
ஈழத்தமிழர்கள் இதுவரை காலமும் கட்டிக்காத்து வந்த இசை நடன மரபுகள் எவை? பொதுப்பரப்பில் நம்மவர்கள் எதனை மிகுதியாக தமது பண்பாட்டடையாளமாக கற்கின்றனர்? கர்நாடக இசையும், பரதநாட்டியமும் இன்றுவரை நம்மவர்களின் கைகளில் வீச்சுடனும் ஆழத்துடனும் வெளிப்பட்டுள்ளது. இத்தகைய ஒரு பகைப்புலத்தில் ஈழத்தமிழர்களின் மரபான இசைபற்றியும் நடனம்பற்றியும் நாம் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம். இசையிலுள்ள ஒத்திசை, ஒழுங்கு, இராகம் என்பன பண்பாட்டுக்கு பண்பாடு வேறுபடும். ஒவ்வொரு இனத்தினிடையேயும் இது தமக்கான தனித்துவமான பண்புகளைக் கொண்டிருக்கும். ஈழத்தமிழினமும் தனக்கான இசைமரபையும் பல தனித்துவமான பண்புகளையும் கொண்டுள்ளது.
பண்பாட்டு அடிப்படையில் தமிழ்நாட்டோடு ஈழத்தமிழர்கள் நெருக்கமான தொடர்புகளையும் அடிப்படையான சில ஒற்றுமைகளையும் பெற்றிருந்தாலும், தமிழ்நாட்டிலிருந்து வேறுபட்ட தனித்துவமான பல பண்பாட்டு அடையாளங்களை ஈழத்தமிழ்ச் சமூகம் பெற்றுள்ளது. அதில் இசையும், நடனமும் முக்கிய ஒரு கதையாடலாக உள்ளன. இசை ஈழத்தமிழர்கள் மத்தியில் நம்பிக்கைகள் சார்ந்து கிராமிய வழிபாட்டு முறைகளோடு இணைந்ததாகவும், அதே நேரத்தில் இவற்றையெல்லாம் கடந்து வாழ்வியலோடு நெருக்கமான தொடர்புடையதாகவும் உள்ளது. தமிழிசை மரபின் அறாத் தொடர்ச்சியான ஒரு நீட்சியையே நாம் நமது மரபிலும், இசைமரபிலும் காணமுடிகின்றது.
சுவாமி விபுலானந்தர் யாழ்நூலை ஆக்கியதற்கான அடிப்படை ஈழத்தமிழர்களிடையே மரபினடிப்படையில் நீண்டிருந்த இசை மரபின் தாக்கமே என்பதை நாம் இங்கு மனங்கொள்ள வேண்டும். அவருடைய இளமைக்காலத்தில் அவர் காதுகளில் ஒலித்த கண்ணகி குளிர்த்தியும், வசந்தன் பாடல்களும், கூத்திசையும் அவரது இசைபற்றிய ஆராச்சிக்கான அடித்தளமாக அமைந்தன. ஈழத்தமிழர்களின் பராம்பரியமான தாயகப் பிரதேசங்களான வடக்கிலும் கிழக்கிலும் இன்றுவரை இந்த இசைமரபின் பயில் நிலையை நாம் அவதானிக்க முடியும். இலங்கையில் உள்ள சிங்கள சமூகம் வடஇந்திய இசைமரபோடு நெருக்கமான தொடர்பை கொண்டிருந்த போதிலும் அறுபதுகளுக்கு பின்பு ஏற்பட்ட சிங்கள தேசிய எழுச்சி தங்களுக்கான பண்பாட்டு அடையாளங்களை கட்டமைக்க தொடங்கியது. அவர்களது வண்ணமும், கவியும் பல்வேறு கிராமிய இசைமரபுகளும் இன்றைய சாஸ்திரிய சங்கீதத்திற்கு அடிப்படைகளாக அமைந்தன. இதன் வாரிசுகளாக நாம் அமரதேவா, ஹேமதாச போன்றோர்களை இனங்காண முடியும். ஆனால் ஈழத்தமிழர்களின் இசைமரபுகள் இன்னமும் சாஸ்திர மயப்படாமல் மக்கள் இசையாகவே வழக்கில் உள்ளன.
போராசிரியர் வித்தியானந்தன் ஈழத்து பாரம்பரிய இசை மீட்டுருவாக்கத்திற்கு பல ஆரம்ப முயற்சிகளை மேற்கொண்டார். அவரது முயற்சினால் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் அனுசரணையோடு ஈழத்து பாரம்பரிய இசை மரபுகள் பற்றிய இசைத்தட்டு வெளியிடப்பட்டது. அவரது இந்த முயற்சி இசைத்தட்டு வெளியீட்டுடன் நின்றுவிட்டது. அடுத்த கட்டத்திற்கு அது எடுத்துச் செல்லப்படவில்லை. பின்னைய நாட்களில் அதாவது தொண்ணூறுகளின் பிற்பகுதியில் கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறை ஈழத்து இசைமரபை மாணவர்களது கல்வி முறைமைக்குள் இணைத்து செயற்பாடாக்கியது. பல்கலைக்கழகம் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் தொலைக்காட்சி தயாரிப்புகளிலும் இசைமரபின் தொடர்ச்சியை வெளிப்படுத்தியது. குறிப்பாக கண்ணகி குளிர்த்தி, கிழக்கிசை, லயம், ஆகிய நிகழ்ச்சிகள் ஈழத்தமிழரின் இசைமரபின் தொடர்ச்சியை அதன் மீட்டுருவாக்கத்திற்கான அடிப்படைகளைத் தந்துள்ளன. இதுபோலவே திருமறைக் கலாமன்றம் யாழ்ப்பாண கூத்துப்பாடல்களையும் இசைநாடகப் பாடல்களையும், வசந்தன் பாடல்களையும் நிகழ்த்துகைகளாகவும் அண்மைய நாட்களில் ஒலி ஒளி இறுவட்டுகளாகவும் வெளியிட்டு ஆவணப்படுத்தி உள்ளது.
ஈழத்தமிழர்களின் தனித்துவமான இசைமரபுகள் என நாம் அடையாளம் காணக்கூடியவையாக: கரகம், கும்மி, மழைக்காவியம், ஒப்பாரி, வயல்பாடல்கள், அம்பா பாடல்கள், கவி, ஊஞ்சல் பாடல்கள், குளிர்த்திப்பாடல்கள், உடுக்கடி காவியம், காத்தவராயன் பாடல்கள், கோவலன் கதைப்பாடல்கள், கண்ணகி வழக்குரை, மாரியம்மன் நடை, மந்திர உச்சாடன முறைகள், கூத்திசைப்பாடல்கள், ஆட்டக்காவடி இசை, நடைக்காவடி இசை, வேடிக்கைப்பாடல்கள், இஸ்லாமியரின் கல்யாணப்பாடல்கள், பக்கீர் பாடல்கள், கிறிஸ்தவர்களின் சிலுவைப்பாடுகள் பற்றிய பாடல்கள் என நீண்டு செல்லும். இந்த இசைமரபு தங்களுக்கான தனித்துவமான தாள ராக ஒத்திசைவுகளைக் கொண்டுள்ளன. இந்த இசைமரபில் இணைந்திருக்கின்ற இசைக் கருவிகள் முக்கியமானவை. உடுக்கு: உடுக்கு இரண்டு வகைப்படும். வெங்கல உடுக்கு எனப்படும் பெரிய உடுக்கு மர உடுக்கு, தேங்காய் சிரட்டைகள் இணைந்த உடுக்கு என இரண்டு வகைப்படுத்தலாம். இதனோடு பறைமேளம்: பறைமேளத்திலும் நாம் இரண்டு வகையை நாம் அவதானிக்கலாம். சங்க இலக்கியத்தில் சொல்லப்படுவதுபோல சிறுபறை, பெரும்பறை இந்தப் பாகுபாட்டை நாம் ஈழத்திலும் காணலாம். பறையோடு இணைந்து வருகின்ற சொர்ணாளி ஈழத்திசையில் குழல் வாத்தியமாக உள்ளது. சல்லரி எனப்படும் தாளம், சிலம்பு, தாளமாங்காய், மத்தளம், கொட்டு, சங்கு என இவற்றை வகைப்படுத்திக் நாம் விளங்கிக்கொள்ள முடியும்.
இன்று நம்மத்தியில் இசைவாணர்களும் இசை விற்பனர்களும் உள்ளனர். நாம் கர்நாடக இசையையே நம்மிசையாக கருதி அதனையே நம் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கின்றோம். ஆனால் நம் இசைமரபை மறந்துபோயுள்ளோம். வெறும் தெலுங்கு கீhத்தனைகளை பயிலுகின்ற நாம் நம் எதிர்காலச் சந்ததியினருக்கு நம்மிசை மரபை கற்றுக்கொடுக்க வேண்டும். புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ்ப் பாடசாலைகள் இதில் தீவிர கவனம் கொள்ள வேண்டும். அத்துடன் நமது பல்கலைக்கழகங்கள் இதில் அக்கறையோடு செயல்பட்டு கல்விப் பாடத்திட்டத்தில் ஒரு அங்கமாக இதனையும் இணைக்க வேண்டும். புலம்பெயர்ந்த வெளிநாடுகளில் இயங்குகின்ற ஈழத்தமிழர்கள் இதில் காத்திரமாக பங்களிப்பு செய்யமுடியும்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.