYes we must fight on,
what we all did, accross the world,
last year was just the beginning
kavin robert
London England