தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் மக்கள் தங்கியுள்ள அகதி முகாமில் தங்கியிருந்த பெண் மீது தமிழக காவல்துறையினர் மேற்கொண்ட பாலியல் துன்புறுத்தல்களை தொடர்ந்து தற்கொலைக்கு முயன்ற அந்த பெண் வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
தமிழகத்தில் உள்ள கரூர் பகுதியில் உள்ள ஈழத்தமிழ் மக்கள் தங்கியுள்ள முகாமில் உள்ள பெண்ணை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற தமிழக காவல்துறையினர் அவர் மீது பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டிருந்தனர்.
காவல்நிலையத்தை சேர்ந்த 3 காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்ட இந்த துன்புறுத்தல்களால் மயக்கமடைந்த பெண்ணை அவர்கள் முகாம் பகுதியில் அனாதரவாக கைவிட்டு சென்றிருந்தனர்.
காவல்துறையினரின் இந்த நடவடிக்கையால் மனமுடைந்த குமார் பத்மதேவி (28) என்ற ஈழத்தமிழ் பெண் தனக்கு தனே தீமூட்டி தற்கொலை செய்ய முயன்றிருந்தார். எனினும் அயலவர்களால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் (28) வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.
தன்னை தனியார் வீடு ஒன்றிற்கு அழைத்துச் சென்ற தமிழக காவல்துறையினர் பலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டதாகவும், அதனை வெளியே தெரிவித்தால் தனது கணவனை சுட்டு கொன்றுவிடுவதாகவும் மனித உரிமை செயற்பாட்டாளர்களிடம் பத்மதேவி தெரிவித்தள்ளார்.
இதனிடையே பத்மதேவியின் உடலை காவல்துறையினர் தகனம் செய்யக்கூடாது என்ற கோரிக்கைகளை மனித உரிமை செயற்பாட்டாளர்கள் விடுத்த போதும் அதனை அவர்கள் பொருட்படுத்தாதது அதிக சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.
ஈழத்தமிழ் மக்களை தீண்டத்தகாதவர்களாக நடாத்திவரும் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு அகதிகளாக சென்றுள்ள அப்பாவி மக்கள் மீது பல தரப்பட்ட வன்முறைகளை அண்மைக்காலமாக மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.